Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் ஊரடங்கால் வேலையின்மை: இந்தியாவிலேயே புதுவை, தமிழகம் முதலிடம்

கொரோனா வைரஸ் ஊரடங்கால் வேலையின்மை: இந்தியாவிலேயே புதுவை, தமிழகம் முதலிடம்
, வியாழன், 7 மே 2020 (15:46 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்க நிலையால் இந்தியாவின் வேலையின்மை விகிதம் திடீரென சீறிப் பாய்ந்துள்ளது.

சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எக்கானமி (சி.எம்.ஐ.இ) என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 7.78 சதவீதமாக இருந்த வேலையின்மை சதவீதம், ஏப்ரல் மாதம் 23.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது புரிந்துகொள்ளக்கூடியதே.

ஏனெனில் ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக முடக்க நிலை தீவிரமாக அமலில் இருந்தது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

ஆனால், மாநிலவாரி புள்ளிவிவரப்படி இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலேயே இந்த வேலையின்மை மிக அதிகமாக இருப்பது புதுச்சேரியில், அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழ்நாடு என்ற தகவல்தான் அதிர்ச்சிகரமாக உள்ளது.
சி.எம்.ஐ.இ புள்ளிவிவரப்படி ஏப்ரல் மாதம் புதுவையின் வேலையின்மை சதவீதம் 75.8. தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 49.8. தேசிய சராசரியான 23.52 சதவீதத்தைவிட இது மிகவும் அதிகம்.

இதே மாதத்தில் டெல்லியின் வேலையின்மை விகிதம் 16.7 சதவீதம். மகாராஷ்டிரத்தில் 20.9 சதவீதம். ஆந்திராவில் 20.5 சதவீதம், கர்நாடகத்தில் 29.8, கேரளாவில் 17, தெலங்கானாவில் 6.2, பிகாரில் 46.6.
 
கொரோனா முடக்க நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேலையின்மை மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சென்னை பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் கே.ஜோதி சிவஞானத்திடம் கேட்டோம்.

“தமிழகம் மிகவும் முன்னேறிய, நகரமயமான, நிறைய முறைசாரா தொழில்துறைகளைக் கொண்ட மாநிலம். இங்கு ஊரகப் பகுதிகளில்கூட வேளாண்மை அல்லாத முறைசாராத் தொழில்கள் உண்டு. அதைப் போலவே சேவைத் துறைகளும் அதிகம். எனவே, கொரோனா முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் அதிக அளவில் தொழிலாளர் வெளியேற்றம் நடந்து வேலையின்மை அதிக அளவில் உயர்தது,” என்றார் அவர்.
webdunia

பின்தங்கிய மாநிலமான பிகாரில் 46.6 சதவீதமும், தொழில் வளம் மிகுந்த மகாராஷ்டிரத்தில் 20.9 சதவீதமும் இருக்கிறதே. இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டபோது, “மகாராஷ்டிரத்தில் மும்பை, புனே போன்ற சில இடங்கள் தவிர, வேறு எந்த இடத்திலும் தொழில்கள் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் சிறியதும், பெரியதுமாக ஏராளமான நகரங்கள். கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர் என்று பல பகுதிகளிலும் பரவலான வளர்ச்சி இருக்கிறது. சென்னை ஆட்டோமொபைல் துறையில் ஒரு சர்வதேச மையம். அதையொட்டி, ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாகி வளர்ந்துள்ளன. பிகாரில் அன்மைக் காலத்தில் ஏராளமான செயல்பாடுகள் நடந்து வருகின்றன,” என்றார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

கொரோனா தாக்கம் முடிந்த பிறகு மீண்டெழுவதும் இதே வேகத்தில் தமிழகம், புதுவையில் நடக்குமா என்று கேட்டபோது, “சிறு குறு தொழில் நிறுவனங்கள் மிக சன்னமான லாப விகிதம் பெற்று செயல்படுகிறவை. இந்நிலையில், சில மாதங்களுக்கு அவற்றை மூடி வைத்திருக்கும்போது, சம்பளம், வாடகை, மின்சாரக் கட்டணம், கடனுக்கு வட்டி போன்ற செலவினங்களின் சுமை அவர்கள் மீது பெரிய தாக்குதலாக இருக்கும்.“

