Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிட் 19 பூஸ்டர் தடுப்பூசி பலன் தருகிறதா? ஆய்வு சொல்லும் 7 விஷயங்கள் என்ன?

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (12:42 IST)
கொரோனா தொற்று விவகாரத்தில் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவு ஒன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது. ' தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் உடம்பில் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என இருக்கையில், இந்த ஆய்வின் மூலம் கூடுதல் தடுப்பூசி எடுத்த 77 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது பூஸ்டர் தடுப்பூசி டோசின் திறனை கேள்விக்குள்ளாக்கியுள்ளது' என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
 
1.48 கோடிப் பேர் ஏன் செலுத்தவில்லை?
 
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாள்களாக படிப்படியாக அதிகரித்து வந்தது. சென்னை ஐ.ஐ.டி. மிகப் பெரிய தொற்றுத் தொகுப்பு (கிளஸ்டர்) உருவானது. தற்போது வரையில் அங்கு 198 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 'இது நான்காம் அலைக்கான தொடக்கமா?' என்ற கேள்வியும் எழுந்தது.
 
மேலும், தடுப்பூசி தொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று (மே 1) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 'மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களை வற்புறுத்த முடியாது. தமிழ்நாட்டில் நாற்பது லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. இரண்டாம் தவணை தடுப்பூசியை 1.48 கோடி பேர் செலுத்திக்கொள்ளவில்லை. பூஸ்டர் தடுப்பூசியை 10 லட்சம் பேர் செலுத்திக் கொள்ளவில்லை. இவர்களை மெசேஜ் மற்றும் தொலைபேசி வாயிலாக தொடர்பு தடுப்பூசி செலுத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
 
அதேநேரம், பூஸ்டர் தடுப்பூசி தொடர்பாக இந்திய மருத்துவக் கழகத்தின் தேசிய பிரிவின் (கொரோனா தொடர்பு) இணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் ஜெயதேவன் மேற்கொண்ட ஆய்வு, விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 10 ஆம் தேதிக்கு வரை ஆறாயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அறிவியல் சஞ்சிகை ஒன்றில் இந்தக் கட்டுரை வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
பூஸ்டர் தடுப்பூசி பலன் கொடுக்கிறதா?
இந்த ஆய்வின் மூலம், கொரோனா தொற்றுக்கு எதிரான கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசியால் பெருமளவு பயனே இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன் கூறியுள்ளார். மேலும், ' கூடுதல் தடுப்பூசியின் ஆரம்ப கட்டத்தில் (அதாவது 2 வாரத்துக்குள்)சிறு அளவில் பாதுகாப்பைக் கொடுத்தாலும், இரண்டு வாரங்கள் கழிந்தபின் பெருமளவு பயனளிக்கவில்லை எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக நோயின் தீவிரத்தை பொறுத்தமட்டில் கூடுதல் தடுப்பூசி எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் ஒரே மாதிரியாக உள்ளது எனவும் மருத்துவர் ராஜிவ் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஆய்வில் கலந்து கொண்டவர்களில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 716 பேர் மத்தியில் மத்தியில் மிதமான நோய்த் தாக்குதல் என்பது 58.5 சதவீதமாகவும் நடுத்தர பாதிப்பு 37 சதவீதமாகவும் தீவிர பாதிப்பு என்பது 0.3 சதவீதமாகவும் இருந்துள்ளது. கூடுதல் தடுப்பூசி எடுக்காத 1577 பேரிடம் செய்த ஆய்வில் மிதமான பாதிப்பு என்பது 50.8 சதவீதமாகவும் நடுத்தர பாதிப்பு 37 சதவீதமாகவும் தீவிர பாதிப்பு 0.76 சதவீதமாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
அரசு ஏன் தீவிரம் காட்டுகிறது?
''தடுப்பூசி எடுத்தவர்கள் மத்தியில் ஒருவேளை நோய் வராமல் இருந்ததற்குக் காரணம், தடுப்பூசி பாதுகாப்பு இல்லாமல், முகக்கவசம் அணிந்ததால்கூட இருந்திருக்கும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோயின் பாதிப்பு என்பது 0.3 சதவீதமாகவும் செலுத்தாவிட்டால் 0.76 சதவீதம் என தீவிர நோய் பாதிப்பு 1 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது என்பதிலிருந்து பூஸ்டர் தடுப்பூசியால் பெரிய பயனில்லை என்பது ஆய்வின் மூலம் தெளிவாகிறது'' என்கிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தை நடத்தி வரும் மருத்துவர் கல்பாக்கம் வீ.புகழேந்தி.
மேலும், '' இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மத்தியில் கொரோனா நோய்த் தொற்று 27 சதவீதமாக இருப்பதும் கூடுதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மத்தியில் நோய்த் தொற்று 30 சதவீதமாக உள்ளது என்பதிலேயே கூடுதல் தடுப்பூசியால் பலன் உண்டா என்பதை அறியலாம்'' என்கிறார் அவர்.
 
''60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடுவதால் நோயின் தீவிரம் குறையும் என எதிர்பார்த்த நிலையில், அது இல்லை எனவும் இந்த ஆய்வில் உறுதியாகியுள்ளது. பிறகு ஏன் கூடுதல் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த அரசு தீவிரம் காட்ட வேண்டும்?'' எனவும் புகழேந்தி கேள்வியெழுப்புகிறார். தொடர்ந்து கூடுதல் தடுப்பூசி தொடர்பான ஆய்வின் விவரங்களையும் அவர் பட்டியலிட்டார்.
 
ஆய்வில் வெளிவந்த 7 காரணங்கள்
 
1. மக்கள் கூடுதல் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்குப் பிரதானமான காரணம், தடுப்பூசி எடுத்தாலும் ஓமிக்ரான் கொரோனா தொற்று பெரும்பாலானோருக்கு வரத்தான் செய்கிறது என்பது.
 
2. ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி வழியாக பாதுகாப்பு இருக்கும்போது தடுப்பூசி அவசியமற்றது என்னும் கருத்து.
 
3. கூடுதல் தடுப்பூசியால் நிச்சயம் பலன் உண்டு என்பதற்கான போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லாதது.
 
4. ஏற்கனவே எடுத்த கொரோனா தடுப்பூசியால் பின்விளைவுகளுக்கு ஆளானது.
 
5. தற்போதுள்ள கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததன் காரணமாக தடுப்பூசிக்கு அது கட்டுப்படுமா என்பதற்கான தெளிவான விடை இல்லாதது.
 
6. இரண்டு தடுப்பூசிகளே கொரோனாவை தடுக்க போதுமானது என்னும் கருத்து.
 
7. கூடுதல் தடுப்பூசிக்கு எற்கனவே எடுத்த தடுப்பூசியைக் காட்டிலும் கலவை தடுப்பூசியை (முதலில் எடுத்தது கோவிஷீல்ட் என்றால் கூடுதல் தடுப்பூசிக்கு கோவேக்சினை பயன்படுத்துவது)பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்குமா என்பது குறித்தான ஆய்வு முடிவுகள் தெளிவாக வெளிவந்த பின் முடிவு எடுக்கலாம் எனத் தீர்மானித்திருப்பது போன்றவை
- ''பொதுவாக தடுப்பூசி செலுத்திய பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து உடம்பில் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பதே வாதமாக இருக்கையில், இந்த ஆய்வில் கூடுதல் தடுப்பூசி எடுத்த 77 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது தடுப்பூசியின் திறனை கேள்விக்கு உட்படுத்துகிறது. இதனால் பூஸ்டர் தடுப்பூசி உண்மையில் தேவைதானா என்ற கேள்வியை இது எழுப்புகிறது'' என்கிறார் அவர்.
 
நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்குமா?
இதையடுத்து, மருத்துவர் ராஜீவ் ஜெயதேவனின் ஆய்வு தொடர்பாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். '' தடுப்பூசி போடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது இயல்பானது. உடலில் உள்ள மெமரி செல்களை அது தூண்டும்போது நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். பூஸ்டர் தடுப்பூசி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரண்டுவிதமான வயதினரிடம் எடுக்கப்பட்டதைக் கவனித்தேன். அதனை முழுமையாகப் பார்த்துவிட்டு பேசுகிறேன்'' என்றார்.
 
