Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - திமுகவா, அதிமுகவா?

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - திமுகவா, அதிமுகவா?
, ஞாயிறு, 2 மே 2021 (08:40 IST)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 2ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். எனினும்,  வழக்கமான வேகத்தில் அல்லாமல் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதலைப் பின்பற்றி வாக்குகள் எண்ணப்படுவதால் ஒவ்வொரு சுற்றுக்கும் சற்று கூடுதல்  நேரம் தேவைப்படும்.
 
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் வரும்  முகவர்கள், கொரோனா பரிசோதனை நெகட்டிவ் முடிவு சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். இல்லாவிட்டால், கொரோனா தடுப்பூசி இரண்டு  டோஸ் போட்டுக் கொண்டவர்களும் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்
 
தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை தேர்தல் இது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பரில் இறந்த பிறகு சில மாதங்கள் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.
 
அதன் பிறகு ஒரு பெரிய அரசியல் குழப்பத்துக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி வசம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சிப்பொறுப்பு கை மாறியது. தமிழ்நாட்டில்  ஏற்கெனவே 2011, 2016 என தொடர்ந்து இரண்டு முறை ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை அதிமுக தலைமையிலான அரசு நிறைவு செய்துள்ளது. இப்போது,  மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை தொடருவதை லட்சியமாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தேர்தலை  எதிர்கொண்டிருக்கிறது.
 
திமுகவை பொருத்தவரை, அதன் தலைவர் மு.கருணாநிதி மறைவுக்குப் பிறகு மு.க. ஸ்டாலின் தனது தலைமையில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை  எதிர்கொண்டிருக்கிறார். தொடர்ந்து 10 ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் இருந்த திமுகவை, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் எதிர்பார்ப்புடன் இந்த தேர்தலை  ஸ்டாலின் தலைமை எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில், நடந்து முடிந்த தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே நேரடி மோதலாகக் கருதப்படுகிறது.
 
இது தவிர, டி.டி.வி. தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் ஒரு அணி, கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைமையில் மற்றொரு அணி, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி என மேலும் மூன்று அணிகள் தேர்தல் களம் கண்டுள்ளன.
 
திருப்பத்தை சந்திக்கும் புதுச்சேரி அரசியல்
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்ற அணி, என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக இடம்பெற்ற அணி தேர்தல் களம் கண்டுள்ளன. அங்கு இந்த இரண்டு கூட்டணிக்கு இடையேதான் நேரடி மோதல் நிலவுகிறது.
 
புதுச்சேரியில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே பெரும்பான்மை பலம் இழந்த காங்கிரஸ் ஆட்சி நெருக்கடியை சந்தித்தது. அதன் சில  எம்எல்ஏக்கள், அமைச்சர் பதவி வகித்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். இதனால் இந்த தேர்தல் அங்கு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை தரும் என்ற  எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
தமிழ்நாடு தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்
 
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 16,387 ஊழியர்கள்  தேர்தல் பணியாற்றினார்கள். இந்த தேர்தலை கண்காணிக்க ஒரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. தமிழ்நாட்டில்  வாக்களிக்க தகுதி பெற்ற 6.29 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை செலுத்தினர். இந்த தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின.
 
தமிழக தேர்தல் பரப்புரைகளின்போது கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் கூடியது. பிறகு மாநிலத்தில் பரவலாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், இது  குறித்து தனது கடும் அதிருப்தியை சென்னை உயர் நீதிமன்றம் பதிவு செய்திருந்தது.
 
மேலும், கொரோனா வழிகாட்டுதல்களை கட்டாயம் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த தேர்தலில் கோவிட்-19 வழிகாட்டுதல்களை பின்பற்றி பிறருக்கு எடுத்துக்காட்டாக அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் திகழ வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
 
இதைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம்  கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. அவற்றைப் பின்பற்றியே இன்றைய வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? – வாக்கு எண்ணிக்க்கை Live Updates