Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளியில் அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவுத் திட்டங்கள்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (09:30 IST)
மூன்று சீன விண்வெளி வீரர்கள், நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தில் ஆறு மாதப் பணியைத் தொடங்கியுள்ளனர்.


தன்னை ஒரு முன்னணி விண்வெளி சக்தியாக மாற்றுவதற்கான சீனாவின் சமீபத்திய முயற்சி இதுவாகும்.

டியாங்காங் விண்வெளி நிலையம் என்றால் என்ன?

கடந்த ஆண்டு, சீனா தனது டியாங்காங் அல்லது "சொர்க்க மாளிகை" எனப்படும் விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இந்த ஆண்டு இறுதிக்குள் மெங்ஷியான் அறிவியல் ஆய்வகம் போன்ற கூடுதல் தொகுதிகளை இதில் சேர்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு, ஷுவான்ஷியான் எனப்படும் விண்வெளி தொலைநோக்கியை சீனா ஏவவுள்ளது. இது விண்வெளி நிலையத்திற்கு அருகில் பறந்து, பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கும் எரிபொருள் நிரப்புவதற்கும் அதனுடன் இணைக்கப்படும்.

டியாங்காங் விண்வெளி நிலையம், தனக்கென மின்சக்தி, உந்துவிசை, உயிர் காக்கும் அமைப்புகள், குடியிருப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு விண்வெளி வீரர்களை அனுப்பியதுடன், விண்வெளி நிலையத்தையும் அமைக்கும் மூன்றாவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது சீனா.

டியாங்காங் விண்வெளி நிலையம் மிகப்பெரும் லட்சியங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. 2031 இல் செயலிழக்கப் போகும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) மாற்றாக இது இருக்கும் என சீனா நம்புகிறது.

நாசா அமைப்பு சீனாவுடன் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு அமெரிக்கச் சட்டம் அனுமதிக்காததால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீன வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

சந்திரன் மற்றும் செவ்வாய்க்குச் செல்ல சீனா திட்டம்

சீனாவின் லட்சியங்கள் விண்வெளி நிலையத்துடன் முடிந்துவிடவில்லை.

இன்னும் சில ஆண்டுகளில் பூமிக்கு அருகில் உள்ள ஆஸ்டிராய்ட்ஸ் எனப்படும் சிறுகோள்களில் இருந்து மாதிரிகளை எடுக்க சீனா திட்டமிட்டிருக்கிறது.

2030 ஆம் ஆண்டுவாக்கில், முதல் விண்வெளி வீரர்களை சந்திரனில் கால் வைப்பதை சீனா இலக்காகக் கொண்டிருக்கிறது. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலன்களை அனுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மற்ற நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

விண்வெளியில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பல நாடுகளும் சந்திரனை ஆய்வு செய்யும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன.

2025-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக கென்னடி விண்வெளி மையத்தில் தனது புதிய ராட்சத SLS ராக்கெட்டை சோதனை செய்துள்ளது.

ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் தங்களது சந்திர ஆய்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

இந்தியா தனது இரண்டாவது பெரிய நிலா ஆய்வுத் திட்டத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. 2030க்குள் தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் முயற்சி செய்கிறது.

நிலாவுக்குச் செல்லும் திட்டங்களில் நாசாவுடன் இணைந்து செயல்படும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, விண்வெளி வீரர்கள் பூமியுடன் தொடர்புகொள்வதை எளிதாக்கும் வகையில் சந்திர செயற்கைக்கோள்களின் வலையமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

விண்வெளிக்கான விதிகளை உருவாக்குவது யார்?

1967 ஆம் ஆண்டின் ஐநா விண்வெளி ஒப்பந்தம், விண்வெளியில் எங்கும் எந்த ஒரு நாடும் உரிமை கோர முடியாது என்று கூறுகிறது.

1979 ஆம் ஆண்டின் ஐநா சந்திரன் ஒப்பந்தம் விண்வெளியை வணிக ரீதியாக சுரண்டக்கூடாது என்று கூறுகிறது. ஆனால், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திட மறுத்துவிட்டன.

