Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவுக்கு அடுத்து சீனா நிலவில் கொடி நாட்டிய 2வது நாடானது!

அமெரிக்காவுக்கு அடுத்து சீனா நிலவில் கொடி நாட்டிய 2வது நாடானது!
, சனி, 5 டிசம்பர் 2020 (14:41 IST)
அமெரிக்கா நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது.
 
நிலவின் மேற்பரப்பில், காற்றில்லாமல் அசைவற்று இருக்கும், ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி பறக்கும் படத்தை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது சீனாவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இந்த படங்கள், கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன், அங்கிருந்து புறப்படுவதற்கு முன், சாங்கே -5 விண்கலத்தின் கேமரா மூலம் எடுக்கப்பட்டன.
 
முந்தைய இரண்டு சீன நிலவுப் பயணங்களில் கைவினைப் பூச்சுகளால் ஆன கொடிகள் பயன்படுத்தப்பட்டன. எனவே அவற்றை நிலவில் நாட்ட முடியவில்லை. 1969-ம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்குக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது, நிலவில் தன் முதல் கொடியை நாட்டியது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நட்டார்.
 
ஆல்ட்ரின், அமெரிக்க கொடியை, அப்பல்லோ-11 விண்கலத்துக்கு அருகிலேயே நட்டார். விண்கலம் சந்திரனில் இருந்து புறப்படும் போது, தான் நட்ட அமெரிக்கக் கொடி சேதமாகி இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார். 1972-ம் ஆண்டு வரை, அடுத்தடுத்து நிலவுக்குப் பயணித்த ஐந்து விண்வெளித் திட்டங்களின்போது மேலும் ஐந்து அமெரிக்கக் கொடிகளை நிலவில் நட்டது அமெரிக்கா.
 
அமெரிக்கா நட்டு வைத்த கொடிகளில் ஐந்து கொடிகள் அப்படியே இருப்பதாக, செயற்கைக் கோள் படங்கள் காட்டுவதாக, கடந்த 2012-ம் ஆண்டு நாசா குறிப்பிட்டது. சூரியனின் வெளிச்சத்தால், இந்த கொடிகள் நிறமிழந்து வெளுத்துப் போயிருக்கலாம் என நிபுணர்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்கள்.
 
என்ன சொல்கிறது சீனா
சீனக் கொடி நிலவில் நாட்டியது, அமெரிக்கா நிலவில் கொடி நாட்டிய போது இருந்த உற்சாகம் மற்றும் உத்வேகத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தித் தாள் கூறுகிறது.
 
சாங்கே - 5 லேண்டர் வாகனம், சீனாவின் கொடியை நிலவில் நாட்டியது. இந்த விண்கலம், சந்திரனில் இருந்து, பாறைகள் மற்றும் மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு, சந்திரனில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக் கொண்டு இருக்கும் விண் சுற்றுக்கலனுக்கு கொண்டு சென்றுள்ளது.
 
இந்த விண்கலம், சீனாவின் மங்கோலிய உள் பகுதிகளில் தரையிறங்க இலக்கு வைத்து பயணிக்கும். சீனாவின் கொடி 2 மீட்டர் அகலமும், 90 சென்டிமீட்டர் உயரமும், சுமார் ஒரு கிலோ எடையும் கொண்டது. சீன கொடியின் எல்லா பகுதியிலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.
 
உதாரணமாக, அதிக அளவில் குளிரைத் தாங்கும் என இந்த திட்டத்தின் தலைவர் லி யுன்ஃபெங் குளோபல் டைம்ஸிடம் கூறினார். பூமியில் பயன்படுத்தும் சாதாரணக் கொடி, நிலவில் நீண்ட நாட்களுக்கு தாக்குபிடிக்காது என இந்த திட்டத்தின் மேம்பாட்டாளர் செங் சாங் கூறினார்.
 
சீனா முதன் முதலில் நிலவில் தரையிறங்கிய போது, சீனாவின் தேசியக் கொடி நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சாங்கே-4 தரையிறங்கி (லேண்டர்) மற்றும் விண் ஊர்தி (ரோவர்) 2019இல் கொடியை நிலவின் இருட்டான பக்கத்திற்கு கொண்டு சென்றது. இரண்டு முறையும் சீனாவின் கொடி ஒரு கம்பத்தில் உண்மையான துணிக் கொடியைப் போல அல்லாமல் கைவினைப் பூச்சில் இருந்தது.
 
கடந்த ஏழு ஆண்டுகளில், சந்திரனில், சீனா மூன்றாவது முறையாக வெற்றிகரமாக தரையிறக்கம் செய்து இருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் சும்மா இருக்க மாட்டேன்.. சூரப்பாவிற்கு கமல் ஆதரவு குரல்!