Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து பேசினாரா மோதி? - என்ன சொல்கிறார் மகாதீர்?

Advertiesment
மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து பேசினாரா மோதி? - என்ன சொல்கிறார் மகாதீர்?
, சனி, 7 செப்டம்பர் 2019 (21:30 IST)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித்துப் பேசியபோது காஷ்மீர் விவகாரம் குறித்தே அதிகம் பேசப்பட்டதாக மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பின்போது மத போதகர் ஜாகிர் நாயக் குறித்து பிரதமர் மோதி குறிப்பாக எதுவும் வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாட்டின்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசினர்.
 
அப்போது மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றுள்ள மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மலேசிய அரசு மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோதி வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
 
இந்தக் கோரிக்கையை மலேசியப் பிரதமர் ஏற்றாரா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. மலேசிய ஊடகங்களிலும் பிரதமர் மகாதீர், ரஷ்ய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை குறித்த செய்திகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
 
இந்தியா மற்றும் மலேசியாவின் பிரதமர்கள் இருவரும் சந்தித்துப் பேசினர் என்றும், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் மட்டுமே மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
 
ஜப்பானில் விளக்கம் அளித்த மகாதீர்
 
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் மகாதீர்.
 
அங்கு கியோடோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியப் பிரதமர் மோதியுடனான பேச்சுவார்த்தையின் போது, ஜாகிர் என்ற பெயரை மட்டுமே மோதி உச்சரித்ததாகவும், மேற்கொண்டு ஏதும் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
 
"அவர் (மோதி) பெயரை மட்டுமே குறிப்பிட்டாரே தவிர, என்ன பிரச்சினை என்பது குறித்தோ, அல்லது என்ன தேவை என்பது குறித்தோ ஏதும் தெரிவிக்கவில்லை. விரிவாக எதையும் கூறவில்லை."
 
"மாறாக ஜம்மு காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகள் குறித்து விவரிப்பதிலேயே அவர் கவனம் செலுத்தினார்," என்றார் மகாதீர் மொஹமத்.
 
எனினும் இந்திய ஊடகங்களில், ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்து பிரதமர் மோதி மலேசிய பிரதமரிடம் வலியுறுத்தி இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்குப் பதிலளித்த அவர், "அது அவர்களின் செய்தி" என்றார்.
 
"ஒருமுறை மட்டுமே பெயரை உச்சரித்தார் மோதி"
 
ஜாகிர் நாயக் என்ற பெயரை மோதி தம்மிடம் ஒரே ஒருமுறை மட்டுமே குறிப்பிட்டதாகவும், அவரை நாடு கடத்துவது தொடர்பான விவகாரம் குறித்து ஏதும் பேசவில்லை என்றும் மகாதீர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
 
முன்னதாக, மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு தலைவர்களும் சந்தித்த போது ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து இந்திய பிரதமர் ஏதும் வலியுறுத்தவில்லை என்றே கூறியிருந்தார்.
 
மேலும், ஜம்மு காஷ்மீர் குறித்து தெளிவுபடுத்துவதற்கே பிரதமர் மோதி அதிக நேரம் எடுத்துக் கொண்டார் என்றும், இவ்விவகாரத்தில் மலேசியாவின் நிலைபாட்டை மகாதீர் தெளிவாக எடுத்துக் கூறினார் என்றும் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா குறிப்பிட்டார்.
 
காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்திய மகாதீர்,"இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஐநா தீர்மானங்களின்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலமாகவே இந்த விவகாரத்துக்கு தீர்வு காண முடியும் என்றும் மலேசியப் பிரதமர் கூறினார்," என்றார் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும்.
 
தேவை ஏற்படும் பட்சத்தில் மூன்றாம் தரப்பின் உதவியைக் கோரலாம் என்றும், இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லலாம் என்றும் பிரதமர் மகாதீர் தெரிவித்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
 
ஜாகிர் நாயக்
பேச்சுவார்த்தையினூடே ஜாகிர் நாயக் குறித்து ஒருமுறை மட்டுமே பிரதமர் மோதி குறிப்பிட்டதாக தெரிவித்த சைஃபுதின் அப்துல்லா, இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருவதாகவும் பிரதமர் மோதி தெரிவித்தார் என்றார்.
 
"இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட மாட்டாது"
 
"இந்தியப் பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து பிரதமர் மகாதீர் ஏதும் குறிப்பிடவில்லை. பெரும்பாலான நேரம் காஷ்மீர் விவகாரம் குறித்தே பேசப்பட்டது. மேலும் இந்திய, மலேசிய வெளியுறவு அமைச்சகங்கள் இடையே ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து ஏதும் பேசப்படவில்லை," என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா திட்டவட்டமாகக் கூறினார்.
 
மொத்தத்தில், ஜாகிர் நாயக் விவகாரத்தால் இந்தியா, மலேசியா இடையேயான உறவுகளில் எத்தகைய பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்... பரபரப்பு செய்திகள்