Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை மதத்தினர் தேர்தலில் போட்டியிட முடியாதா?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை மதத்தினர் தேர்தலில் போட்டியிட முடியாதா?
, சனி, 25 ஜனவரி 2020 (21:31 IST)
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், இந்தியா முழுவதும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பல முறை இச்சட்டத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்.
கர்நாடகா மாநிலம் ஹூப்லியில் நடைபெற்ற பேரணியில் பேசிய அமித் ஷா, "ஆப்கானிஸ்தானில் பீரங்கிகளால் புத்தரின் சிலைகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு தேர்தலில் போட்டியிடும் உரிமை இல்லை. சுகாதார வசதிகள், கல்வி போன்ற வசதிகளும் அவர்களுக்கு இல்லை. அங்கிருக்கும் இந்து, சீக்கிய, பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் குடியுரிமை கோரி இந்தியா வந்தனர்," என்றார்.
 
அதாவது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 
ஆனால், உண்மையில் இந்த மூன்று நாடுகளில் வாழும் சிறுபான்மையினருக்கு வாக்களிக்கவோ தேர்தலில் போட்டியிடும் உரிமையோ கிடையாதா?
 
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு இருக்கும் வாக்குரிமைகள் குறித்து அறிந்து கொள்ள பிபிசி முயற்சித்தது. அதே சமயத்தில் தற்காலத்தில் இது எப்படி இருக்கிறது என்பது குறித்தும் பிபிசி ஆராய்ந்தது.
 
பாகிஸ்தான் அரசமைப்பு பிரிவு 51 (2-A), நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறது. அதனுடன், நான்கு மாகாணங்களில் அதன் சட்டமன்றங்களில் 23 இடங்கள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
 
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 இடங்களில், 272 இடங்களின் பிரதிநிதிகள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும், 60 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நாடாளுமன்றம் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன.
 
272 இடங்களில் ஓர் அரசியல் கட்சி எத்தனை இடங்களில் வென்றிருக்கிறதோ, அதே விகிதத்தில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படும். அந்த இடங்களில் வெற்றி பெற்ற அரசியல் கட்சியே சிறுபான்மை வேட்பாளர்களை தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பும்.
 
மற்றொரு வழி. எந்த சிறுபான்மையினர் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் நேரடித் தேர்தலில் போட்டியிடலாம். இவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் இந்த வேட்பாளர் பெறும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றி கணக்கிடப்படும்.
 
மேலும், எந்த சிறுபாமையினரும், எந்த வேட்பாளருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் சமம்.
 
1956ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசமைப்பு அமலானதில் இருந்து இரண்டு முறை திருத்தப்பட்டது. அதன்படி, சிறுபான்மையினருக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
 
அதாவது, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்படாத இடங்களிலும் அவர்கள் போட்டியிடலாம். 2018 தேர்தலில் மகேஷ் மலானி, ஹரிராம் கிஷ்வாரி மற்றும் கியான் சந்த் அஸ்ரானி ஆகியோர் ஒதுக்கீடு செய்யப்படாத இடங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்.
 
ஆப்கானிஸ்தானில் இந்து - சீக்கியர்களின் தேர்தல் உரிமைகள் என்ன?
 
சரி. இப்போது ஆப்கானிஸ்தான் குறித்து பார்ப்போம். 1988ஆம் ஆண்டில் இருந்து தாலிபனால் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான்.
 
தீவிரவாத அமைப்பான அல்-கய்தாவின் தளமாக அந்நாடு இருந்துள்ளது. 2002ஆம் ஆண்டு இடைக்கால அரசு உருவாக்கப்பட்டு, ஹமீத் கர்சாய் அதிபரானார்.
 
2005ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகுதான், அந்நாட்டின் நாடாளுமன்றம் சற்று வலுப்பெற்றது.
 
ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1970ளுக்கு பிறகு நடக்கவில்லை என்றாலும், உலக வங்கியின் தரவுகளின் படி, அந்நாட்டின் மக்கள் தொகை 3.7 கோடி ஆகும்.
 
அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்து - சீக்கியர் சிறுபான்மையினர் எண்ணிக்கை வெறும் 1000 - 1500 மட்டுமே.
 
அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் மொத்தம் 249 இடங்கள்.
 
இங்கும் சிறுபான்மையினர் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் விதிகளின்படி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரத்தில், குறிப்பிட்ட வேட்பாளர் குறைந்தது 5000 பேரின் ஆதரவையாவது காண்பிக்க வேண்டும்.
 
இந்த விதிகள் அனைவருக்கும் பொருந்தும். அதனால், சிறுபான்மையினர்கள் நாடாளுமன்றம் வரை செல்வது கடினமாக இருந்தது.
 
2014ஆம் ஆண்டு அஷ்ரஃப் கனியின் அரசாங்கம், இந்து - சீக்கிய சிறுபான்மையினருக்காக கீழ் சபையில் ஒரே ஓர் இடத்திற்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது.
 
அதோடு, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேல் சபையிலும் ஒரு இடம் மத சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இதைத்தவிர அனைத்து சிறுபான்மையினரும் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். அதே போல, 5000 பேரின் ஆதரவு இருந்தால், சிறுபான்மையினர் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்.
 
வங்கதேசத்தில் என்ன நிலை?
 
வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையின சமூகத்திற்கு இடஒதுக்கீடு கிடையாது. ஆனால் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
 
அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் மொத்தம் 350 இடங்கள், அதில் 50 இடங்கள் பெண்களுடையது. 2018ல் நடந்த தேர்தலில், 79 சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 18 பேர் வென்றனர்.
 
இந்தியாவின் இடஒதுக்கீட்டு முறை என்ன?
 
இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 334(a), மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது.
 
அம்பேத்கர் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வேண்டும் என்றாரா?
 
543 மக்களவை தொகுதிகளில் 79 இடங்கள் பட்டியலினத்தவர்களுக்கும், 41 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
அதே நேரத்தில், மொத்தமுள்ள 3,961 சட்டமன்ற இடங்களில், 543 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 527 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு உள்ளது.
 
இந்த குறிப்பிட்ட தொகுதிகளில் அனைத்து மக்களும் வாக்களிக்கலாம். ஆனால், நிறுத்தப்படும் வேட்பாளர் பழங்குடியினராகவோ பட்டியல் இனத்தவராகவோ இருக்க வேண்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞரின் கையில் எலும்புக் கூடு ‘ மம்மி ’ ... வைரலாகும் வீடியோ