'' கூடுதல் தடுப்பூசி தொடர்பாக தவறான புரிதல்கள் உள்ளன. வெளிநாடுகளில் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பிறகு உடலில் ஆண்டிபாடிகள் உருவாவதைக் கண்டறிந்து அதற்கேற்ப ஆறு மாதம் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகளில் சற்று முன்னதாகவே அதாவது நான்கு மாதத்துக்குள்ளாகவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
 
இங்கிலாந்து போன்ற நாடுகளில் மிகவும் வயதானவர்களுக்கு நான்கு மாதத்தில் செலுத்திக் கொள்ளலாம் என்கின்றனர். காரணம், வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கிறது. எதிர்ப்பு சக்தியும் சில மாதங்களுக்குப் பிறகு குறைவதால் செலுத்தச் செல்கின்றனர்'' என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
 
வியாபாரம் மீதுள்ள சந்தேகமா?
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய சாந்தி, ''இந்தியாவில் ஒன்பது மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்கிறோம். இதற்குக் காரணங்கள் உள்ளன. ஜனவரி 2021 ஆம் ஆண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. ஆறு மாதம் எனக் குறிப்பிட்டிருந்தால் அனைவருமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்திருப்பார்கள். இதனால் ஏற்படும் சிக்கல்களைக் களையும் வகையில் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்குள் இணை நோய் இருப்பவர்கள் என முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தினர்.
 
'தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோர் செலுத்திக் கொள்ளலாம்' எனக் கொண்டு வந்துள்ளனர். கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் பயன் என்பது எவ்வளவு காலம் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப ஆறு மாதம் கழித்து செலுத்திக் கொள்ளலாம் என்கின்றனர். தவிர, தடுப்பூசியை எவ்வளவு முறைதான் செலுத்திக் கொள்வது என்ற கேள்வியும் வருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என கொரோனா தொற்று மாறி மாறி வந்தது. ஆனால், இந்தியாவில் தடுப்பூசியை மாற்றவில்லை. அந்தத் தடுப்பூசி உரிய முறையில் வேலை செய்ததால் மாற்றவில்லை. அதனை வலுப்படுத்தவே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது'' என்கிறார்.
 
மேலும், '' தடுப்பூசி வியாபாரம் இதன் பின்னணியில் இருக்குமா என மக்கள் சந்தேகப்படுவதுதான் அதற்கான ஆர்வம் குறைந்ததற்குக் காரணம். அதனால்தான் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தயாரிக்க வேண்டும் என சங்கத்தின் மூலமாக தொடர்ந்து கூறி வந்தோம். அரசே தயாரித்து பூஸ்டர் போடச் சொன்னால் மக்களுக்கு நம்பிக்கை வரும். வியாபாரத்தின் மீதுள்ள சந்தேகமானது, அறிவியல் மீதான சந்தேகமாக மாறுகிறது'' என்கிறார்.
 
தேவையின் அடிப்படையில் முடிவெடுக்கட்டும்
''ஒமிக்ரானால் மோசமான பாதிப்பு ஏற்படாததால் மீண்டும் தடுப்பூசி தேவையா என்ற கேள்வி மக்களிடம் எழுகிறதே?'' என்றோம். '' ஆமாம். மீண்டும் மீண்டும் கொரோனா வந்தால் அது ஆண்டுதோறும் வரக்கூடிய சாதாரண சளி காய்ச்சசலாக மாறிவிடும். அதன்பிறகு தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்க மாட்டார்கள். இன்புளுயன்சா வைரசுக்கு அமெரிக்க போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். ஆனால், இந்திய சூழலுக்கு இன்புளூயன்சா இறப்புகளை ஏற்படுத்துவதில்லை.
 
அதேபோல், கொரோனா தொற்றின் திரிபு வலுவிழுந்துவிட்டால் ஊசி செலுத்த கட்டாயப்படுத்த மாட்டார்கள். டெல்டா பிளஸ் தொற்று காரணமாக இறப்பு அதிகரித்ததால் மக்கள் பயந்தனர். இதனால் சமூக, பொருளாதாரத்தில் இழப்புகள் ஏற்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் 1.5 கோடி பேர் இரண்டாவது தவணை போடாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஊசி செலுத்திக் கொள்வது மிக அவசியம். 1.5 கோடி என்பது மிகப் பெரிய எண்ணாக உள்ளது. இதனால் கொரோனா திரிபு வந்தாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது'' என்கிறார்.
 
மேலும், ''அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பது என்பது நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும். வரும் நாள்களில் பொதுத்துறை மூலமாக அரசே தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும்; ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தேவையின் அடிப்படையில்தான் தடுப்பூசி விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்'' என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments