Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸுக்கு பின்பு பருவநிலை மாற்றம்: தலைக்கு மேல் தொங்கும் பருவநிலை அபாயம்

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (15:27 IST)
இந்தியா தனது முதல் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையை கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெளியிட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பரவிய பிறகு, பொருளாதார இழப்பை மீட்டெடுக்க இந்தியா நிலக்கரியையே நம்புகிறது.

பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமான நிலக்கரித் துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

புவி அறிவியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய பருவநிலை மாற்றம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியாவில் ஏற்கனவே தீவிர வானிலை மற்றும் பருவநிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உலக அளவில் மனிதர்களின் நடவடிக்கைகளே பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள் மேற்கொள்ளும் தவறுகளில் மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்ட வேண்டியது புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது, அவற்றில் நிலக்கரி மிகவும் ஆபத்தானது.

நிலக்கரி, பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கரியமில வாயுவை அதிக அளவில் வெளியேற்றும். கரியமில வாயு வளிமண்டலத்தில் வெப்பத்தை அதிகரிக்க செய்து, புவி வெப்பமாதலுக்கும், பருவநிலை மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.

உலகிலேயே அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு பிறகு அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடாக இந்தியா விளங்குகிறது. மேலும் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தியாவின் நிலப்பரப்பு அமைந்துள்ளது.

தீவிரமடையும் வானிலை

தீவிர தண்ணீர் பற்றாகுறை, வறட்சி, அதிக மழை பொழிவு, கடுமையான புயல் என வானிலை நிலவரம் கடுமையாக உள்ளது என்று இந்தியாவின் முதல் பருவநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

நாடு முழுவதும் தற்போது நிலவும் சராசரி வெப்பநிலை மேலும் நான்கு டிகிரி அதிகரிக்கும் என்றும் கோடை காலத்தில் வெப்பத்தின் அளவு மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகும் கரியமில வாயுவின் அளவு இன்னும் அதிகரித்தால் இந்த நுற்றாண்டுக்குள், ஒரு தசாப்த காலத்தில் இரண்டு முறை கடுமையான வறட்சி ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான வானிலை பாதிப்புகள் அனைத்து துறையின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேகமாக ஏற்படும் வானிலை மாற்றங்களால் இந்தியாவின் கட்டமைப்பு, விவசாய உற்பத்தி, நீர் ஆதாரங்கள், சுற்றுசூழல் அமைப்பு என அனைத்திலும் அழுத்தம் அதிகரிக்கும்.

"இவை நாட்டின் பல்லுயிர், உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, பொது சுகாதாரம் என பலவற்றில் மோசமான பாதிப்புகளை உண்டாக்கும்."

சராசரி உலக வெப்பநிலை, தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையோடு ஒப்பிடும்போது, இரண்டு டிகிரிக்கும் மேல் அதிகரிக்காமல் தடுக்கவேண்டும் என பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் உலக நாடுகள் உறுதிமொழி ஏற்றன. இந்த இலக்கை அடைய உலக நாடுகள் உறுதியளித்ததை விட ஐந்து மடங்கு அதிகமாக கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கும் வரை கரியமில வாயு உமிழும் அளவினை உலக நாடுகள் பலவும் கட்டுப்படுத்தும் என்றே கருதப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய பிறகு பல உலக நாடுகள் பல ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின. அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மீண்டுவர பல நாடுகள் முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதனால் கொரோனா வைரஸ் தொற்று குறையத் தொடங்கிய பிறகு கரியமில வாயு வெளியேற்றம் எதிர்பாராத அளவுக்கு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

1901 முதல் 2018 வரையில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை சுமார் 0.7 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது என இந்தியா வெளியிட்டுள்ள பருவநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தியாவில் 1951 முதல் 2016ம் ஆண்டு வரை இடம்சார்ந்த அளவில் வறட்சி கணிசமாக உயர்ந்துள்ளது".

கடந்த இரண்டு பதிற்றாண்டுகளில் காலம் கடந்த பருவமழை, கடுமையான சூறாவளி, புயல் ஏற்படுவது அதிகரித்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை தவிர்த்துவிட்டு பொருளாதார நெருக்கடி நிலையை சரிசெய்ய உலக நாடுகள் முயற்சிக்க கூடாது. மாறாக பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை இயற்றி அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும் என்ற கருத்தை உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரித்தனர்

ஆனால் பல நாடுகள் இந்த கருத்துடன் செய்லபடுவதில்லை. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் உலக நாடுகள் கவனம் செலுத்த மறுக்கின்றன.

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி

நிலக்கரி உற்பத்தியை அதிகரித்தால், மின் உற்பத்தி, எஃகு, அலுமினியம், சிமென்ட் மற்றும் உரங்கள் உற்பத்தியிலும் கணிசமான முன்னேற்றம் இருக்கும் என 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

2018ம் ஆண்டு, 675 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியா உற்பத்தி செய்தது. மேலும் பெரிய அளவில் நிலக்கரி கண்டறியப்பட்ட 16 மாவட்டங்களில், நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கி, உற்பத்தியில் ஈடுபட 500 பில்லியன் ரூபாய் நிதி முதலீடு செய்யப்படும் என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரி வாயுவாக மாற்றப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். ஆனால் இதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ளதா, அல்லது இதனை உருவாக்குவதற்கான முதலீடு எவ்வளவு என்ற கேள்வியும் உள்ளது.

தெற்காசியாவின் வானிலை நடவடிக்கைகளை கண்டறியும் குழுவின் மூத்த ஆலோசகர் ஷைலேந்திர யஷ்வந்த் கூறுகையில், ''எந்த வகை நிலக்கரியையும் தோண்டி எடுக்கவும் விற்கவும் தற்போது வகுக்கப்பட்ட கொள்கை வழிசெய்கிறது. ஆனால் கடந்த காலங்களில் குறைவான மாசுபாட்டை ஏற்படுத்தும் நிலக்கரி வகைகளை தோண்டி எடுக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுவந்தது '' என்கிறார்.

இந்தியாவில் மிக தரம் குறைந்த நிலக்கரி வகைகள் உள்ளதால், அவை அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் நிலைக்கு இந்த நடவடிக்கை இட்டுச் செல்லும் என்பது வருத்தம் அளிக்கிறது என்றும் ஷைலேந்திர யஷ்வந்த் குறிப்பிட்டார்.

மேலும் இந்தியா முதல் முறையாக பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் அபாயங்களை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட பிறகும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments