இந்தியாவை கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கறுப்பு பூஞ்சை நோய் அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் வரை இறந்தபோகும் ஆபத்தைக் கொண்ட இந்த நோயைக் கண்டறிவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது.
மியூகோர்மைகோசிஸ் என்பது என்ன?
மியூகோர்மைகோசிஸ் என்பது பூஞ்சையால் ஏற்படும் தொற்று. நமது சூழலில் நம்மைச் சுற்றி பூஞ்சைகளை உற்பத்தி செய்யும் துகள்கள் நிறைந்து இருக்கின்றன. ரொட்டிகள் போன்ற உணவுப் பொருள்கள் மீது இவைதான் பூஞ்சைகளை ஏற்படுத்துகின்றன. எல்லோரது உடலுக்குள்ளும் இவை சென்றாலும் அவை தொற்றை ஏற்படுத்துவதில்லை. காரணம் உடலில் இருக்கும் எதிர்ப்பு ஆற்றல்.
நமது உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சைகள் நம்மைத் தாக்குகின்றன. வேறு நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உடலுக்குக் குறைகிறது. அந்த நேரத்தில் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது என ஐசிஎம்ஆர் அமைப்பு தெரிவிக்கிறது.
காற்றில் உள்ள பூஞ்சைத் துகள்களை எதிர்ப்பு ஆற்றல் குறைந்த மனிதர்கள் சுவாசிக்கும்போது அவை உடலுக்குள் புகுந்து சைனஸ்கள் மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது. கவனிக்காமல் விட்டால் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது இந்தப் பாதிப்பு.
தீராத சர்க்கரை நோய், ஸ்டீராய்டுகள் மூலம் ஏற்படும் எதிர்ப்பு ஆற்றல் முடக்கம், தீவிர சிகிச்சைப் பிரிவில் நீண்ட காலம் இருப்பது, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, வோரிகோனோஸோல் சிகிச்சை ஆகியை மியூகோர்மைகோசிஸ் நோய் ஏற்படுவதற்குக் காரணம் என்று ஐசிஎம்ஆர் கூறுகிறது.
மூக்குப் பகுதியில் ஏற்படும் இந்த நோய், விரைவிலேயே தொண்டை, கண்கள், மூளை எனப் பரவிவிடும். இந்தத் தொற்று மூளையை எட்டும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயாக மாறிவிடுகிறது.