Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் சிறுபான்மை சமூகத்துக்கு தொடரும் அச்சுறுத்தல்: ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்

இலங்கையில் சிறுபான்மை சமூகத்துக்கு தொடரும் அச்சுறுத்தல்: ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்
, வியாழன், 18 மார்ச் 2021 (00:33 IST)
மத, இனம் மற்றும் இனங்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக கைது செய்யப்படுவோரை, இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் மூலம் மார்ச் முதல் தேதி வெளியிடப்பட்ட 2021ஆம் இலக்க சரத்துக்களின் பிரகாரம் இந்த சரத்துக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
 
இந்த சரத்துக்களின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அடிப்படை உரிமைகளை மீறி, மத மற்றும் சிறுபான்மை இனங்களை இலகுவாக இலக்கு வைக்க இடமளிக்கின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கான கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், பொறுப்புக் கூறலை ஊக்குவிப்பதற்குமான ஒரு தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் பரிசீலித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்ப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
மத, இன மற்றும் சிறுபான்மையினரை, சித்திரவதைக்குள்ளாக்கும் வகையில், நீண்ட கால விசாரணைகளின் இன்றி தடுத்து வைக்கும் நடவடிக்கை அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவிக்கின்றார்.
 
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் வலுவை குறைத்து, ஐக்கிய நாடுகளின் கரிசணைகளை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, ராஜபக்ஷ நிர்வாகம் அதனை பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்கின்றது என அவர் கூறுகின்றார்.
 
விசாரணைகளுக்கு பதிலாக சந்தேகநபர்கள் வேறொரு இடத்தில் ஒரு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
இந்த உத்தரவை இரண்டு வருடங்கள் வரை நீடிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரம் உடையவர் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், இஸ்லாமிய மதத்தவர்கள் முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதை தடை செய்யும் வகையிலான திட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, மார்ச் மாதம் 12ம் தேதி அறிவித்திருந்தார்.
 
தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, இந்த விடயத்தை அவர் நியாயப்படுத்தியதாகவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.
 
அதேபோன்று, நாட்டிலுள்ளள 1000திற்கும் அதிகமான இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கான எண்ணத்தையும் அவர் வெளிப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
 
இந்த நடவடிக்கைகளானது, மத சுதந்திரத்திற்கான உரிமையை கடுமையாக மீறும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து, ராஜபக்ஷ நிர்வாகம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களை பயன்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
 
அதேவேளை, சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக வன்முறை மற்றும் பாகுபாட்டை தூண்டுவோருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையிலுள்ள சிறியளவிலான கிறிஸ்தவ சமூகமும் குறி வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்படுகின்றது.
 
'' நீங்கள் பேஸ்புக்கில் எதையும் எழுத முடியாது" என மனித உரிமை கண்காணிப்பகத்தின் கிறிஸ்தவ சமூக ஆர்வலர் தெரிவிக்கின்றார்.
 
''எதுவும் நடக்கலாம். நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. எந்தவொரு காரணங்களின் கீழும் உங்களை பிடிக்கலாம்" என அவர் குறிப்பிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
 
ராஜபக்ஸ அரசாங்கம், சுமார் ஒரு வருட காலமாக கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக, அவர்களின் உடல்களை தகனம் செய்து வந்ததையும் அந்த அறிக்கையின் ஊடாக மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.
 
இந்த விடயத்தில் எந்தவொரு அடிப்படையும் இல்லை என்ற போதிலும், சுகாதார பாதுகாப்பு கொள்ளை அவசியம் என கூறி, அரசாங்கம் இதனை செய்து வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறான சூழ்நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், மார்ச் மாதம் இந்த கொள்கை கைவிடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையிலான பரிசீலனைகளை ஜெனீவாவிலுள்ள ஐநா மனித உரிமை பேரவை மேற்கொண்டு வருவதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.
 
 
இதில், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள், உள்நாட்டு யுத்தத்தில், யுத்தக் குற்றங்கள் மற்றும் வேறு கடுமையான துஷ்பிரயோகங்களில் சிக்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என இலங்கைக்கு எதிராக வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.
 
அதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்படுவதற்கான எந்தவொரு சட்டமும், சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு இணங்கி, அதனை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என இலங்கையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
 
இலங்கை அரசாங்கம் அண்மை காலமாக முன்னெடுத்த அடக்குமுறைகள், மனித உரிமை பேரவையில் ஒரு வலுவான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் கூறப்படுகின்றது.
 
இது எதிர்கால துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும், கடந்த கால அட்டூழியங்களுக்கு முன்பாகவே பொறுப்பு கூறவும் உதவும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.
 
ஐ.நாவின் உறுப்பு நாடுகள், ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஏற்று செயற்பட வேண்டும் என அதில் கூறப்படுகின்றது.
 
இதேவேளை, தடைகளை மீறிய இலங்கை அதிகாரிகள் மீது, பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்களை விதிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பிலான பிரிவு, ஐரோப்பிய ஒன்றியம், இன்டர்போல் மற்றும் ஏனைய தரப்பினர், பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பாட்டிற்காக 4.5 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டமொன்றை இலங்கையுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
 
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பிலான கொள்கை வகுக்கப்படும் வரை, அவர்களுடனான இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
 
இலங்கையின் புதிய விதிமுறைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், ஏற்கனவே துன்புறுத்தல், அச்சுறுத்தல்களுக்கு உள்ளான அரசாங்க விமர்சகர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கங்குலி குறிப்பிடுகின்றார்.
 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை, இந்த துஷ்பிரயோகங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் வகையிலான தெளிவாக செய்தியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம் - கமல்ஹாசன்