Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதிய ஜனதா கட்சிக்கு செல்லும் திமுக தலைவர்கள் - என்ன நடக்கிறது?

பாரதிய ஜனதா கட்சிக்கு செல்லும் திமுக தலைவர்கள் - என்ன நடக்கிறது?
, புதன், 5 ஆகஸ்ட் 2020 (14:49 IST)
திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவரைச் சந்தித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமை நிலைய அலுவலகச் செயலர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து கு.க. செல்வம் விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவிலிருந்து அடுத்தடுத்து தலைவர்கள் பாஜகவுக்குச் செல்வது ஏன்?

கு.க. செல்வம் - ஜே.பி. நட்டா சந்திப்பு

திமுகவின் தலைமை நிலையச் செயலரும் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு.க. செல்வம் செவ்வாய்க் கிழமையன்று தில்லியில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார்.
செவ்வாய்க் கிழமை காலையிலிருந்தே கு.க. செல்வம் பா.ஜ.கவில் இணையப் போகிறார் என்ற செய்திகள் வலம்வந்த நிலையில், ஜே.பி. நட்டாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், தான் பா.ஜ.கவில் இணைவதற்காக வரவில்லையென்றும் தன் தொகுதி குறித்த கோரிக்கைகளை முன்வைக்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தி.மு.கவில் உட்கட்சி ஜனநாயகமே இல்லையென்றும் கூறினார்.

அதிமுகவிலிருந்து திமுகவுக்கு

அ.இ.அ.தி.மு.கவில் இருந்துவந்த கு.க. செல்வம், 1997ல் தி.மு.கவில் இணைந்தார். 2016ஆம் ஆண்டில் தி.மு.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.

கு.க. செல்வம் பா.ஜ.க. பக்கம் சாய என்ன காரணம்?

தி.மு.வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இந்தப் பதவிக்கு தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த தி.மு.கவின் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளரான சிற்றரசு சில நாட்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்டார்.

சென்னை மாவட்ட தி.மு.கவைச் சேர்ந்த பல மூத்த நிர்வாகிகள் அந்தப் பொறுப்பை எதிர்பார்த்திருந்த நிலையில், ஒப்பீட்டளவில் இளையவரான சிற்றரசுவுக்கு பதவி தரப்பட்டது அந்தத் தருணத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில்தான் கு.க. செல்வம் கடும் அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகே பாஜகவில் அவர் சேரப் போவது குறித்த செய்திகள் வெளியாகின.
webdunia

தற்போதைய சூழலில் அவர் முறைப்படி பா.ஜ.கவில் இணையவில்லையென்றாலும் செய்தியாளர் சந்திப்பில் தி.மு.கவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். ஏற்கனவே தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி. துரைசாமி பா.ஜ.கவில் இணைந்திருக்கும் நிலையில், கு.க. செல்வமும் சென்றிருப்பது தி.மு.கவுக்கு பெரும் சங்கடங்களை ஏற்படுத்தக்கூடும்.

அலட்சியப்படுத்த முடியாது

"இம்மாதிரி அனுபவம் வாய்ந்த ஆட்கள் வெளியேறுவதை தி.மு.க. அலட்சியப்படுத்த முடியாது. கு.க. செல்வம் பா.ஜ.கவில் சேராத நிலையிலும் தி.மு.க. அவரை கட்சியைவிட்டு நீக்காத நிலையிலும் அவர் தொடர்ந்து தி.மு.க. மீது விமர்சனங்களை முன்வைத்தால், அது அக்கட்சிக்கு பெரும் சங்கடமாக அமையும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

தற்போதைய தி.மு.க. தலைவராக உள்ள மு.க. ஸ்டாலின் கடந்த 10-12 வருடங்களாகத்தான் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் தலையிட்டு வருகிறார். ஆனால், கட்சியில் உள்ள சில இளையவர்கள் இப்போதே நியமனங்களில் தலையிடுகிறார்கள்; அதுதான் பிரச்சனை என்கிறார் அவர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கவிருக்கும் நிலையில், தி.மு.கவிலிருந்து முக்கியமான தலைவர்கள் பா.ஜ.கவிற்கு செல்வது தமிழக அரசியல் களத்தில் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

உட்கட்சி ஜனநாயகம் இல்லை

"கு.க. செல்வம் கட்சியில் சேர்கிறார், சேரவில்லையென்பது அவருடைய முடிவு. ஆனால், தி.மு.கவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு அக்கட்சி பதில் சொல்ல வேண்டும்" என்கிறார் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி.
webdunia

தி.மு.கவிலிருந்து பா.ஜ.கவுக்கு வந்த வி.பி. துரைசாமி, அங்குப் பட்டியலின மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என கூறியிருப்பதையும் தற்போது கு.க. செல்வம் உட்கட்சி ஜனநாயகம் இல்லையெனக் கூறியிருப்பதையும் கவனிக்க வேண்டும் என்கிறார் பா.ஜ.கவின் கே.டி. ராகவன்.

அவரைப் பொறுத்தவரை 2021ஆம் ஆண்டுத் தேர்தலை பிரதமர் நரேந்திர மோதியின் சாதனைகளைச் சொல்லித்தான் பா.ஜ.க. சந்திக்கும் என்றாலும் இம்மாதிரி வேறு கட்சியிலிருந்து வரும் தலைவர்கள் தேர்தல் களத்தில் உதவுவார்கள் என்கிறார்.

இருந்தபோதும் தி.மு.க. தலைமை தற்போதுவரை கு.க. செல்வம் குறித்து அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பா.ஜ.கவின் தேசியத் தலைவரை வெளிப்படையாக சந்தித்த பிறகும் அவர் மீதான நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பையும் கட்சி இதுவரை வெளியிடவில்லை.

திமுக என்ன சொல்கிறது?

கு.க. செல்வம் குறித்து தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது, "அவர் முக்கியத்துவம் இல்லாத ஒருவர். அவரைப் பற்றிப் பேசவே தேவையில்லை" என்று தெரிவித்தார்.

தி.மு.கவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்ற கு.க. செல்வத்தின் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "இதைச் சொல்ல அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை; அ.தி.மு.கவிலிருந்து வந்தவர், திரும்பவும் சென்றுவிட்டார் அவ்வளவுதான்" என்கிறார் ஆர்.எஸ். பாரதி.

கு.க. செல்வம் தற்போது தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் என்பதால், கட்சி மாறும் பட்சத்தில் அவர் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகக்கூடும். அதே நேரம் கட்சியே அவரை நீக்கினால், அவர் எம்.எல்.ஏவாகவே தொடர முடியும். திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவரைச் சந்தித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக நீக்குனா கவலையில்ல; பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வம்!