பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் பலவற்றில் வியாழக்கிழமை செய்திகள் வெளியான நிலையில் அது பற்றிய விளக்கத்தை இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த ராணுவ பிரிவின் தலைமை அதிகாரி லெஃப்டிணன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங், நேற்று (19 நவம்பர் 2020, வியாழக்கிழமை), இந்திய ராணுவம், பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் (POK), எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்று தெரிவித்தார்.
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகச் சொல்வது பொய் செய்தி என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சில ஊடகங்களில் பிஓகே பகுதிகளில், இந்திய ராணுவம், தீவிரவாதிகளின் ஏவுதளங்களில் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியானது. இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரீதியில் பாகிஸ்தான் நடந்து கொள்வதற்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த செய்திகளில் கூறப்பட்டன.
கடந்த 13ஆம் தேதி, தீவிரவாதிகள் பயன்படுத்திய முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், அந்த நடவடிக்கை குறித்து இந்திய செய்தி நிறுவனமான பிடிஐக்கு ராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்தே, சில ஊடகங்கள் அந்த நடவடிக்கையை மிகைப்படுத்தி பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் துல்லிய தாக்குதலை நடத்தியதாக செய்திகளை வெளியிட்டதாக அறிய முடிகிறது.