Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடகொரியாவுக்கு எச்சரிக்கை: எட்டு ஏவுகணைகளை ஏவிய தென் கொரியா, அமெரிக்கா!

வடகொரியாவுக்கு எச்சரிக்கை: எட்டு ஏவுகணைகளை ஏவிய தென் கொரியா, அமெரிக்கா!
, திங்கள், 6 ஜூன் 2022 (16:08 IST)
வடகொரியாவின் சரமாரியான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து திங்கள்கிழமை எட்டு ஏவுகணைகளை ஏவியுள்ளன.
 
ஏவுகணை சோதனைகளை வடகொரியா அதிகரித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகொரியாவின் எவ்வித தூண்டுதலுக்கும் தங்கள் அரசு கடுமையாக எதிர்வினையாற்றும் என, தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் தெரிவித்துள்ளார். "மக்களின் உடைமைகள் மற்றும் அவர்களின் உயிரை காப்பாற்றுவதில் எந்தவொரு விரிசலும் ஏற்படாமல் இருக்க நாங்கள் உறுதிசெய்வோம்," என அவர் தெரிவித்தார்.
 
சியோலில் நடைபெற்ற போர் நினைவு நிகழ்ச்சியில் பேசிய அவர், வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள், "கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மட்டுமல்லாமல் வடகிழக்கு ஆசியா மற்றும் ஒட்டுமொத்த உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகும் நிலைக்கு சென்றுள்ளது," என தெரிவித்ததாக, தென்கொரிய செய்தி முகமையான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இது வடகொரியாவை கோபப்படுத்துவதாக உள்ளது. வடகொரியா தன் கிழக்கு கடற்கரையில் சில ஏவுகணைகளை ஏவிய சில மணிநேரங்களில் திங்கள்கிழமை அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து எட்டு நிலப்பரப்பு ஏவுகணைகளை (surface-to-surface Army Tactical Missile Systems (ATACMS) ஏவியுள்ளன. இவற்றில் ஒரு ஏவுகணை அமெரிக்காவுடையது, ஏழு ஏவுகணைகள் தென்கொரியாவுக்கு சொந்தமானது ஆகும்.
 
அமெரிக்காவின் ஆயுத உதவி மூலம் தென்கொரியா தன் பலத்தைக் காட்டும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடமிருந்துவரும் இரண்டாவது பதிலடி இதுவாகும். கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு விட்டு அமெரிக்கா திரும்பிய சில மணிநேரங்களில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவியிருந்த நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்கா, தென் கொரியா ஏவுகணைகளை ஏவியிருந்தன.
 
தென் கொரியாவின் முந்தைய அரசு நிர்வாகத்தில் இத்தகைய பதிலடிகள் அரிதானதாகவே இருந்தன. கடந்த மே மாதம் தான் தென் கொரிய அதிபராக பதவியேற்ற யூன், வட கொரிய விவகாரத்தில் கடும் நிலைப்பாட்டை எடுப்பதாக உறுதிபூண்டுள்ளார். சமீப மாதங்களில் வடகொரியா டஜன் கணக்கில் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ஏவப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையும் ஒன்றாகும்.
 
வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்துவதற்கு ஐ.நா தடை விதித்துள்ளது. மேலும், அதன் முந்தைய சோதனைகளுக்காக கடும் தடைகளையும் விதித்துள்ளது.
 
 
கடந்த சில மாதங்களாக ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மேலும், அதற்கு எதிராக தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பலத்துடனும் வலுவாகவும் எதிர்வினையாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் ஒரு சுழற்சி உருவாக தொடங்கியுள்ளது.
 
கடந்த வார இறுதியில் அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல் ஒன்று, தென் கொரியாவின் கடற்படை பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. அதற்கு மறுநாள், வட கொரியா எட்டு ஏவுகணைகளை ஏவியது. அதற்கு அடுத்த நாள் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து அதற்கு பதிலடியாக எட்டு ஏவுகணைகளை ஏவியது.
 
இத்தகைய பதிலடிகள் என்ன சாதித்துவிடும் என கேள்விகள் எழுகின்றன. இந்த பதிலடிகள் தென் கொரியாவை பாதுகாப்பானதாக மாற்றுமா? இந்த பதிலடிகள், வட கொரியா ஏவுகணை சோதனைகளை குறைத்துக்கொள்ளவோ அல்லது அதன் போக்கை மாற்றவோ வழிவகுக்குமா?
 
வடகொரியாவை அணுசக்தி பேச்சுவார்த்தையை நோக்கி சமாதானப்படுத்துவதே அமெரிக்காவின் உண்மையான சவாலாக உள்ளது. வடகொரியாவுக்கான அமெரிக்காவின் அணுசக்தித் தூதர், தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் ஆனால் அதற்கு வடகொரியா ஆர்வம் காட்டவில்லை எனவும், வெள்ளிக்கிழமை சியோலில் தெளிவாக தெரிவித்தார்.
 
அதற்கு பதிலாக, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது முதல்முறையாக அணுசக்தி சோதனை நடத்த வட கொரியா தயாராகி வருவதாக தெரிகிறது. இரு கொரிய நாடுகளுக்கும் இடையே மேலும் பதற்றம் அதிகரிக்கலாம். ஏவுகணை சோதனைகள் குறித்து வட கொரிய அரசு ஊடகம் திங்கள்கிழமை எதுவும் குறிப்பிடவில்லை. அந்நாடு கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதே இதற்கு காரணம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தென் கொரியாவும் அமெரிக்காவும் வழக்கமான கூட்டு ராணுவ பயிற்சிகளை முடித்த ஒரு நாளுக்குப் பின்பு நடத்தப்பட்டன. முன்னதாக, இருநாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிகள், வடகொரியா மீதான அமெரிக்காவின் விரோதப் போக்குக்கு சான்றாகும் என வடகொரியா விமர்சித்திருந்தது.
 
"துல்லியமான தாக்குதல்களுக்கு ஒருங்கிணைந்த தயார்நிலையை நிரூபிக்கும் விதமாக, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு எதிராக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகள் துரிதமாக வினையாற்றியுள்ளன" என, சியோலில் உள்ள ஏவ்ஹா பல்கலைக்கழகத்தின் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் பேராசிரியர் லேய்ஃப்-எரிக் ஈஸ்லே தெரிவித்துள்ளார்.
 
ஆனால் தென் கொரியாவின் தற்போதைய ஏவுகணை பாதுகாப்புகள், "வடகொரியாவின் விரிவான தாக்குதல்களுக்கு எதிராக போதாமையுடன் உள்ளது" என அவர் எச்சரித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் புதிதாக பிஏ4, பிஏ5 தொற்று உறுதி!- அமைச்சர் சுப்பிரமணியன்