Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள்ளெலியின் தோலில் உருவாகும் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியா

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (14:04 IST)
முள்ளெலிகளின் தோலில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களுக்கு இடையே நடந்த மோதலின் விளைவாக, MRSA சூப்பர்பக் என்ற ஒரு பாக்டீரியா வகை, நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்த்துச் செயலாற்றும் (antibiotic-resistant) திறனுடையதாக இயற்கையான பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது.
 
நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இயற்கையில், முள்ளெலியில் இந்த பாக்டீரியா உருவாகியுள்ளது. முள்ளெலிகளில் பொதுவான தோல் பூஞ்சை இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உற்பத்தி செய்கிறது என்று சர்வதேச ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.
 
காட்டுயிர்களின் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் அதில் உருவாகும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிராகச் செயலாற்றக்கூடிய திறனை வளர்த்துக்கொண்டுள்ளன. நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்ட அவர்களுடைய கண்டுபிடிப்புகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உதவியின்றி, இயற்கையான உயிரியல் செயல்முறைகளின் மூலமாக சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் குறிப்பிட்ட சூப்பர்பக் பாக்டீரியா எப்படித் தோன்றியது என்பதைக் காட்டுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
mecC-MRSA எனப்படும் குறிப்பிட்ட பாக்டீரிய வகை, முதலில் கறவை மாடுகளில் கண்டறியப்பட்டது. பால் பண்ணைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு இருந்தது, அந்த எதிர்ப்பிகளுக்கு எதிரான திறனை வளர்த்துக்கொள்ளக் காரணமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.
 
இருப்பினும், இது நுண்ணுயிர் எதிர்ப்பிக்கு எதிரான செயல்படும் திறன் இயற்கையாக எழுவதன் மிகவும் அரிதான உதாரணம்தான். மேலும், இந்தக் கண்டுபிடிப்பு, "மனித மருத்துவ சூழலில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான பயன்பாட்டோடு ஒப்பிடும்போது ஏற்படும் அபாயங்களின் ஒரு சிறிய பகுதியைப் பிரதிபலிக்கிறது," என்று முன்னணி ஆய்வாளர்களில் ஒருவரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் ஹோம்ஸ் பிபிசி செய்தியிடம் கூறினார்.
 
மனிதர்களிடையே பரவக்கூடிய 200 வகையான MRSA நோய்த்தொற்றுகளில் ஒன்று MecC-MRSA எனப்படும் பாக்டீரியாவிலிருந்து ஏற்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான பயன்பாடு, மனிதர்கள் மற்றும் பண்ணை உயிரினங்கள் இரண்டிலும், நுண்ணுயிர் எதிர்ப்பிக்கு எதிரான திறனுடைய மற்ற நோயுண்டாக்கும் திரிபுகள் தோன்றுவதற்குத் தொடர்ந்து உந்துதலாக இருக்கிறது.
 
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கால்நடை விஞ்ஞானிகள் பத்தாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த இந்தக் குறிப்பிட்ட வகை MRSA பாக்டீரியாவின் மூலத்தைப் பற்றிய நீண்டகால மர்மத்தை இந்த ஆய்வு தீர்த்துள்ளது.
 
"இது எவ்வளவு பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்க நாங்கள் முயன்றோம். எனவே, காட்டுயிர்கள், பண்ணை உயிரினங்கள் ஆகியவற்றைப் பார்த்தபோது, அது இயற்கையில் அதிகமாகப் பரவியிருப்பதைக் கண்டறிந்தோம். குறிப்பாக, முள்ளெலிகளைப் பார்த்தபோது, நாங்கள் மாதிரி எடுத்த உயிரினங்களில் பாதியில் இந்த வகை MRSA இருந்தது," என்று பேராசிரியர் ஹோம்ஸ் விளக்கினார்.
 
உயிரியலாளர்கள், காட்டுயிர் ஆய்வாளர்கள் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள முள்ளெலி மீட்பு மையங்களுடன் இணைந்து, விஞ்ஞானிகள் முள்ளெலிகள் மீது தங்கள் ஆய்வுகளை மையப்படுத்தினார்கள்.
 
"நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிரான திறனுடைய இந்த பாக்டீரியாக்கள் நிறைய இருக்கும் அளவுக்கு, முள்ளெலியில் என்ன சிறப்பு இருக்கிறது என நாங்கள் அறிய விரும்பினோம்," என்று விளக்கினார் பேராசிரியர் ஹோம்ஸ்.
 
டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட்டன்ஸ் சீரம் நிறுவனத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பா முழுவதும் உள்ள காட்டுயிர்களில் இருந்து எடுக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட பாக்டீரிய மாதிரிகளை ஆய்வு செய்தார்கள். அவர்கள் ஒரு மரபணு குறியீட்டு அடிப்படையிலான காலவரிசையை உருவாக்கினார்கள். இது, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மருத்துவரீதியாகப் பயன்படுவதற்கும் நீண்டகாலத்திற்கு முன்பே, 1800-களின் முற்பகுதியில் ஐரோப்பிய முள்ளெலிகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிரான திறனுடைய திரிபுகள் உருவாகியிருந்ததை வெளிப்படுத்தியது.
 
"முள்ளெலியில் வளரும் பூஞ்சை பென்சிலின்களை வெளியிடுகிறது. பாக்டீரியாக்கள் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கவேண்டும். ஏனெனில், அவை முள்ளெலியில் வாழ விரும்பினால், பூஞ்சை இருக்குமிடத்தில், அவை உற்பத்தி செய்யும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பாக்டீரியாக்கள் எதிர்க்கவேண்டும்," என்கிறார் பேரா.ஹோம்ஸ்.
 
முள்ளெலியின் தோலில் உருவான இந்த "ஆயுதப் போட்டி," என்பது அலெக்சாண்டர் ஃப்ளெமிங் 1928-ம் ஆண்டில் பென்சிலினைக் கண்டுபிடித்தபோது, பாக்டீரியாக்களை வளர்க்கும் தட்டத்தில் அவர் பார்த்ததின் ஓர் இயற்கை உதாரணமாக இருக்கிறது. அவருடைய தட்டில் பூஞ்சைக்கு அருகில் எந்த பாக்டீரியாவும் வாழமுடியாது என்பதைக் கவனித்தார்.
 
ஆன்டிபயாடிக் எதிர்ப்பு: அமைதியாகத் தொடங்கும் தொற்றுநோய்
நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் திறன் என்பது, இன்று உலக சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது.
 
இது இயற்கையாகவே ஏற்படுகிறது. ஆனால், மனிதர்கள் மற்றும் காட்டுயிர்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு செயல்முறையை இது துரிதப்படுத்துகிறது.
 
நிமோனியா, காசநோய், கோனோரியா மற்றும் சால்மோனெல்லோசிஸ் போன்ற பெருகிவரும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புகளின் செயல்திறன் குறைந்து வருவதால், சிகிச்சையளிப்பது கடினமாகி வருகிறது.
 
ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகம் குழுமியிருப்பது எங்கே, அவை எவ்வாறு வெளிப்படுகின்றன மற்றும் அவற்றின் செயல்பாடுகள் போன்றவை மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான இந்த விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு உள்ளது.
 
"மக்களிடயே இந்த வகை MRSA பாக்டீரியா ஏற்படுவதற்கு பால் பண்ணைகளில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமில்லை என்று நம்பிக்கையோடு உறுதியளிக்கும் விஷயமாக இருக்கிறது. ஆனால் அதற்காக, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டில் நாம் விதிகளைத் தளர்த்தவேண்டும் என்று அர்த்தமல்ல," பேரா.ஹோம்ஸ் கூறினார்.
 
மேலும், "ஆன்டிபயாடிக்-எதிர்ப்பு பாக்டீரியாவைச் சுமந்திருப்பது முள்ளெலிகள் மட்டுமல்ல. அனைத்து காட்டுயிர்களும் பல்வேறு வகையான பாக்டீரியாக்களையும் ஒட்டுண்ணிகளையும் பூஞ்சை மற்றும் வைரஸ்களையும் கொண்டு செல்கின்றன," என்று அவர் கூறினார்.
 
"காட்டுயிர்கள், கால்நடைகள் மற்றும் மனிதர்கள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. நாம் அனைவரும் ஒரே சுற்றுச்சூழலைப் பகிர்ந்து கொள்கிறோம். முழு சூழலியல் கட்டமைப்பையும் நீங்கள் பார்க்காத வரை, நுண்ணுயிர் எதிப்பிகளை எதிர்த்துச் செயலாற்றும் திறனின் முழுப் பரிணாமத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments