Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலியின் கனவைக் கலைத்த புவனேஸ்வர், மாலிக்

Advertiesment
கோலியின் கனவைக் கலைத்த புவனேஸ்வர், மாலிக்
, வியாழன், 7 அக்டோபர் 2021 (10:21 IST)
ஹைதராபாத் அணியுடனான போட்டியில் வென்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து ப்ளே ஆப் சுற்றை எளிதாகக் கடந்துவிடலாம் என்று பெங்களூரு அணியின் கனவை புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் கலைத்தனர்.
 
ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை மாறி, கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் அவர்களுக்கு ஆறுதலான மூன்றாவது வெற்றி இது.
 
கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான கட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தார். இரண்டு பந்துகள் சிக்கினால் போதும் என பெங்களூரு ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
webdunia
ஆனால் புவனேஸ்வர் குமார் தன்னுடைய விதவிதமான பந்துகளால் அவரைக் கட்டுப்படுத்தினார். நான்காவது பந்தில் டி வில்லியர்ஸ் சிக்ஸர் மூலமாக பதற்றத்தை அதிகரித்தாலும், பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கு அது பயன்படவில்லை.
 
பெங்களூரு அணி தோல்வி அடைந்ததால் முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதுவது உறுதியாகி இருக்கிறது. பிளே ஆப்பின் நான்காவது இடம் யாருக்கு என்பது இன்னும் உறுதியாகவில்லை.
 
வேகத்தில் மிரட்டும் உம்ரன் மாலிக்
ஹைதரபாத் அணியின் சமீபத்திய நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பந்துவீச்சாளர் உம்ரன் மாலிக், இந்தப் போட்டியிலும் கவனத்தை ஈர்த்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 18-ஆவது ஓவரில் அவர் கொடுத்த 9 ரன்களும் இதில் அடங்கும்.
 
தனது முதல் ஓவரிலேயே ஒரேயொரு ரன் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி பெங்களூரு அணியை நிலைகுலையச் செய்தார். ஐபிஎல் போட்டிகளில் அவர் எடுத்திருக்கும் முதலாவது விக்கெட் இது. அவரது பெரும்பாலான பந்துகள் 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப் பாய்ந்தன.
 
9ஆவது ஓவரில் படிக்கலுக்கு வீசிய பந்து 153 கிலோ மீட்டர் வேகத்தில் சீறியது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளிலே அதிக வேகத்தில் பந்து வீசியவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
 
மேக்ஸ்வெல் போன்ற அதிரடியான ஆட்டக்காரர்களையே அவரது பந்து கட்டுப்படுத்தியது. போட்டியின் இறுதியில் பேசிய பெங்களூரு கேப்டன் விராட் கோலி, உம்ரன் மாலிக்கின் பந்துவீச்சின் வேகத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்குப் பதிலாக வாய்ப்பளிக்கப்பட்ட மாலிக், தேசிய அணியிலும் இடம்பெற வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
 
போட்டியை மாற்றிய ரன் அவுட்
webdunia
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்ததால், அது பெங்களூரு அணிக்கு எளிய இலக்காகவே கருதப்பட்டது. ஆனால் அபுதாபியின் மிக மெதுவான ஆடுகளம் பெங்களூருக்கு கைகொடுக்கவில்லை.
 
முதல் ஓவரிலேயே புவனேஸ்வரின் பந்தில் கேப்டன் விராட் கோலி வெளியேறிவிட நான்காவது மற்றும் ஏழாவது ஓவர்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தன. ஆனால் தொடக்க ஆட்டக்காரரான படிக்கலும் அதிரடியாக ஆடும் மேக்ஸ்வெல்லும் சீரான வேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கினர்.
 
அச்சுறுத்தும் சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் கானின் பந்தில் இரண்டு சிக்சர்களை அடித்த மேக்ஸ்வெல் பெங்களூரு அணியை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்தார். அந்த நிலையில் பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் 15-ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆனார். வில்லியம்ஸின் துல்லியமாக பந்தை எறிந்து விக்கெட்டை வீழ்த்தினார்.
 
இந்த ரன் அவுட் போட்டியின் போக்கை மாற்றியது. டி வில்லியர்ஸை பின்வரிசையில் ஆடுவதற்கு இறக்கியதும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் நல்ல நோக்கத்துடனே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கோலி தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி குடும்பத்தினர் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட திமுக கட்சி பொறுப்பாளர்!