Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரிப்டோகரன்சியை திருடி ஏவுகணை திட்டத்திற்கு நிதி சேகரித்த வட கொரியா

கிரிப்டோகரன்சியை திருடி ஏவுகணை திட்டத்திற்கு நிதி சேகரித்த வட கொரியா
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (14:05 IST)
சைபர் தாக்குதல்கள் மூலம் வட கொரியா மில்லியன் கணக்கிலான கிரிப்டோகரன்சியை திருடி, தனது ஏவுகணை திட்டத்திற்கு அதை பயன்படுத்தியதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சைபர்-தாக்குதல்கள் மூலம் 50 மில்லியன் டாலர்களுக்கும் (37 மில்லியன் பவுண்ட்) அதிகமான டிஜிட்டல் சொத்துக்களை திருடியதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இத்தகைய தாக்குதல்கள் வட கொரியாவின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு "முக்கியமான வருவாய் ஆதாரம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புகள் வெள்ளிக்கிழமை ஐ.நா.வின் தடைகள் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சைபர் தாக்குதல்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் குறைந்தது மூன்று கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களை குறிவைத்தன.

கடந்த மாதம் பாதுகாப்பு நிறுவனமான செயினாலிசிஸ் வெளியிட்ட ஆய்வில், வட கொரிய சைபர் தாக்குதல்கள் மூலம் கடந்த ஆண்டு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள டிஜிட்டல் சொத்துக்களை ஈட்டியிருக்கலாம் என்று தெரிவித்தது.

மேலும் 2019 ஆம் ஆண்டில், அதிநவீன சைபர் தாக்குதல்களைப் பயன்படுத்தி வட கொரியா தனது பேரழிவுத் திட்டங்களுக்காக 2 பில்லியன் டாலர்களை திரட்டியதாக ஐ.நா. தெரிவித்தது.

வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணைகளை ஏவுவதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

எனினும், பொருளாதார தடைகளை மீறி, வட கொரியா தனது அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

மேலும், இணையம் மற்றும் கூட்டு அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிநாடுகளில் பொருள், தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றைத் தொடர்ந்து தேடுகிறது வட கொரியா.

வட கொரியாவின் ஏவுகணை சோதனையில் "குறிப்பிடப்பட்ட முடுக்கம்" இருப்பதாக, பொருளாதாரத் தடை கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (டிபிஆர்கே) என முறையாக அறியப்படும் வட கொரியா, கடந்த மாதம் மட்டும் ஒன்பது ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை கூறியது.

"வட கொரியா தன் ஏவுகணைப் படைகளின் விரைவான ஆயத்தநிலை, அதன் பரந்த இயக்கம் மற்றும் மேம்பட்ட எதிர்த்திறன் ஆகியவற்றை செயல்படுத்தி காட்டியது" என்று பொருளாதாரத் தடைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவின் ஏவுகணைகளின் பரவலைக் கண்டிக்கும் அறிக்கையில் வெள்ளியன்று கையெழுத்திட மறுத்துவிட்டன.

வட கொரியாவுக்கான அதன் சிறப்புப் பிரதிநிதி இந்த வார இறுதியில் ஜப்பான் மற்றும் தென் கொரிய அதிகாரிகளைச் சந்தித்து நிலைமையைப் பற்றி விவாதிப்பார் என்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா அறிவித்தது.

வடகொரியாவில் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் ஐநா அறிக்கை கண்டறிந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் போது அதன் எல்லைகளை மூடியதன் விளைவாக இந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

வட கொரியாவிடம் இருந்து தகவல் இல்லாததால், சர்வதேச தடைகளால் எவ்வளவு துன்பங்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிவது கடினம் என்று அது கூறியது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க வேட்பாளரை கடத்தல.. அவரே வந்தார்! – பாமக குற்றச்சாட்டுக்கு திமுக பதில்!