Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்: 'திமுக மற்றும் அதிமுகவின் கணக்குகள்' - எப்படி தாக்கம் செலுத்தும்?

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்: 'திமுக மற்றும் அதிமுகவின் கணக்குகள்' - எப்படி தாக்கம் செலுத்தும்?
, வியாழன், 23 மே 2019 (06:23 IST)
இந்திய அளவை மக்களவைத் தேர்தல் எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்துமோ அதற்கு சற்றும் குறைந்தது அல்ல தமிழக சட்டமன்றத்திற்கான 22 தொகுதி இடைத்தேர்தல். அதிமுக ஆட்சி தொடர போகிறதா அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறதா என்று தீர்மானிக்க போகும் தேர்தல் இது.



ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால், 22 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் குறைந்தது எட்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஆளும் அ.தி.மு.க. இருக்கிறது. ஆகவே, இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என்பதையும் தீர்மானக்கும் தேர்தல்.

பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர் ஆகிய 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது,

மீதமுள்ள திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

தி.மு.க. கூட்டணி

webdunia

தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை அக்கட்சி 98 இடங்களைக் கைப்பற்றியது. இதில் தி.மு.க. 89 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்தையும் பெற்றிருந்தன.

2016 டிசம்பரில் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அ.தி.மு.கவின் பலம் 135ஆகக் குறைந்தது. இதற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வமும் அதன் பின் எடப்பாடி பழனிச்சாமியும் முதல்வராகப் பதவியேற்றனர். ஆனால், கட்சிக்குள் பழனிச்சாமி தரப்பிற்கும் தினகரன் தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட பிளவால் தினகரன் பிரிவைச் சேர்ந்த 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை நீக்குமாறு ஆளுனரிடம் மனு அளித்தனர்.

இவர்கள் பத்தொன்பது பேரையும் தகுதி நீக்கம் செய்யப்போவதாக விளக்கம் கேட்டு சபாநாயகர் பி. தனபால் கடிதம் அனுப்பினார். அதில் எஸ்.டி.கே. ஜக்கையன் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவரைத் தவிர்த்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் தனபால். இதனை நீதிமன்றமும் உறுதிசெய்தது.

இதனால், அக்கட்சியின் பலம் சட்டப்பேரவையில் 117ஆகக் குறைந்தது. இதுதவிர, திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ், சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் உயிரிழந்ததால் அக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 115ஆகக் குறைந்துள்ளது.

சட்டப்பேரவையில் தற்போது 212 உறுப்பினர்களே உள்ளதால், தற்போது அவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடிக்கிறது.

தி.மு.கவைப் பொறுத்தவரை 89 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்ததால் அவர்களது பலம் 88 ஆக குறைந்துள்ளது.

வெற்றிபெற்றது செல்லாது
2019ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தக்கோரி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுவந்தன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் ஏ.கே. போஸ் வெற்றிபெற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இதையடுத்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதியன்று வாக்குப் பதிவை நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் ஏப்ரல் 9ஆம் தேதியன்று அறிவித்தது.

ஆகவே காலியாகவுள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆளும் அ.தி.மு.க. அரசு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், தற்போதுள்ள 115 இடங்கள் போக குறைந்தது 4 இடங்களையாவது கைப்பற்றியாக வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால், இது வெறும் அதிகாரபூர்வமான கணிப்புதான்.

தினகரன் ஆதரவு மனநிலை

webdunia

காரணம், தற்போது அ.தி.மு.க வசமுள்ள 115 உறுப்பினர்களில் விருதாச்சலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு ஆகியோர் வெளிப்படையாகவே டிடிவி தினகரன் ஆதரவு மனநிலையில் உள்ளனர்.

டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருக்கிறார்.

மேலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி போன்றவர்கள், அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததில் பெரும் அதிருப்தியில் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போதுதான் இவர்களது நிலைப்பாடு தெரியவரும். ஆகவே, இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 22 தொகுதிகளில் குறைந்தது 8 இடங்களிலாவது ஆளும் அ.தி.மு.க. வெற்றிபெற்றாக வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.கவால் நிம்மதியாக ஆட்சியைத் தக்கவைக்க முடியும்.

தி.மு.கவைப் பொறுத்தவரை குறைந்தது 20 இடங்களை கைப்பற்றினால் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து 118 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றலாம். இதில் ஒரு இடம் குறைந்தால்கூட ஒரு தொகுதியைத் தன்வசம் வைத்திருக்கும் டிடிவி தினகரனின் தயவு அக்கட்சிக்குத் தேவைப்படும்.

ஆனால், அப்படி ஒரு ஆதரவை தி.மு.க கோரிப் பெறுவதோ, அம்மாதிரி தி.மு.க. அரசை டிடிவி தினகரன் ஆதரிப்பதோ தினகரனின் அரசியல் எதிர்காலத்திற்கு நிச்சயம் பொருத்தமானதாக அமையாது. ஆகவே அம்மாதிரியான ஒரு சூழலில், மீண்டும் தேர்தலைச் சந்தித்து ஆட்சியைப் பிடிக்கவே தி.மு.க. விரும்பும்.

"ஒன்றிரண்டு இடங்கள் குறைவாகக் கிடைத்தால், தினகரனின் ஆதரவை தி.மு.க. கோராது என்றே நான் நினைக்கிறேன். அப்படி நடந்தால் அது தி.மு.க செய்யும் மிகப் பெரிய தவறாக முடியும். அதே நேரம் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி வென்றால் ஆட்சியை நடத்தவே விரும்புவார்கள்" என்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரனிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் ஆர். முத்துக்குமார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை: களமிறங்கிய 1000க்கும் மேற்பட்ட முகவர்கள்