Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுந்தர் பிச்சையை சீண்டும் டொனால்டு டிரம்ப்: "கூகுள் நிறுவனத்தை கூர்ந்து கவனிக்கிறோம்"

சுந்தர் பிச்சையை சீண்டும் டொனால்டு டிரம்ப்:
, வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (20:01 IST)
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையுடனான சந்திப்பையும், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவரின் கூற்றையும் தொடர்புபடுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதற்கு பின்னால் சமூக ஊடகங்கள், இணையதளங்களில் பரப்பப்பட்ட போலிச் செய்தி மற்றும் ரஷ்யா உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்பதை உறுதிசெய்வதற்கு கூகுளின் உயரதிகாரிகள் முயற்சித்து வருவதாக அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கூறியுள்ளது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான கெவின் செர்னிகீ, கூகுள் நிறுவனத்தின் உயரதிகாரிகள் 'தங்களது ஒட்டுமொத்த அதிகாரம் மற்றும் பலத்தை கொண்டு, மக்கள் பார்க்கும் தகவல்களை கட்டுப்படுத்தி, அடுத்தாண்டு தேர்தலில் டிரம்ப் தோற்பதை உறுதி செய்ய வேண்டும்' என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
webdunia

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் சீனாவுடனான உறவு குறித்து கூகுள் மீது குற்றச்சாட்டு வைத்து வரும் டிரம்ப், இந்த முறை சுந்தர் பிச்சையுடனான சந்திப்பை இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தியுள்ளார்.

"கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை என்னை வெள்ளைமாளிகையில் சந்தித்தபோது, அவர் என்னை எவ்வளவு விரும்புகிறார், என்னுடைய நிர்வாகம் எப்படி அருமையாக செயல்படுகிறது என்பதை விவரிப்பதற்கு மிகவும் முயற்சி செய்தார். அதுமட்டுமின்றி, சீனாவுடனும், 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் சட்டவிரோதமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடும் திட்டமில்லை என்றும் விளக்கினார்" என்று தனது ட்விட்டர் பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் அடுத்ததாக வெளியிட்டுள்ள பதிவில், "கூகுளின் முன்னாள் ஊழியர் கெவினின் பேட்டியை பார்க்கும் வரை நான் இவை எல்லாவற்றையும் நம்பினேன்" என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், அதன் பிறகு கெவினின் குற்றச்சாட்டை குறிப்பிட்டதுடன், 'நாங்கள் கூகுளை கூர்ந்து கவனிக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்றத்திலிருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முறை டிரம்ப் - சுந்தர் பிச்சை இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. எனினும், இந்த ட்விட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ள சந்திப்பு எப்போது நடந்தது என்பதில் தெளிவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து: "ஆழ்ந்த கவலையைத் தருகிறது"