நாடுகள் எவ்வாறு சந்திரனின் கனிமங்களை கூட்டுறவு முறையில் எடுக்கலாம் என்பதை விவரிக்கும் தனது ஆர்ட்டெமிஸ் என்ற உடன்படிக்கையை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

விண்வெளிக்கான விதிகளை உருவாக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என்று கூறி ரஷ்யாவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடாது.

விண்வெளியில் சீனாவின் வரலாறு என்ன?

சீனா தனது முதல் செயற்கைக்கோளை 1970 இல் சுற்றுப்பாதையில் நிறுத்தியது. பண்பாட்டுப் புரட்சியால் ஏற்பட்ட தடைகளைக் கடந்து அந்த சாதனையை சீனா புரிந்தது.

அந்த நேரத்தில் விண்வெளிக்குச் சென்ற மற்ற நாடுகள் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் மட்டுமே.

கடந்த 10 ஆண்டுகளில் சீனா 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளது.

பாறை மாதிரிகளை சேகரித்து திருப்பி அனுப்புவதற்காக, சந்திரனுக்கு சாங்கே - 5 எனப்படும் ஆளில்லா விண்கலத்தை ஏற்கெனவே அனுப்பியுள்ளது. இது சந்திரனின் தரையில் சீனக் கொடியை நட்டது. இது முந்தைய அமெரிக்கக் கொடிகளை விட வேண்டுமென்றே பெரியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஷென்சோ 14 ஏவப்பட்டதன் மூலம், சீனா இதுவரை 14 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்கா 340 வீரர்களையும், சோவியத் ஒன்றியம் (இப்போது ரஷ்யா) 130க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்களையும் ஏற்கெனவே அனுப்பியிருக்கின்றன.

னாவின் விண்வெளித் திட்டங்களில் பின்னடைவுகளும் உண்டு. 2021 ஆம் ஆண்டில், ஒரு சீன ராக்கெட்டின் ஒரு பகுதி சுற்றுப்பாதையில் இருந்து விலகி அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. 2020-இல் இரண்டு ஏவுகணைகள் தோல்வியடைந்தன.

சீனாவின் விண்வெளி திட்டத்திற்கு செலவு செய்வது யார்?

சீனாவின் விண்வெளித் திட்டங்களில் குறைந்தது 3,00,000 பேர் பணியாற்றியுள்ளதாக சீன அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. தற்போது நாசாவில் பணிபுரிவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது 18 மடங்கு அதிகம்.

சீன தேசிய விண்வெளி நிர்வாகமானது 2003-ம் ஆண்டு இரண்டு பில்லியன் யுவான் (300 மில்லியன் டாலர்) தொடக்க பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டில், சீனா தனது விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. இப்போது இவை ஆண்டுக்கு 10 பில்லியன் யுவான் (1.5 பில்லியன் டாலர்) முதலீடு செய்வதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனா ஏன் விண்வெளிக்கு செல்கிறது?

தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து மேலாண்மை, வானிலை முன்னறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்டவற்றுக்காக தனது செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவத்தில் சீனா தீவிரமாக உள்ளது.

ஆனால் அதன் பல செயற்கைக்கோள்கள் ராணுவ நோக்கங்களைக் கொண்டுள்ளன. அவை எதிரி நாடுகளை உளவு பார்க்கவும், நீண்ட தூர ஏவுகணைகளை வழிநடத்தவும் உதவக்கூடும்.

நிலாவின் மேற்பரப்பில் இருந்து அரிதான உலோகங்களை பிரித்தெடுக்கும் வாய்ப்பு இருப்பதால் சீனா அங்கு செல்லத் திட்டமிடுகிறது.

இருப்பினும் அது சீனாவுக்கு ஆதாயமாக இருக்காது என நிபுணர்கள் கூறுகிறார்கள். உலகைக் கவர வேண்டும் என்ற நோக்கமே சீனா விண்வெளித் திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்துவதற்கான காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments