Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெசா: ஹிட்லரிடம் இருந்து யூதர்களை முஸ்லிம்கள் உயிரை பணயம் வைத்து காக்கச் செய்த கோட்பாடு

பெசா: ஹிட்லரிடம் இருந்து யூதர்களை முஸ்லிம்கள் உயிரை பணயம் வைத்து காக்கச் செய்த கோட்பாடு
, வியாழன், 27 ஜூலை 2023 (21:25 IST)
கொசோவோவில் செர்பிய ராணுவப் படைகளிடமிருந்து தப்பித்த அகதிகள் 1999-ல் அல்பேனியா வந்தனர்.
 
இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை விட இறுதியில் அதிக யூதர்களைக் கொண்ட வெகு சில ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அல்பேனியா.
 
ஜெர்மனி, ஆஸ்த்ரியா போன்ற நாடுகளிலிருந்து நாஜி ஆட்சியின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்து ஓடி வந்த ஆயிரக்கணக்கான அகதிகளை, அல்பேனியர்கள் - பெரும்பாலும் இஸ்லாமியர்கள் - தங்கள் இல்லங்களுக்கு வரவேற்று பாதுகாப்பு அளித்தனர்.
 
ஏற்கெனவே 1938ல், போருக்கு ஓராண்டு முன்பே, அல்பேனியாவின் சோக் முதலாம் அரசர், 300க்கும் மேற்பட்ட யூதர்களுக்கு அரசியல் அடைக்கலம் அளித்தார். அல்பேனிய குடியுரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 
ஆனால் அதிகாரத்தின் பாதுகாப்பு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1939-ல் அல்பேனியாவை இத்தாலி கைப்பற்றி, நாட்டின் மீது தனது அதிகாரத்தை பிரகடனப்படுத்தியது. சோக் அரசர் நாட்டை விட வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். பெனிட்டோ முசோலினியின் கட்டுப்பாட்டில் நாடு இருக்க, யூதர்கள் நாட்டுக்குள் நுழைவது மேலும் கடினமானது.
 
ஆனால், 1945-ல் போர் இறுதிக்கட்டத்தை எட்டிய போது, அல்பேனியா தனது எல்லைக்குள் மூன்று ஆயிரம் யூத அகதிகளை கொண்டிருந்தது. இவ்வளவு அதிக யூதர்கள் இருந்ததற்கு காரணம், அல்பேனியர்களின் பாரம்பரிய ஒற்றுமை உணர்வும், ‘பெசா’ எனப்படும் அல்பேனிய சமூகக் கோட்பாடும் ஆகும்.
 
“அல்பேனியர்கள், யூதர்களை தங்கள் குடும்பங்களுக்குள் அழைத்துக் கொண்டனர், அவர்களுக்கு உணவளித்தனர், அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர், அவர்களை பாதுகாப்பாக மறைத்து வைத்தனர். ஒவ்வொரு முறை நிலைமைகள் ஆபத்தாக மாறிய போதும், அவர்களை மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வெவ்வேறு வழிகளை கண்டறிந்துக் கொண்டே இருந்தனர்” என்று அமெரிக்காவில் உள்ள அல்பேனிய அமெரிக்க சிவிக் லீக்-ன் ஷெர்லி க்ளாய்ஸ் டியோகார்டி பிபிசியிடம் கூறினார்.
 
அகதிகளுக்கு உதவிய பலர், அரசியலில், சமூக இயங்கங்களில் ஈடுபடாதவர்கள். ஆனால் மனிதநேய மாண்புடன் இருந்தவர்கள்.
 
அப்படி ஒருவர் தான் அர்ஸ்லான் ரெஸ்னிகி. உணவு வியாபாரியான அவர், தன் உயிரையும் தனது குடும்பத்தினரின் உயிரையும் பணயம் வைத்து நூற்றுக்கணக்கான யூத அகதிகளை காப்பாற்றியுள்ளார் என ‘வரலாற்றின் ரகசிய ஹீரோக்கள்’ (History’s Secret Heroes) என்ற வலையொளியில் ஹெலனா பொன்ஹாம் கார்டர் தெரிவிக்கிறார்.
 
அர்ஸ்லானின் குடும்பம் இஸ்லாமிய குடும்பமாகும். அல்பேனியாவின் பெரும்பான்மை மதம் இஸ்லாமியம். அங்கு மக்கள் தொகையில் 17% பேர் மட்டுமே கிறித்தவர்கள். அர்ஸ்லான் , அல்பேனிய சமூகத்தின் முதன்மை பங்கேற்பாளராக தன்னை கருதினார். அச்சமூகம் மனிதாபிமான பண்புகளை பெருமையுடன் ஏந்திக் கொண்டு, பெசா கோட்பாட்டை இன்றும் கடைப்பிடித்து வருகிறது.
 
