Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை "தமிழர் பூமி" சர்ச்சையாகும் விக்னேஷ்வரனின் உரை!!

இலங்கை
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:01 IST)
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன், நாடாளுமன்றத்தில் முதல் நாள் அமர்வில் வெளியிட்ட கருத்து இன்று மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.
 
தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சி.வி. விக்னேஷ்வரனின் கருத்து நேற்றைய தினம் (20) அமைந்திருந்தது. "இலங்கை நாடானது தமிழர் பூமி" எனவும், "இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள்" எனவும், "தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி" எனவும் விக்னேஷ்வரன் நேற்றைய தினம் உரை நிகழ்த்தியிருந்தார்.
 
இந்த கருத்து முற்றிலும் தவறானது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று (21) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று கூடியதும், மனுஷ நாணயக்கார ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிப்பேசினார்.
 
நாடாளுமன்றத்தில் சத்தியபிரமாணம் செய்துகொள்ளும் போது இந்த நாட்டில் தனி இராஜ்ஜியம் நிறுவுவதற்கோ, அவ்வாறான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் நிதி பங்களிப்பு வழங்கும் நடவடிக்கைகளுக்கோ ஈடுபட மாட்டோம் என்ற அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து "அனைவரும் இலங்கையர்கள்" என்ற ரீதியில் ஒன்றிணைந்து பயணிக்க நினைக்கும் இந்த தருணத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் வெளியிட்ட கருத்து மிக மோசமானது" என மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
 
இலங்கை, தமிழர் பூமி எனவும், இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் எனவும், தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி எனவும் சி.வி.விக்னேஷ்வரனினால் கூறப்பட்ட கருத்து, நாடாளுமன்ற ஹன்சார்ட் பதிவிற்கு சென்றுள்ளதாக கூறிய அவர், அது தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த பூமி யாருடையது, யார் பூர்வீக குடிகள் என்பது தொடர்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகள் இருக்கலாம் என மனுஷ நாணயக்கார தெரிவித்தார். எனினும், அந்த நிலைப்பாடானது, இலங்கை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் பதிவாகக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்தார்.
 
அதனால், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் வெளியிட்ட கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுஷ நாணயக்கார சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கோரியுள்ளார்.
 
இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராயப்படும் என கூறியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

180 மில்லியன் பான் கார்டுகள் செயலிழக்கும் அபாயம்: எச்சரிக்கும் ஐடி!