Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Corona virus: “சீனா டூ ஆப்ரிக்கா” கண்டங்கள் தாண்டிய பேராபத்து - எதிர்கொள்ள தயாரா?

Advertiesment
Corona virus: “சீனா டூ ஆப்ரிக்கா” கண்டங்கள் தாண்டிய பேராபத்து - எதிர்கொள்ள தயாரா?
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:25 IST)
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எகிப்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சீனாவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தை வளர்ச்சியில் பின்தங்கிய ஏழை நாடுகளால் எதிர்கொள்ள முடியாது என்ற அச்சத்தின் காரணமாகவே, இதை உலக சுகாதார அவசர நிலையாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்தது.
 
"இந்த பிரகடனத்துக்கு சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கமே முக்கிய காரணம். வலுவற்ற சுகாதார அமைப்பை கொண்டுள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் என்னவாகும் என்பதே எங்களது அச்சத்துக்கு முக்கிய காரணம்" என்று கூறுகிறார் எத்தியோப்பியாவை சேர்ந்தவரும், உலக சுகாதார அமைப்பின் தலைவருமான டெட்ரோஸ் அடனோம்.
 
ஏற்கனவே இருக்கும் சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கே திணறி வரும் ஆப்பிரிக்க நாடுகளால், போன்ற அதிவேகமாக பரவி உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய கொரோனா வைரஸ் அளிக்கும் சவாலை சமாளிக்க முடியுமா?
 
கொரோனா வைரஸின் தொடக்க நிலையை எதிர்கொள்வதற்கு தேவையான வசதிகளை சில ஆப்பிரிக்க நாடுகள் கொண்டிருப்பதாக கூறுகிறார் ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான மைக்கேல் யாவ்.
 
"ஆப்பிரிக்க கண்டத்தில் சுகாதார வசதிகள் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். ஏற்கனவே பலவிதமான நோய்களை சமாளிக்க முடியாமல் ஆப்பிரிக்க நாடுகள் தத்தளித்து வருகின்றன. எனவே, எங்களைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிவது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும்."
 
இப்போது என்னென்ன வசதிகள் உள்ளன?
 
சென்ற வாரம் வரை, ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திலேயே, கொரோனா வைரஸின் தாக்கத்தை கண்டறிய கூடிய வசதிகளை வெறும் இரண்டு பரிசோதனை மையங்களே பெற்றிருந்தன.
 
நீண்டகாலமாக ஆப்பிரிக்காவில் ஏற்படும் மோசமான நோய்த்தாக்குதல்கள் குறித்து பரிசோதனை மற்றும் ஆய்வு செய்யும் இந்த மையங்கள் செனகல் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருக்கின்றன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக, கானா, மடகாஸ்கர், நைஜீரியா, சியாரா லியோன் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.
 
மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள 29 பரிசோதனை மையங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வருகிறது.
 
இதன் மூலம், இந்த மாதத்தின் இறுதிக்குள் குறைந்தது 36 ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய கூடிய மருத்துவ கருவிகள் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.
 
கொரோனா வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளதாக தி நைஜீரியன் ரெட் கிராஸ் சொசைட்டி தெரிவித்துள்ளது.
 
தான்சானியாவின் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
கென்யா, எத்தியோப்பியா, ஐவோரி கோஸ்ட், போட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் அறிகுறியுடன் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை.
 
சீனா உள்ளிட்ட கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளிலிருந்து தங்களது நாட்டிற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்களை இரண்டு மருத்துமனைகளிலும், சிலரை அவர்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தியுள்ளதாக உகாண்டாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இபோலா தாக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன?
 
2014-16ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவை புரட்டிப்போட்ட இபோலா வைரஸ் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்.
 
இந்நிலையில், இபோலா வைரஸ் தாக்கத்தின்போது ஆப்பிரிக்காவில் பணியாற்றிய ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான மைக்கேல் யாவ், இன்னமும் கூட ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா போன்ற உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள கூடிய அளவுக்கு சுகாதார வசதிகள் இல்லையென்று கவலை தெரிவிக்கிறார்.
 
"கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தொடக்க நிலையிலேயே அடையாளம் காண்பதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆப்பிரிக்க நாடுகளை வலியுறுத்தி வருகிறோம். இதன் மூலம், கொரோனாவின் பரவலை மட்டுப்படுத்த முடியும்."
 
தங்களது நாடுகளுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளையும் ஆப்பிரிக்க நாடுகள் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றன. இபோலா வைரஸ் தாக்குதலை எதிர்கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் இன்னமும் கூட அதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை பராமரித்து வருவது ஆறுதல் தரும் விடயமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இபோலாவுக்கு மருத்துவம் அளித்ததன் மூலம், பரவ கூடிய நோய்களை கட்டுப்படுத்துவதில் நிபுணத்துவமும் அந்நாடுகளுக்கு உள்ளன.
 
இருப்பினும், இபோலா மற்றும் கொரோனா ஆகிய வைரஸ்கள் வேறுபட்ட அமைப்பை கொண்டிருப்பதால், அவற்றை இனம் காண்பதில் பிரச்சனை நிலவுகிறது. மேலும், ஒருவருக்கு எபோலா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பிறகே அது மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது, ஆனால் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்படுவதற்கு முன்னரே அது மற்றவர்களுக்கு பரவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சீனாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால், இருதரப்பினருக்குமிடையே போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. எனவே, சீனாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
 
விமானப் போக்குவரத்தும், எண்ணற்ற பயணங்களுமே ஆசியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருப்பதால், அதே வகையில் இது ஆப்பிரிக்காவிலும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்க மையத்தின் இயக்குநர் ஜான் கென்கசோங், நேச்சர் சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ளார்.
 
"2002ஆம் ஆண்டு சீனாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டுந்தான் ஆப்பிரிக்காவுக்கு அந்த நோய்த்தொற்றோடு வந்திருந்தார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் சீனாவுக்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து 600 சதவீதம் அதிகரித்துள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் இருமார்கங்களிலும் சீனாவுக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. எகிப்து, கென்யா, மொராக்கோ, ருவாண்டா உள்ளிட்ட நாடுகளின் விமான சேவை நிறுவனங்கள் சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. ஆனால், ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் சீனாவுக்கு தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகிறது.
 
சீனாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள 13 ஆப்பிரிக்க நாடுகள் பயண தடைகளை அமல்படுத்துவதை விடுத்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அடையாளம் காணப்பட்டுள்ள 13 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வார இறுதிக்குள் பார்வையாளர்களை நியமிப்பதற்கு அது திட்டமிட்டுள்ளது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காய்கறி விலை கடும் வீழ்ச்சி! – கிலோ கணக்கில் அள்ளி சென்ற மக்கள்!