அல்பேனியாவுக்கு வந்த பெரும்பாலான யூதர்கள் சிறு நகரங்களிலும் மலைகளிலும் ஒளிந்துக் கொண்டனர். எனவே அதிகாரிகள் அவர்களை கண்டுபிடிப்பது அரிதானதே.
 
பெசா, அல்பேனிய சமூகக் கோட்பாடு
பெசா கோட்பாடு என்பது கண்டிப்பான தார்மீக விதிகள் ஆகும். பிறருக்கான இரக்கமும் சகிப்புத்தன்மையும் இதன் ஆதாரமாகும். பெசா என்பது ஓர் உறுதிமொழியாகும். அதன் வேர்கள் 15ம் நூற்றாண்டின் வாய்மொழி பாரம்பரியங்களில் இருந்தாலும், இப்போதும் அல்பேனியர்களிடம் வழக்கத்தில் உள்ளது.
 
“தனிமனித கௌரவத்தை மற்றவர்களுக்கான மரியாதை மற்றும் சமத்துவத்துடன் தொடர்புப்படுத்துகிறது பெசா. அதன் முக்கிய விழுமியங்களில் ஒன்று தான் விருந்தினருக்கான நிபந்தனையற்ற பாதுகாப்பு ஆகும். அதற்காக ஒருவரின் உயிரையே பணயம் வைக்கலாம்.” என்கிறார் டியோகார்டி.
 
 
இந்த மரபு பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வட அல்பேனிய பழங்குடியினருக்கான 15ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட, கானுன் எனப்படும் எழுதப்படாத, வழக்கம் சார்ந்த சட்டங்களின் ஒரு பகுதியாக இந்த மரபு அமைகிறது என்று ஆர்கெஸ்ட் பெகிரி பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இந்த கானுனில் தான் பெசா தோன்றியதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த மரபு மேலும் பழமையானது என்று சிலர் வாதிடுகின்றனர். நெடுங்காலமாக இருக்கும் பழங்குடி மரபுகளுக்கு இந்த கானுன் ஒரு வடிவம் கொடுத்தது என்கின்றனர்.
 
 
இனப்படுகொலையிலிருந்து தப்பிக்க யுகோஸ்லேவியாவிலிருந்து யூத அகதி குடும்பங்கள் அல்பேனிய வந்தனர்.
 
அல்பேனியாவுக்கு வந்த பெரும்பாலான யூதர்கள் சிறு நகரங்களிலும் மலைகளிலும் ஒளிந்துக் கொண்டனர். எனவே அதிகாரிகள் அவர்களை கண்டுபிடிப்பது அரிதானதே.
 
பூமிக்கு அடியில் உள்ள பங்கர்களிலும் மலை குகைகளிலும் அகதிகள் தலைமறைவாக இருந்தனர். சில நேரங்களில் அவர்கள் ஒளிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லை.
 
அல்பேனியாவை நாஜிக்கள் ஆக்கிரமித்த போது, நாடு கடத்தப்பட வேண்டிய யூதர்களின் பட்டியலை அல்பேனிய அதிகாரிகள் தர வேண்டும் என கூறினர். ஆனால் உள்ளூர் அதிகாரிகள் அப்படி ஒரு பட்டியலை தர மறுத்துவிட்டனர்.
 
அல்பேனிய அமெரிக்க சிவிக் லீக் -உடனான தனது பணியின் போது, காலி வீடுகளில் மறைந்துக் கொள்ளும் யூதர்களின் பல கதைகளை ஷெர்லி டியோகார்டி கேட்டுள்ளார்.
 
எனவே, யூதர்களுக்கு வழங்கப்படும் உதவி தேசிய கௌரவமாக கருதப்பட்டது.
 
இனப்படுகொலையில் உயிரிழந்தோருக்கான, இஸ்ரேலில் உள்ள யாத் வஷேம் என்ற நினைவகம், அல்பேனியர்களின் மனிதாபிமான மாண்புகளை அங்கீகரிக்க, யூத சமூகத்தை பாதுகாக்க தங்கள் உயிரை நீத்த 25 ஆயிரம் சாதாரண மக்களுக்கு மரியாதை செலுத்துகிறது.
 
இரண்டாம் உலகப் போர் இந்த சமூகக் கோட்பாட்டுக்கு கடினமான சோதனையை உருவாக்கியது என்றாலும் , நாஜி ஆட்சியின் துன்புறுத்தல்கள் இந்த கோட்பாட்டுக்கான முதல் சவாலும் அல்ல, இறுதியானதும் அல்ல.
 
 
காலங்கள் மாறலாம், பாதிக்கப்படுபவர்கள் மாறலாம். ஆனால் வரலாறு மீண்டும் நிகழும்.
 
பல ஆண்டுகள் கழித்து, 1990களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள், பெரும்பாலும் பழங்குடி அல்பேனியர்கள், செர்பிய ராணுவ படைகளிடமிருந்து கொசோவோவிலிருந்து தப்பி ஓடி அல்பேனியா வந்தனர்.
 
“அல்பேனிய குடும்பங்கள், கோசோவா அகதிகள் முகாம்களுக்கு சென்று ஒரு குடும்பத்தை கண்டறிந்து அவர்களை தங்கள் வீடுகளுக்கு கூட்டி சென்றனர். அவர்கள் உறவினர்களோ, நண்பர்களோ கிடையாது. அவர்கள் அந்நியர்கள். ஆனால் அல்பேனியர்கள் அவர்களை வரவேற்றனர், உணவளித்தனர், ஆடைகள் வழங்கினர், குடும்பத்தினர் போல் நடத்தினர்”என்று அகதி குடும்பம் ஒன்றை காப்பாற்றிய பெண்ணின் பேத்தியான, நெவிலா முகா ,பிபிசியிடம் கூறினார்.
 
தனது பாட்டி ஏன் அதை செய்தார் என முகாவிடம் கேட்ட போது, தோள்களை குலுக்கி, “ இது தான் அல்பேனியர்களின் முறை. இது ஒரு முத்தமாகும்” என்றார்.
 
பெசா என்பது அல்பேனியர்களுக்கான கோட்பாடு என பிபிசியிடம் விளக்கமளித்தார் முகா. “ யாராவது உதவி என்று கேட்டு வந்தால் அவர்களுக்கு தங்குவதற்கு இடம் அளிக்க வேண்டும்.”
 
1943-ல் மசடோனியாவின்  ஸ்காப்யாவிலிருந்து வந்த  யூத அகதி குடும்பம் அல்பேனியாவின் திரானாவில் தங்களை வரவேற்ற அல்பேனிய குடும்பத்துடன் இருக்கின்றனர்
 
1943-ல் மசடோனியாவின் ஸ்காப்யாவிலிருந்து வந்த யூத அகதி குடும்பம் அல்பேனியாவின் திரானாவில் தங்களை வரவேற்ற அல்பேனிய குடும்பத்துடன் இருக்கின்றனர்.
 
பெசாவின் மிக கடினமான அம்சங்கள் காலப்போக்கில் மழுங்கிவிட்டன என்றாலும் அதன் கடமை மற்றும் விருந்தோம்பல் பண்புகள் அல்பேனிய சமூகத்தில் தொடர்கிறது.
 
அல்பேனியா மீண்டும் புகலிடம் அளித்து வருகிறது. இந்த முறை மத்திய கிழக்கிலிருந்து பயணம் செய்து வருபர்வர்களுக்கு. ஆப்கானிஸ்தானிலிருந்து அவசர அவசரமாக அமெரிக்கா வெளியேறியதை அடுத்து, நாட்டை தாலிபான் கையில் எடுத்துக் கொண்டது. இதன் காரணமாக பல ஆப்கானியர்கள் அல்பேனியா வந்தடைந்துள்ளனர்.
 
அப்லேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒல்டா சாஸ்கா சமூக ஊடகங்களில் “அல்பேனியா நான்கு ஆயிரம் ஆப்கன் அகதிகளுக்கு, அவர்களின் நல்லெண்ணம் காரணமாக, பெருமையுடன் புகலிடம் அளிக்கும். பெரிய, பணக்கார நாடுகளின் குடியேறுதலுக்கு எதிரான கொள்கைகளின் மையமாக அல்பேனியா இருக்காது” என்று தெரிவித்தார்.
 
இப்படி தான், மிகப்பெரிய ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் உள்ள சிறிய ஏழை நாடான அல்பேனியா, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்களையும் , துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களையும் தனது விருந்தோம்பலுடன் ஆதரிக்கும் அர்ப்பணிப்பை வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வெளிப்படுத்தியுள்ளது.
 
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ‘வரலாற்றின் ரகசிய ஹீரோக்கள்’ (History’s Secret Heroes) என்ற வலையொளியில் தெரிவிக்கப்பட்டதாகும். இது, பிபிசி ரேடியோ 4 மற்றும் பிபிசி சவுண்ட்ஸ் ஆகியவற்றுக்கான பிபிசி ஸ்டுடியோஸ்-ல் ஹெலனா பொன்ஹாம் கார்டர் தொகுத்து வழங்கி, அமி லிபோவிட்ஸ் தயாரித்த வலையொளி ஆகும் .

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரீல்ஸ் மோகம்....குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி