Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு!

Advertiesment
பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு!
, புதன், 9 பிப்ரவரி 2022 (11:24 IST)
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியை இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது. இதற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹாய்ன், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் 2021ஆம் ஆண்டிற்கான ஐந்து போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
 
''விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை அறிவிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதின் ஒவ்வொரு பதிப்பும் சில புதிய பெயர்களைக் கொண்டுள்ளது. கோல்ஃப் வீராங்கனை முதல் பாராலிம்பிக் வீராங்கனை வரை விளையாட்டின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்திய விளையாட்டுத் துறையில் மின்னும் நட்சத்திரங்கள் இங்கே கொண்டாடப்படுகிறார்கள்,'' என்று பிபிசி நியூசின் இந்திய தலைவர் ரூபா ஜா தெரிவித்துள்ளார்.
 
''திறமை மிக்க விளையாட்டு வீராங்கனைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா போதுமான அளவு செயல்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்தும் மாறிவருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன, என்றாலும் நமக்கு திறன் வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை; பெற்றோரும் தங்களது குழந்தைகளை விளையாட்டு துறையில் பங்கெடுக்க வைக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்களின் பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன,'' என்று கடந்த ஆண்டு பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கிய விளையாட்டு வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தற்போதைய இந்திய விளையாட்டுத்துறை குறித்து நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
 
இந்த விருது, இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் நாட்டிற்கு அளித்த பங்களிப்பை கெளரவிப்பதாகும். மேலும், விளையாட்டில் சாதனை படைக்கும் பெண்களை கொண்டாடும் வகையிலும் அமைந்துள்ளது.
 
பிபிசியின் இந்திய மொழிகள் இணையதளங்களில் அல்லது பிபிசி ஸ்போர்ட் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், இந்த ஆண்டின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு உங்களை கவர்ந்த வீராங்கனைக்கு வாக்களிக்கலாம்.
 
இந்திய நேரப்படி, பிப்ரவரி 28ம் தேதி இரவு 11:30 மணி வரை இணையதளம் வாயிலாக வாக்களிக்க முடியும். மார்ச் 28, 2022 அன்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறும். இதுகுறித்த அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும், தனியுரிமை அறிவிப்புகளும் இணையதளத்தில் உள்ளன.
 
பிபிசி இந்திய மொழி இணையதளங்களும், பிபிசி ஸ்போர்ட் இணையதளத்திலும் விருது முடிவுகள் அறிவிக்கப்படும். அதிக வாக்குகளைப் பெற்ற விளையாட்டு வீராங்கனையே பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனையாக அறிவிக்கப்படுவார்.
 
மார்ச் மாதம் 28ம் தேதியன்று நடக்கும் விருது நிகழ்ச்சியில், வரலாறு படைத்த விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், இளம் விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு வளர்ந்து வரும் வீராங்கனைகான விருதும் வழங்கப்படும்.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா தொற்றுநோய் நம் வாழ்வின் அனைத்து நிலையிலும் பாதித்த கடுமையான காலக்கட்டத்துக்கு முன், இந்த விருதின் தொடக்க பதிப்பை பிபிசி அறிமுகப்படுத்தியது. இந்த விருது நிகழ்ச்சி, அதன் மூன்றாவது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது.
 
கடந்த ஆண்டு, சதுரங்க விளையாட்டு வீராங்கனை கொனேரு ஹம்பி, 2020 ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.
 
ஊடகவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் விளையாட்டு குறித்து எழுதுபவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தனித்துவமிக்க நடுவர் குழுவால் மேற்கண்ட ஐந்து பேரும் பிபிசியின் 2021ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்கள்.
 
இந்த நடுவர் குழுவால் அதிகபட்ச பரிந்துரைகளைப் பெற்ற விளையாட்டுப் வீராங்கனைகளே பொது வாக்களிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலையே நீட் வேண்டாம் என சொன்னவர் தான்... மா.சுப்பிரமணியன் பேட்டி!