இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஈடுபட்டவர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும் காஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் இவரே முக்கியப் பங்கு வகித்தார்.
இந்தியா சுதந்திரம் பெறும்போது, காஷ்மீரை ஆண்ட மன்னர்கள் டோக்ரா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வம்சத்தைச் சேர்ந்த ராஜா ஹரி சிங் காஷ்மீரின் அரசராக இருந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் வலியுறுத்தலின் பேரில் பிரதம அமைச்சர்களை நியமிக்கும் வழக்கம் துவங்கியது.
1927ல் முதன் முதலாக கொல்கத்தாவைச் சேர்ந்த ஐசிஎஸ் அதிகாரியான சர் அல்பியன் பானர்ஜி பிரதமராக நியமிக்கப்பட்டார். 1929 வரை இவர் காஷ்மீரின் பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில் இந்தப் பதவிக்கு ஒரு திவானுக்குரிய அதிகாரங்களே இருந்தன. நிர்வாகத்தில்கூட பெரிதாக தலையிட முடியாத நிலையே இருந்தது.
இந்தக் காரணங்களால், 1929ல் தனது பதவியை அல்பியன் பானர்ஜி ராஜினாமா செய்தார். "தற்போதுள்ள அரசு மக்களின் தேவைகள், கஷ்டங்கள் குறித்து எவ்வித கரிசனமும் காட்டவில்லை" என்று குறிப்பிட்டுவிட்டு, அவர் ராஜினாமா செய்தார்.
இந்த வரிசையில்தான் 1937ல் என். கோபாலசாமி அய்யங்கார் காஷ்மீரின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 1943வரை இந்தப் பதவியில் அவர் நீடித்தார்.
இதற்குப் பிறகு மாநிலங்களவைக்குத் (Council of States) தேர்வுசெய்யப்பட்டவர், 1946ல் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட அவையில் இடம்பெற்றார். அதன் பின் 1947 ஆகஸ்ட் 29ஆம் தேதி உருவாக்கப்பட்ட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிலும் இடம்பெற்றார் அய்யங்கார்.
கோபாலசாமியின் பின்னணி என்ன?
அந்நாளைய சென்னை மாகணத்தில் இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 1882 மார்ச் 31ஆம் தேதி பிறந்தார் கோபாலசுவாமி.
பள்ளிப் படிப்பை வெஸ்லி பள்ளிக்கூடத்திலும், கல்லூரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியிலும், சட்டக்கல்லூரியிலும் முடித்தார்.
இதற்குப் பிறகு ஒரு சிறிது காலம் 1904ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
1905ஆம் ஆண்டில் மெட்ராஸ் குடிமைப் பணித் தேர்வில் இணைந்தார் அய்யங்கார். 1919 வரை துணையாட்சியராகவும் 1920லிருந்து மாவட்ட ஆட்சியராகவும் அவர் பணியாற்றினார்.
1932ல் பொதுப் பணித் துறையில் செயலராக உயர்ந்தார் அவர். அதற்குப் பிறகு வருவாய் வாரியத்தின் உறுப்பினராக 1937வரை பணியாற்றினார்.
இதற்குப் பிறகுதான் 1937ல் ஜம்மு - காஷ்மீரின் பிரதமராக நியமிக்கப்பட்டார் கோபாலசாமி. காஷ்மீரைப் பொறுத்தவரை 1965ஆம் ஆண்டுவரை அம்மாநிலத்திற்கென தனியாக பிரதமரும் சதரே - ரியாசட் என்ற பதவியும் இருந்தன.
இதில் சதர் - ஏ ரியாசட் என்பது ஆளுனருடைய பதவிக்கு இணையானது. ஆனால், பிரதமர் என்ற பதவியின் அதிகாரம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதங்களில் இருந்துவந்தது.
கோபாலசாமியின் காலகட்டத்தில் அவர் மிகக் குறைந்த அதிகாரத்துடனேயே, அதாவது ஒரு தலைமை நிர்வாக அதிகாரி என்ற விதத்திலேயே பிரதமர் பதவியை வகித்துவந்தார்.
