பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருமாவளவன் அறிக்கை.
பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாஜக விளக்க கடிதம் வெளியிட்டதோடு, தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது. ஆனாலும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரும் அழுத்தமாக மாறி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, பாஜவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும், சமூக வலைத்தளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபியை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.
கத்தார் அரசு இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்துள்ளது. குவைத், கத்தார், ஈரான் ஆகிய நாடுகள் இந்திய தூதரை நேரில் அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.
உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி மதரீதியாக பதற்றத்தை உருவாக்கி மிகப் பெரிய வன்முறை கலவரத்தை தூண்டுவதாக அமைந்துள்ள பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.