தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களை பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி புதிய வழிமுறை, 'பரிசோதனை அடிப்படையில்' மேற்கொள்ளப்படவுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 12 ஆயிரம் படுக்கை வசதிகள் உருவாக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், "கொரோனா பரவலை தடுக்கும் நோக்குடன் கடந்த வார இறுதியில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் சில கூடிய சில பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கையை மட்டுமே அரசால் நம்பியிருக்க முடியாது," என்று கூறினார்.
"அடுத்த சில நாட்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் குறிப்பிட்ட சில கடைகளில் சிறிய இடவசதி உள்ள இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு அளவு பரவாயில்லை என்று கருதி யாரும் ஆபத்தை விலை கொடுத்து வாங்கக்கூடாது."
புதிய வழிமுறை
"எந்தவொரு பாதிப்பு உறுதியானாலும் முதலில் அந்த நோயாளியை பரிசோதனை கூடத்துக்கு அழைத்துச் சென்றோ சிடிஎஸ், திருவொற்றியூர், ஈஎஸ்ஐ, மாதவரம் மருத்துவமனை, என்எஸ்ஐடி கிண்டி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றோ அவர்களின் எக்ஸ்ரே, ரத்த மாதிரி பரிசோதனையை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் பாதிப்பின் அளவு தரம் பிரிக்கப்பட்டு அதிக பாதிப்புள்ளவர்கள் கண்டறியப்பட்ட பிறகு அவர்களை அரசு மருத்துவமனைகளில் சேர்த்து நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது," என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
"அந்தந்த பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள வைரஸ் பரவல் நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்படும். தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 12 ஆயிரம் கூடுதல் கோவிட் படுக்கை வசதிகள் இந்த வாரத்தில் அமைக்கப்படும். சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இந்த கூடுதல் வசதிகள் உருவாக்கப்படும்," என்று அவர் கூறினார்.
அரசு அறிவித்துள்ள பரிசோதனை மையங்களுக்கு பதற்றமின்றி மக்கள் பரிசோதனை செய்து கொள்ள வரலாம். கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்கள் தொடர்ந்து சந்தேகம் கொள்ளாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.