Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ்: "இந்தியாவில் மே மாதம் 38-48 லட்சத்தை தொடும் பாதிப்புகள்"

Advertiesment
கொரோனா வைரஸ்:
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (12:28 IST)
(இன்று 26.04.2021 திங்கட்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த 10 நாட்களுக்குள், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மே 4 - 8 தேதிக்குள் சுமார் 3.4 லட்சம் முதல் 4.4 லட்சத்தை தொடும் என்றும், ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை மே 14 - 18 தேதிகளுக்குள் 38 - 48 லட்சத்தைத் தொடும் என ஐஐடி விஞ்ஞானிகள் கணித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது.

இம்மாதிரியான கணிப்புகளால் கொள்கை முடிவு எடுப்பவர்கள் போதுமான, மருத்துவ ரீதியிலான ஏற்பாடுகளைச் செய்ய உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார் ஐஐடியைச் சேர்ந்த மனிந்த்ர அகர்வால்.

நேற்று (ஏப்ரல் 25, ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் சுமார் 3.5 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 2,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 25-ம் தேதி காலை நிலவரப்படி 26.8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு (ஆக்டிவ் கேஸ்) சிகிச்சையில் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

தேசிய கல்விக் கொள்கை: தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல

தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
webdunia

கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயா்க்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதில் தமிழ் மொழிக்கான மொழிபெயா்ப்பு இடம்பெறவில்லை. புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் இருந்துவரும் சூழலில் தற்போது அதன் மொழிபெயா்ப்பில் கூட தமிழ் மொழி இடம் பெறாதது சா்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதற்கு தமிழ் ஆா்வலா்கள், கல்வியாளா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து தமிழ் மொழியிலும் தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில் "தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல.

மேடைப்பேச்சில் திருக்குறளை, பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே. நிஜத்தில் தமிழ் நிலத்தின் பண்பாட்டின் மீது படையெடுப்பதும், உரிமைகளை வேரறுப்பதுமே தொடர்கிறது" என குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து 20 நோயாளிகள் தப்பியோட்டம்

மராட்டிய மாநிலத்தின் யவத்மால் மாவட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாக தினத்தந்தியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டம் அம்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சஞ்சய் புரம் தலைமையில் கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், அந்த கிராமத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் காட்டாஞ்சலி தாலுகாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

அந்த முகாமில் இருந்த அம்டி கிராமத்தை சேர்ந்த 19 பேர் மற்றும் மேலும் ஒருவர் என மொத்தம் 20 நோயாளிகள் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சஞ்சய் புரத்திற்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தப்பி ஓடிய 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து யவத்மால் மாவட்ட ஆட்சியர் அமோல் யெட்கே கவலை தெரிவித்துள்ளார். "இதுபோன்ற மோசமான நடத்தை தொடர்ந்தால், மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு வழக்குகள் கடுமையாக உயரும். தப்பி ஓடிய நோயாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கும் நாசா: எதற்குப் பயன்படும்?