Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன?

Advertiesment
பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன?
, சனி, 11 செப்டம்பர் 2021 (14:01 IST)
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன்.
 
பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, சித்திர பாரதி என்ற நூலை வெளியிட்டார்.
 
1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்:
 
1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒரு பெரிய யானை இருந்தது. அதைக் கோவிலுக்கு வெளியே கட்டி வைத்திருப்பார்கள். பாரதி அந்த யானையை சகோதரனாக பாவிப்பார். கையில் எடுத்துச் செல்லும் பழம், தேங்காயை யானையிடம் தாமே நீட்டி, அது உண்பதைக் கண்டு மகிழ்வார்.
 
அந்த யானைக்கு ஜூன் மாதம் திடீரென மதம் பிடித்துவிட்டது. அதை சங்கிலியால் பிணைத்து கோவில் முன்பாகக் கட்டிப்போட்டிருந்தார்கள். வழக்கம்போல தேங்காய், பழத்துடன் யானையைத் தேடிக்கொண்டு வந்தார் பாரதி. "சகோதரா இந்தா பழம், தேங்காய்" என்று அன்புடன் நெருங்கி கையை நீட்டினார். யானை அதை வாங்கத்தான் வந்ததோ, மதத் திமிரில் தட்டிவிடத்தான் செய்ததோ தெரியவில்லை. தும்பிக் கையை வீசியது. அடுத்த கணம் பாரதி யானையின் காலடியில் மூர்ச்சித்துக் கிடந்தார்.
 
மக்கள் இன்னது செய்வதென்று தெரியாமல் தவித்தனர். 'யானை காலடியில் பாரதி கிடக்கிறார்' என்ற செய்தி திருவல்லிக்கேணி முழுவதும் தீப்போல பரவியது. எங்கோ இருந்த குவளைக் கண்ணன் காதிலும் விழுந்தது. ஓடோடி வந்த குவளைக் கண்ணன், யானை இருந்த இரும்புக் கிராதிக் கோட்டத்திற்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார். ரத்தப் பிரவாகத்தில் கிடந்த பாரதியை எடுத்து நிமிர்த்தி, தோளில் சார்த்திக்கொண்டு வெளியே கொண்டுவந்து சேர்த்தார்.
 
பாரதியை மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் மற்றும் சிலரும் ஒரு வண்டியில் வைத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பாரதிக்கு உடம்பெல்லாம் காயம். ஏற்கனவே பூஞ்சையான உடலில் மரண வேதனையை உண்டாக்கின. பாரதி சில நாட்கள் வலியால் அவதிப்பட்டார். ஆனால், விரைவில் குணமாகிவிட்டார்.
 
யானை சம்பவம் நடந்தது ஜூன் மாதத்தில். அதன் பின் பாரதி ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சுதேசமித்திரனில் வேலைக்குப் போய்வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் தேசிய வீதி பஜனை நடத்தியிருக்கிறார். பொதுக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியூர்ப் பயணமும் மேற்கொண்டுள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் பேசிவிட்டுத் திரும்பிவந்து, தமது ஈரோடு விஜயம் குறித்து 'மித்திரனு'க்கு தாமே எழுதித்தந்துள்ளார்.
 
ஆகவே, பாரதியார் யானை அடித்து மரணமடையவில்லை. பாரதியை அடித்த அந்த கோவில் யானையின் பெயர் அர்ஜுனன். வயது 40. இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1923 ஆகஸ்ட்டில் அந்த யானை இறந்துபோனது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை