Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செந்தில் பாலாஜி கைது: திமுகவுக்கு என்ன சிக்கல்?

Advertiesment
செந்தில் பாலாஜி கைது: திமுகவுக்கு என்ன சிக்கல்?
, வியாழன், 15 ஜூன் 2023 (11:07 IST)
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், அமலாக்கத் துறை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன் ஆஜர் படுத்தினர். சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்ய அமலாக்கத்துறை வாதிட்ட நிலையில், பிணையில் விடுவிக்க செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
 
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கோரிய மனு தொடர்பாக வாதாடிய என்.ஆர். இளங்கோ, சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது. மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.
 
காவலில் எடுப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வாதம் செய்த ஏ.ஆர்.எஸ். சந்தரேசன், "விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. கைது காரணங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டன. கைது மெமோவை பெற மறுத்தார். கைது செய்யப்படுவோம் என தெரிந்தே அதை பெற மறுத்து விட்டார். ரிமாண்ட் செய்யப்பட்டு விட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது" என்று தெரிவித்தார்.
 
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கேட்டு அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனு ஆகிய மனுக்களின் மீதான விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
"செந்தில் பாலாஜி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்"
செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ செந்தில் பாலாஜி உத்தமர் என்பது போல் ஸ்டாலின் புலம்பி வருகிறார். வேண்டுமென்று பொருளாதார குற்றப்பிரிவும், வருமானவரித் துறையும் ரெய்டு நடத்துவதாகக் கூறி வருகிறார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசுவது ஒன்று, இப்போது பேசுவது வேறு. முதலமைச்சர் இரட்டை வேடம் போட்டு வருகிறார்.
 
30 ஆயிரம் கோடி குறித்து ஏதாவது செந்தில் பாலாஜி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர். செந்தில் பாலாஜி மீது அக்கறை இல்லை இவர்களுக்கு, வெறும் பயம்தான். செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் தார்மீக பொறுப்பேற்று ராஜிநாமா செய்ய வேண்டும்” என்று கூறினார்.
 
செந்தில் பாலாஜி திமுகவின் கருவூலம் - அண்ணாமலை
webdunia
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்பேரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகு, தலைமைச் செயலகம் மற்றும் செந்தில் பாலாஜி வீடு அலுவலகங்களில் சோதனை நடந்தது எப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகும்? செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
திமுகவின் கருவூலமாக செந்தில் பாலாஜி மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள், முதலமைச்சர் அவரை போய் பார்த்து சந்தித்து இதனை உறுதிப்படுத்திவிட்டனர். உடனடியாக செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை வேறு யாருக்காவது முதலமைச்சர் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
 
செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?
2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த போது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்ட போது முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
 
2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார். முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
webdunia
மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியது. மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
 
செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
அதே சமயம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.
 
திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கை திமுகவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த ஊடகவியலாளர் கார்த்திகேயன் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் அமைச்சராக இருக்கும் ஒருவர், அமலாக்கத்துறை சோதனையில் கைதாவது என்பது இதுதான் முதல்முறை. எனவே, திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது அளவிட முடியாததாக இருக்கிறது" என்றார்.
 
மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம் பேசும்போது, “ இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி திமுக சரியாக கையாளவில்லை. இதே போன்ற சூழலை ஆம் ஆத்மி கட்சி கையாண்டதற்கும் திமுக கையாண்டதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர்கள் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கைது செய்ய விட்டுவிட்டு அதன் பின்னர் அரசியல் ரீதியாக அதை எடுத்து செல்கின்றனர். ஆனால், திமுகவினர் கைது செய்வதற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ” என்றார்.
webdunia
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான வாக்கு திமுகவுக்கு தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் சராசரி மக்களிடம் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தராசு ஷ்யாம் குறிப்பிட்டார்.
 
ஊழலுக்கு எதிரான கட்சி என்று பாஜக தங்களைக் கூறி வருகிறது. தங்கள் கூற்றுக்கு வலு சேர்க்க இந்த விவகாரத்தை பாஜக பயன்படுத்திக்கொள்ளும் என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.
 
அமலாக்கத்துறையின் அதிகாரம் குறித்த பேசிய தராசு ஷ்யாம், “எந்த அரசாக இருந்தாலும் விசாரணை அமைப்புகளை தவறாக நடத்தி வருகிறது என்பதை நாம் பார்த்துத்தான் வருகிறோம். ஆனால், அதிகாரிகள் சட்டப்படிதான் நடக்கின்றனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்திருக்கக் கூடாது என்பதே தவறு. மத்திய அரசின் கீழ் வருமானம் தொடர்பான வழக்கில் கைது செய்யும் அதிகாரம் உள்ள ஒரே அமைப்பு அமலாக்கத்துறைதான். 1956ல் அமலாக்கத்துறை ஆரம்பிக்கப்பட்டபோது , அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தை (FERA) மட்டும்தான் அது கவனித்து வந்தது. தாராளமயமாக்கலுக்கு பின்னர் இது fema ஆக மாறியது. 2002க்கு பிறகு பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) கொண்டு வரப்பட்டது. அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. "
 
"2011-2015ல் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதன் பின்னர் 5 ஆண்டுகளுக்கு அமைச்சராக இல்லை. தற்போது வேறு துறைக்கு அமைச்சராக இருக்கிறார். அப்படியிருக்கும்போது, பழைய ரெக்கார்டு எப்படி புதிய அறையில் கிடைக்கும். நிச்சயமாக எதுவும் கிடைக்காது. செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட ரெய்டின் நோக்கம்.” என்றார்.
 
இந்த நடவடிக்கையில் அதிமுகவுக்கு எதிரான மிரட்டலும் இருக்கலாம் என்று கூறும் கார்த்திகேயன், கூட்டணியில் தனது பிடியை இறுக்குவதற்கு இந்த நடவடிக்கையை பாஜக பயன்படுத்துக்கொள்ளும். தங்களுக்கு எதிராக செயல்படுவது, கூட்டணியை விட்டு வெளியே வர முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முயன்றால் இதுபோன்ற நிலையை சந்திக்க நேரிடும் என்ற மறைமுக எச்சரிக்கையும் இதன் பின்னால் இருக்கலாம் என்றார்.
 
டாஸ்மாக் விவகாரமும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துமா?
போக்குவரத்துத்துறையில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தார் என்று செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டப்பட்டாலும், தற்போது டாஸ்மாக்கில் நடைபெற்று வரும் விவகாரங்களும் செந்தில் பாலாஜிக்கு எதிராக திரும்பக் கூடும் என்பது ஊடகவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது.
 
இது தொடர்பாக ஷ்யாம் பேசும்போது, “ செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வாங்கிய லஞ்சத்திற்கான நடவடிக்கையாக இதை பார்க்கவில்லை. பணி நியமனதுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கை விசாரிக்க எல்லாம் அமலாக்கத்துறை வருமா? இந்த நடவடிக்கைகளை செந்தில் பாலாஜியும் திமுகவும் எதிர்பார்க்கவும் இல்லை, அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவில்லை."
 
"தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது அனைவருக்குமே தெரியும். இந்த பணம் தினமும் வசூலிக்கப்படுகிறது. அந்த தொகை ஒட்டுமொத்தமாக சேர்க்கப்படுகிறது. சார்ஜ் சீட் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு கால அவகாசம் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கிற்கு சரக்கு விநியோகம் செய்கின்ற லாரி ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. எனவே, டாஸ்மாக் மோசடி குறித்த விவகாரத்தை இதில் சேர்க்க வாய்ப்பு இருக்கிறது. ” என்று அவர் தெர்வித்தார்.
 
“டாஸ்மாக்கில் நிதி வசூலிப்பதில் செந்தில்பாலாஜி ஈடுபடத் தொடங்கியபோதே அதனை கண்டித்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது, தற்போது, டாஸ்மாக் நிதி வசூல் விவகாரமும் இதனுடன் சேர வாய்ப்பு இருக்கிறது” என்று கார்த்திகேயனும் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம்: அன்புமணி கண்டனம்..!