Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிஎஸ்பிபி பள்ளியில் சீட் தர பணம் - பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்!

Advertiesment
பிஎஸ்பிபி பள்ளியில் சீட் தர பணம் - பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்!
, வெள்ளி, 24 ஜூன் 2022 (15:06 IST)
சென்னையில் பிரபலமான பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கித் தருவதற்காக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மதுவந்தி ரூ.6 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டதாகக் கூறி தி.நகரைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்பவர் சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

 
ஆனால் கிருஷ்ணபிரசாத்திடம் பணம் எதுவும் பெறவில்லை என்றும் தன்மீது அவதூறு பரப்புவதற்காக அவர் மீது புகார் தொடுக்கவுள்ளதாகவும் மதுவந்தி தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையரிடத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரில், பிஎஸ்பிபி பள்ளியில் சீட் பெற்றுத் தருவதற்காக தன்னிடம் மதுவந்தி இதுவரை ரூ.19 லட்சம் பணம் பெற்றதாகவும் பள்ளியில் சீட் கிடைக்காத மாணவர்களின் பெற்றோர் தன்னிடம் பணம் கேட்பதால் மதுவந்தி மீது புகார் அளித்துள்ளதாகவும் கூறுகிறார் கிருஷ்ணபிரசாத்.
 
தமிழ்நாடு பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான மதுவந்தி, கிருஷ்ணபிரசாத்தின் புகார்கள் முற்றிலும் பொய் என பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கிருஷ்ணபிரசாத்தின் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் முத்துக்குமார், ''கிருஷ்ணபிரசாத் நிர்வகிக்கும் கோவிலுக்கு 2019 முதல் மதுவந்தி வந்துள்ளார். அங்கு கிருஷ்ணாபிரசாத்திடம் பிஎஸ்பிபி பள்ளியை தான் நிர்வகித்து வருவதாகவும் அங்கு சீட் பெற்றுத் தர தலா ரூ.3 லட்சம் தந்தால், சீட் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். 
 
இதையடுத்து, மார்ச் 2022ல் கிருஷ்ணாபிரசாத், கோவிலுக்கு வரும் எட்டு பெற்றோர்களிடம் ரூ.19 லட்சம் பணம் வாங்கி மதுவந்தியிடம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக பள்ளியில் இடம் கொடுக்கப்படவில்லை என்பதால், பெற்றோர் கிருஷ்ணபிரசாத்திடம் கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்,'' என்றார்.
 
மேலும், பெற்றோர் பணத்தைத் திருப்பிக் கேட்பதைப் பற்றி மதுவந்தியிடம் பேசியாதால் ரூ.13 லட்சத்தை மட்டும் கிருஷ்ணபிரசாத்துக்கு திருப்பி கொடுத்துள்ளார் என்கிறார் வழக்கறிஞர் முத்துக்குமார். ''மீதமுள்ள ரூ.6 லட்சத்தை கிருஷ்ணபிரசாத் கேட்டபோது, அவரை தி.நகர் பூங்காவிற்கு வரவழைத்து ஆட்களை வைத்துத் தாக்கியுள்ளார். இதுபற்றி புகார் கொடுத்தபோதும், பாண்டி பஜார் காவல்நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தற்போது காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது,'' என வழக்கறிஞர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் தன் மீது அவதூறு பரப்புவதற்காக கிருஷ்ணபிரசாத் மீது புகார் கொடுக்கவுள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் மதுவந்தி. ''கிருஷ்ணபிரசாத் சொல்வதைப் போல நான் பணம் வாங்கவில்லை. எனக்குப் பணம் வாங்கவேண்டிய தேவையில்லை. அவர் என் பெயரைச் சொல்லி பணம் வாங்கியுள்ளார். அவர் சொல்வதெல்லாம் பொய். பிஎஸ்பிபி எங்கள் பள்ளி. நான் எதற்குப் பணம் வாங்கவேண்டும்? கிருஷ்ணபிரசாத் என்னுடைய நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். அது தவிர எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,'' என மதுவந்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
கிருஷ்ணபிரசாத்திடம் பணம் வாங்கக்கூடாது என நான்கு மாதங்களுக்கு முன்னதாக எச்சரித்துள்ளதாக மதுவந்தி கூறுகிறார். ''கிருஷ்ணபிரசாத் எங்கள் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். அவரை ஏற்கெனவே எச்சரிக்கை செய்துள்ளேன். ஆனால் இந்த முறை அவர் நடந்துகொண்டதைப் பார்க்கும்போது, அவர் மீது கண்டிப்பாகப் புகார் கொடுக்க வேண்டும் என முடிவுசெய்துவிட்டேன். என் வழக்கறிஞர் மூலம் விரைவில் புகார் கொடுப்பேன்,'' எனத் தெரிவித்தார் மதுவந்தி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும், அப்போ வெடிக்கும்: சிவி சண்முகம்!