Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருவநிலை மாற்ற ஆய்வறிக்கை: சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள் கடலில் மூழ்கும் ஆபத்து

பருவநிலை மாற்ற ஆய்வறிக்கை: சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள் கடலில் மூழ்கும் ஆபத்து
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (14:26 IST)
சமீபத்தில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழுவின் (ஐபிசிசி அறிக்கையில் உலகின் வெப்பநிலையைக் குறைக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால், தாழ்வான நிலப்பகுதிகள் பல கடலுக்குள் மூழ்கும். தமிழ்நாட்டிற்கு இது எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்?

ஐபிசிசியின் (Intergovermental Panel on Climate Change) அறிக்கை ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று வெளியானது. புவி வெப்பமடைதல் காரணமாக உலகின் சில பகுதிகள் வாழமுடியாததாக மாற்றிவிடும் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

பல நாடுகள் இந்த அறிக்கையால் பெரும் கவலையடைந்திருக்கின்றன. வெப்ப அலைகள் ஏற்படுவதோடு அதிக மழையும் வறட்சியும் மிகப் பரவலாகவும் தீவிரமாகவும் ஏற்படுமென்று இந்த அறிக்கை கூறுகிறது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர் இதனை "மனித குலத்துக்கான அபாயக் குறியீடு" என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்களே காரணம் என்பதற்கு "தெளிவான" ஆதாரம் இருப்பதாக ஐபிசிசியின் அறிக்கை கூறுகிறது. அடுத்த இரண்டு தசாப்தங்களுக்குள், தொழில் புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி அளவுக்கு வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இது கடல் மட்டம் சராசரியாக அரை மீட்டர் அளவு வரை உயர வழிவகுக்கும், ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதியில் 2 மீட்டர் உயரம் கூட அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்தியாவில் நீண்ட கடற்கரையைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடும் இதில் கவலைப்பட நிறைய இருக்கிறது.

"வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் வரவிருக்கும் ஆண்டுகளில் சராசரியாக கடல் மட்டம் இரண்டு மீட்டர் அளவுக்கு உயரும் என்கிறார்கள். அப்படியானால், கிட்டத்தட்ட 6 அடி அளவுக்கு கடல் மட்டும் உயரும். அப்படி உயர்ந்தால், சென்னையின் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கும். அதிலிருந்து கன்னியாகுமரிவரை எத்தனை கிலோ மீட்டர் பகுதிகள் நீரில் மூழ்கும் என்று பாருங்கள்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி. சுந்தர்ராஜன்.

இதற்கிடையில் ஐபிசிசி அளித்த தகவல் தொகுப்பை வைத்து, அமெரிக்காவின் நாசா, உலகில் உள்ள கடலோரப் பகுதிகள், எந்த ஆண்டில், எந்த அளவுக்கு மூழ்கும் எனக் கூறியுள்ளது.

அதன்படி பார்த்தால் தூத்துக்குடி பகுதியில் கடல் மட்டம் 2030ல் 70 மில்லி மீட்டர் அளவுக்கு உயரும். 2050ஆம் ஆண்டில் 170 மில்லி மீட்டர் உயரும். 2100ல் 59 சென்டி மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரும்.

சென்னையைப் பொருத்தவரை, 2030ல் 70 மில்லி மீட்டர் அளவுக்கும் 2050ஆம் ஆண்டில் 170 மில்லி மீட்டர் உயரும். 2100ல் 57 சென்டி மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரும். 2150ஆம் ஆண்டில் 1.03 மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாசாவின் வரைபடத்தின் படி பார்த்தால், கடல் மட்டம் உயர்வது தமிழக கடற்கரையோரப் பகுதிகளைப் பொறுத்தவரை பெரிய மாற்றமின்றி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. சுமார் 130 ஆண்டுகளில் ஒரு மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரக்கூடும்.

"இப்படி கடல்மட்டம் உயர்வதால், கரையோரப் பகுதிகள் மூழ்கிவிடுவது மட்டுமல்லாமல் வேறு சில பயங்கர விளைவுகளும் ஏற்படும். மீதமுள்ள நிலப்பரப்பு அடிக்கடி வெள்ளப்பெருக்கைச் சந்திக்கும். நிலத்தடியில் கடல் நீர் உட்புகும்" என்கிறார் சுந்தர்ராஜன்.

பழவேற்காட்டிலிருந்து கன்னியாகுமரி வரை நீண்ட நிலப்பரப்பைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு இது நல்ல செய்தி இல்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிமாச்சலப் பிரதேச நிலச் சரிவில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு