Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காபி கொட்டையில் புதிய வகை கண்டுபிடிப்பு: புவி வெப்ப நிலை அதிகரிக்கும்போது உதவி செய்யும்

Advertiesment
காபி கொட்டையில் புதிய வகை கண்டுபிடிப்பு: புவி வெப்ப நிலை அதிகரிக்கும்போது உதவி செய்யும்
, வியாழன், 22 ஏப்ரல் 2021 (00:13 IST)
பருவநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் வெப்பத்தால் காபிச்செடிகள் அழியக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், அதிக வெப்பத்தைத் தாங்கி நிற்கும் காட்டுவகை காபிச் செடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அராபிகா காபி போன்றே சுவையுள்ள, ஆனால் வெப்பமான சூழலில் வளரக்கூடிய இந்த செடியின் பெயர் ஸ்டெனோபில்லா.
 
மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வரும் இந்த வகை காபியை நாம் விரைவில் சுவைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
 
வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​நல்ல காபிச்செடி வளர்வது தொடர்ந்து கடினமாகிவிடும். 2050 ஆம் ஆண்டுக்குள், உயர்தர காபிக்கு பயன்படுத்தப்படும் நிலத்தில் பாதிப் பகுதி பயனற்றதாகிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
சிறந்த சுவையுள்ள, வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கக்கூடிய ஒரு காட்டுவகை காபியைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்று பிரிட்டனின், கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவின் காபி ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் ஆரோன் டேவிஸ் கூறினார்.
 
"நிறைய காட்டுவகை காபிகளை நாங்கள் ருசித்துள்ளோம். ஆனால் அவை அவ்வளவாக நன்றாக இருக்காது. அராபிகாவை போல சுவையாக இருக்காது. எனவே எங்கள் எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தன," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
"ஆனால் இந்த காபியின் ருசியால் நாங்கள் மிகவும் கவரப்பட்டோம். அது மிகவும் சுவையாக இருந்தது. பருவநிலை மாற்றத்தை தாங்கி நிற்கும் பிற பண்புகளையும் இது கொண்டுள்ளது. அராபிகா காபியை ஒப்பிடும்போது இது அதிக வெப்பமான சூழ்நிலையில் வளரக்கூடிய பயிராகும்,"என்று அவர் குறிப்பிட்டார்.
 
காஃபியா ஸ்டெனோபில்லா என்பது மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரு காட்டு காபி இனமாகும். ஐவரி கோஸ்ட்டில் மட்டுமே இது வளர்வதாகவும், பிற பகுதிகளில் இந்த இனம் அழிந்துவிட்டதாகவும், சமீப காலம் வரை கருதப்பட்டது.
 
இந்தச்செடி சியரா லியோனில் வளர்வது சமீபத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு இங்கு இது, காபி பயிராக பயிரிடப்பட்டு வந்தது.
 
சியரா லியோன் மற்றும் ஐவரி கோஸ்ட்டில் இருந்து இந்த காபிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு காபியாக தயாரிக்கப்பட்டது. பின்னர் அது காபி ரசிகர் குழுவால் சுவைக்கப்பட்டது.
 
80% க்கும் மேற்பட்ட குழுவினரால், ஸ்டெனோபில்லாவிற்கும், உலகின் மிகவும் பிரபலமான காபியான அராபிகாவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் பிளான்ட்ஸ் இதழில் தெரிவித்தனர்.
 
அவர்கள் இந்த செடியின் காலநிலைத் தரவுகளையும் வடிவமைத்தனர். இது அராபிகாவை விட குறைந்தது 6 டிகிரி அதிக வெப்பநிலையை தாங்க முடியும் என்று அந்தத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
 
உயர்தர காபியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் இந்த காட்டு காபியின் திறனை மதிப்பிடுவதற்காக, இந்த ஆண்டு இந்தக் காபி செடியின் நாற்றுகள் நடப்படும்.
 
சியரா லியோனில் ஸ்டெனோபில்லா, மீண்டும் பெரிய அளவில் வளர்க்கப்படும் நாள் வரும் என்று டாக்டர் டேவிஸ் நம்புகிறார்."இது அடுத்த இரண்டாண்டுகளில் காபி கடைகளில் கிடைக்கப் போவதில்லை.
 
ஆனால் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு முக்கிய காபியாகவும், அதிக மதிப்புள்ள காபியாகவும், இது சந்தையில் நுழைவதை நாம் பார்ப்போம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு இது அதிக அளவில் வரத்தொடங்கும் என்று கருதுகிறேன், "என்று அவர் கூறினார்.
 
அராபிகா காபி என்றால் என்ன?
 
அராபிகா காபி கொட்டை சிறந்த சுவை கொண்டதாக கருதப்படுகிறது. இந்த காபி மலைகளில் வளர்க்கப்படுகிறது. உலகின் காபி உற்பத்தியில் 60% க்கும் அதிகமாக இருப்பது இந்த வகைதான்.
 
அராபிகா காலநிலை மாற்றத்தை, ஓரளவிற்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும். இதன் விவசாயிகள் உயர் வெப்பநிலை , குறைந்த அல்லது ஒழுங்கற்ற மழையின் தாக்கம் போன்றவற்றின் விளைவுகளை ஏற்கனவே அனுபவித்து வருகின்றனர்.
 
விலை ஏற்ற இறக்கம், பூச்சிகள் மற்றும் நோய்கள், தீவிர வானிலை ஆகியவை காபி உற்பத்தி எதிர்கொள்ளும் வேறு சில இடர்ப்பாடுகள். பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமான சிராட் மற்றும் கிரீன்விச் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
 
காட்டு காபி எங்கே காணப்படுகிறது?
காட்டு காபியின் பெரும்பகுதி ஆப்பிரிக்காவின் தொலைதூர காடுகளிலும், மடகாஸ்கர் தீவிலும் வளர்கிறது. ஆப்பிரிக்காவுக்கு அப்பால், இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சிலபகுதிகள் உள்ளிட்ட வெப்பமண்டலப் பகுதிகளில் இந்த காட்டு காபி காணப்படுகிறது.
 
நாம் அருந்தும் காபி வகைகள் என்ன?
 
100 க்கும் மேற்பட்ட வகையான காபி மரங்கள் காடுகளில் இயற்கையாகவே வளர்கின்றன.
 
ஆனால் ஒரு சில வகைகளே குடிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அராபிகா (காஃபியா அராபிகா) மற்றும் ரோபஸ்டா (காஃபியா கேனெஃபோரா) ஆகிய இரண்டு முக்கிய காபி பயிர்கள், உலகளாவிய காபி துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
 
மூன்றாவது இனம் - லைபரிகா (காஃபியா லைபரிகா). இது உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது. ஆனால் இது அரிதாகவே காபி பானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்...அதிர்ச்சி சம்பவம்