“மத்திய அரசிடம் இருந்து அவர்களுக்கு உதவிகள் ஏதும் வரவில்லை. இப்படி உதவி கிடைக்காமல் அவர்களால் மீண்டெழ முடியாது. வங்கி கடனுக்கு, அசல்-வட்டியை தவணையை கட்டுவதற்கு அவகாசம் மட்டும்தான் தரப்பட்டுள்ளது. இது அவர்கள் மீண்டெழ போதுமான உதவியாக இருக்காது. ஒரு தொழில்முனைவோர் நசுக்கப்பட்டுவிட்டால் இன்னொரு தொழில்முனைவோரை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல” என்று அவர் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு முன்பு வேலையின்மை இல்லையா?

இந்தியாவில் கொரோனாவுக்கு முன்பே வேலையின்மை விகிதம் வரலாறு காணாத வேகத்தில் அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.

2017-18ம் ஆண்டில் இந்தியாவின் வேலையின்மை 6.1 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், இது 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என்றும் இந்தியாவின் முன்னணி அரசு சார் புள்ளிவிவர நிறுவனமான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் (NSSO) எடுத்த தரவுகள் காட்டின. அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்த தரவுகள் கசிந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்படவே இல்லை என்பது மட்டுமல்ல, அதன் பிறகு அந்த நிறுவனம் இந்த கணக்கெடுப்பையே நடத்தவில்லை. இந்த நிலையில்தான் சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எக்கானமி என்ற நிறுவனத்தின் தரவுகள், வேலையின்மை போக்கினை கண்காணிக்க உதவுகின்றன.
webdunia

6.1 சதவீதம் வேலையின்மையே 48 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகம் என்று கூறப்பட்ட நிலையில், சி.எம்.ஐ.இ. வெளியிட்ட வேலையின்மைத் தரவு மேலும், மேலும் வேலையின்மை அதிகரித்து வருவதாகவே காட்டியது. கடந்த ஆண்டு அக்டோபரில் இது 8.1 சதவீதம் என்ற அளவுக்கும்கூட சென்றது.

கடைசி வாரத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட 2020 மார்ச் மாதம் வேலையின்மை விகிதம் 8.74 சதவீதமாக இருந்தது. அடுத்த மாதமே 23.52 சதவீதமாக அதிகரித்தது.

இது தவிர, கொரோனாவுக்கு முன்பே பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து கடந்த ஆண்டு வீழ்ச்சியை சந்தித்து, இரண்டு மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே சென்றது.

இந்த போக்கினை வைத்து, 2020-21 நிதியாண்டில் மேலும் 16 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதார ஆய்வுத் துறை கணித்தது. ஆனால், இந்த கணிப்பு வருங்கால வைப்பு நிதி பதிவு அடிப்படையிலானது, உண்மையில் வளர்ச்சி விகித வீழ்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் குறைந்தது ஒரு கோடி வேலைவாய்ப்பு குறையும் என்று பேராசிரியர் கே.ஜோதி சிவஞானத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது பிபிசி தமிழ்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் 4-5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் செய்யப்பட்ட கணிப்பு அது. இப்போது கொரோனாவுக்குப் பிறகு நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்று பலரும் கணிக்கின்றனர். சர்வதேச செலாவணி நிதியம் (IMF) செய்த கணிப்பும் அப்படித்தான் உள்ளது.

இந்நிலையில், வேலையின்மை எப்படி செல்லும், மிக மோசமாக பாதிக்கப்பட்ட தமிழகம், புதுவை மீண்டெழுவதற்கு எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பது இன்னும் ஆய்வுக்குரியவையே.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் வீட்டு பெண் காவலருக்கு கொரோனாவா? – காவல் ஆணையர் விளக்கம்!