370வது பிரிவைச் சேர்த்ததில் கோபாலசாமியின் பங்கு
1943ல் பிரதமர் பதவியைவிட்டு விலகினாலும் காஷ்மீர் உடனான அவரது தொடர்புகள் விட்டுப்போகவில்லை. இந்தியா காஷ்மீருடன் இணைந்த பிறகு, பிரதமர் நேருவே காஷ்மீர் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை வைத்திருந்தார்.
ஆனால், நேரடியாக அவற்றில் ஈடுபடாமல் மத்திய அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த கோபாலசாமி அய்யங்காரிடம் காஷ்மீர் விவகாரங்களை கவனித்துக்கொள்ளும்படி கூறினார் நேரு.
சமஸ்தானங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்படும் பணியைக் கவனித்துவந்த மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இந்த நடவடிக்கையால் வருத்தமடைந்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் 'உறுப்புரை 370' எழுதப்பட்டதும், அதற்கு அரசியல் நிர்ணய சபையில் ஒப்புதல் பெறும் பொறுப்பு கோபாலசாமி அய்யங்காரிடம் வழங்கப்பட்டது.
இது குறித்து நேருவிடம் கேள்வியெழுப்பினார் படேல்.
அதற்குப் பதிலளித்த நேரு, "காஷ்மீர் விவகாரங்களில் உதவும்படி கோபாலசாமி அய்யங்காரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. காஷ்மீர் விவகாரங்களில் அவருக்குள்ள அனுபவம், ஆழ்ந்த அறிவு ஆகியவற்றுக்காகவே அவருக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும். கோபாலசாமி அய்யங்காரை அணுகும்விதம், ஒரு சகாவை அணுகும் விதத்தைப்போல இல்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார் நேரு.
இது, கோபாலசாமி அய்யங்காரை அவர் எவ்வளவு தூரம் இந்த விவகாரங்களில் சார்ந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது.
ஆனால், அரசியல் சாசன அவையில் 370வது பிரிவுக்கு ஒப்புதல் பெறுவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை.
இதற்குப் பிறகு, இந்த விவகாரம் ஐ.நாவின் பாதுகாப்புக் கவுன்சிலுக்குச் சென்றபோது இந்தியாவின் சார்பில் பேசுவதற்கு கோபாலசாமி அய்யங்கார் தலைமையில்தான் இந்தியக் குழு அங்கே சென்றது. அப்போது அவர் மத்திய அமைச்சராக இருந்தார்.
மக்களைக் காக்கவே இந்திய ராணுவம் உள்ளே நுழைந்ததென விளக்கிய அவர், அங்கே அமைதி திரும்பிய பிறகு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் கூறினார்.
பாகிஸ்தான் சார்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச வந்த ஜஃபருல்லா கானுடன் கடுமையாக மோதினார் அய்யங்கார். பழங்குடியினர் தாங்களாக காஷ்மீருக்குள் வரவில்லை. அவர்கள் கையிலிருந்த நவீன ஆயுதங்கள் பாகிஸ்தான் ராணுவத்தினுடையன என்பதற்கான வாதங்களை முன்வைத்தார்.
கோபாலசாமி அய்யங்கார் இறந்தபோது, நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நேரு, அவர் காஷ்மீரின் பிரதமராக இருந்த காலகட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.
"அவர் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஜம்மு - காஷ்மீரின் பிரதமராக இருந்திருக்கிறார். அவை மிகக் கடினமான ஆண்டுகள். யுத்தம் நடந்துகொண்டிருந்த ஆண்டுகள்" என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராக ஒரு வருடம் பணியாற்றியிருக்கிறார் அவர்.
இவருடைய மனைவியின் பெயர் கோமளம். இவர்களின் மகனான ஜி. பார்த்தசாரதி புகழ்பெற்ற பத்திரிகையாளர். ஐ.நாவில் இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர்.
1953 பிப்ரவரி பத்தாம் தேதி தனது 71வது வயதில் சென்னையில் காலமானார் கோபாலசாமி அய்யங்கார்.