Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம்

, புதன், 10 பிப்ரவரி 2021 (09:17 IST)
கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்பதைக் கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு.

"கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை" என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின்  தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கூறியுள்ளார்.
 
"கொரோனா வைரஸின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்க நிறைய வேலை செய்ய வேண்டி இருந்தது" எனக் கூறியுள்ளார் எம்பரேக்.
 
சீனாவின் மேற்கே இருக்கும் ஹூபே பிராந்தியத்தில் வுஹானில் தான் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு  இன்று சுமாராக 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் அவ்வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதே வைரஸால்  இறந்திருக்கிறார்கள்.
 
"இந்த ஆய்வு சில முக்கிய விவரங்களை வெளியில் கொண்டு வந்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விஷயங்களில் அது தலைகீழ்  மாற்றங்களைக் கொண்டுவரவில்லை" என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் மருத்துவர் எம்பரேக்.
 
கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு மத்தியில் பரவுவதற்கு முன், முதலில் விலங்குகளிடம் தோன்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் அது எப்படி  சாத்தியம் என அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
 
"கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்க முயன்ற போது, அது இயற்கையான தோற்றுவாயாக வெளவால்களைக் காட்டின. இது சீனாவின் வுஹானில்  நடந்தது" என்றார் மருத்துவர் எம்பரேக்.
 
சீனாவின் வுஹானில், அதிகாரபூர்வமாக முதல் கொரோனா வைரஸ் நோயாளி டிசம்பர் 2019-ல் அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பு வரை அப்பகுதியில் கொரோனா  வைரஸ் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
"கொரோனா வைரஸ் வுஹானில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், மற்ற பிராந்தியங்களில் இருந்திருக்கலாம்" என சீனாவின் சுகாதார ஆணையங்களின் நிபுணர்  லியாங் வன்னியன் கூறினார்.
 
சிக்கலான பணி
 
மிஷெல்லி ராபர்ட்ஸ், பிபிசி சுகாதார ஆசிரியர்
 
உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு செயல்படத் தொடங்கிய பின், கொரோனா பரவத் தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு, கொரோனா வைரஸின்  தோற்றுவாயை சீனாவில் குறிப்பிட்டுக் கூறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிபுணர்கள் குழு, வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியைச் சென்று  பார்வையிட்ட பிறகு, கொரோனா வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்து கசிந்தது அல்லது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்கிற கோட்பாட்டுக்கு முற்றுப் புள்ளி  வைத்திருக்கிறது.
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் உடன் தொடர்புடைய, தற்போது உலகப் புகழ் பெற்றிருக்கும் ஹுனான் கடல் உணவு சந்தைக்கும் இந்த  நிபுணர்கள் குழு ஆதாரத்தையும் தடயத்தையும் தேடிச் சென்றது.
 
கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என நிபுணர்கள் குழு கூறுகிறது. ஆனால் அவர்களிடம் அதற்கான ஆதாரம் இல்லை.
 
கொரோனா வைரஸ் பரவ வெளவால்கள் மற்றும் பங்கோலின் என்றழைக்கப்படும் எறும்புண்ணிகள் காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் அதற்கும் இதுவரை ஒரு  தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் பதப்படுத்தப்பட்ட உறைந்த உணவுகள் வழியாக பரவி இருக்கலாம் எனவும் விசாரிக்கப்படுகிறது.  உண்மையை அறிந்து கொள்வதற்கான தேடல் தொடரும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதிய பலன் இல்லை… கொரோனா தடுப்பூசிக்கு தடை விதித்த நாடு!