யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இப்போது ஐந்து வாரங்களாகி விட்டன. அங்கு வாழ்வது எப்படியிருக்கும் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.
வெடிகுண்டுகள், ரத்தக்களரி, அதிர்ச்சி, நாட்டின் பல பகுதிகளில் உங்கள் குழந்தைகள் செல்வதற்குப் பள்ளிகள் இல்லை. பெற்றோருக்கான சுகாதார வசதியில்லை. பாதுகாப்பான வீடு இல்லை.
நீங்கள் அங்கிருந்து தப்பி ஓட முயல்வீர்களா?
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஒரு கோடி யுக்ரேனியர்கள் தங்களுடைய தாயகத்தில் இருந்து இதுவரை தப்பியுள்ளனர். பெரும்பாலானோர் யுக்ரேனின் பிற பகுதிகளில் தஞ்சம் அடைகின்றனர். 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எல்லை தாண்டி வெளியேறியுள்ளனர். அவர்களில் பெண்கள், குழந்தைகளே அதிகம். ஏனெனில், 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தை யுக்ரேனிய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
இடம்பெயர்ந்து, திசை திருப்பப்பட்டு, அடுத்து எங்கு செல்வது என்று பெரும்பாலும் தெரியாமல், அகதிகளாக அந்நியர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய கட்டாயத்தில் யுக்ரேனியர்கள் இருக்கின்றனர். போரால் ஏற்பட்ட குழப்பம், இந்த மக்களை 'பாதுகாப்பு' தேடி வெளியேற வைக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில், யுக்ரேனுக்கு வெளியிலும் அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இல்லை.
போலி தன்னார்வலர்கள்
"மனித வேட்டையாளர்களுக்கும் ஆள் கடத்தல்காரர்களுக்கும் யுக்ரேனில் நடக்கும் போர் ஒரு சோகம் அல்ல. இதுவொரு வாய்ப்பு. பெண்கள் மற்றும் குழந்தைகளே அவர்களுடைய இலக்குகள்," என்று ட்விட்டரில் எச்சரித்துள்ளார் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ்.
யுக்ரேன் மற்றும் அண்டை நாடுகளில் அமைதி காலத்தில் கடத்தல் வட்டங்கள் பிரபலமாக உள்ளன. வியாபாரத்தை அதிகரிக்க போர்க்காலம் அவர்களுக்குச் சரியான வாய்ப்பாகும். லுப்லினில் உள்ள மனித உரிமைகள் அமைப்பான ஹோமோ ஃபேபரின் ஒருங்கிணைப்பாளரான கரோலினா வியர்ஸ்பின்ஸ்கா, குழந்தைகள் பெரும் கவலையாக இருப்பதாக என்னிடம் கூறினார்.
யுக்ரேனில் இருந்து பல இளைஞர்கள் துணைக்கு யாருமின்றி பயணம் செய்து கொண்டிருந்தனர். போலந்து மற்றும் பிற எல்லை பகுதிகளில், குறிப்பாக போரின் தொடக்கத்தில், குழந்தைகள் காணாமல் போனார்கள். அவர்களுடைய தற்பொதைய இருப்பிடம் தெரியவில்லை. நானும் எனது சகாக்களும் போலாந்து-யுக்ரேனிய எல்லைக்கு நேரில் சென்றோம்.
அகதிகள் வருகைக்கு நன்கு அறியப்பட்ட ஒரு ரயில் நிலையத்தில், சுற்றிலும் திகைத்து நிற்கும் பெண்களும் அழும் குழந்தைகளும் கூட்டமாக இருப்பதைக் கண்டோம். தன்னார்வலர்கள், பலருக்கு ஆறுதல் அளித்து, பெரிய அளவிலான சமையல் பானைகளில் இருந்து சூடான உணவு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
சோகத்தில் தவிக்கும் அகதிகள்
இதுவரை, நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, அல்லவா? முற்றிலும் இல்லை. 20-களின் தொடக்க வயதில் இருக்கும் யுக்ரேனிய அகதியான மார்கெரிட்டா ஹூஸ்மானோவை, கீயவில் நாங்கள் சந்தித்தோம். அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு எல்லைக்கு வந்தார். ஆனால், சக அகதிகள் தவறான கைகளில் விழுவதைத் தடுக்க உதவுவதற்காகத் தொடர்ந்து அங்கேயே இருக்க முடிவு செய்தார்.
அவர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக அஞ்சுகிறாரா என்று நான் கேட்டேன். "ஆம், அதனால்தான் அவர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன்," என்று அவர் கூறினார். "பெண்களும் குழந்தைகளும் ஒரு பயங்கரமான போரிலிருந்து தப்பிக்க இங்கு வருகிறார்கள். அவர்களுக்கு போலிஷ் அல்லது ஆங்கில மொழி தெரியாது. என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. யார் என்ன சொன்னாலும் அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த ஸ்டேஷனுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நான் வந்த முதல் நாளில், இத்தாலியில் இருந்து வந்திருந்த மூன்று ஆண்களைப் பார்த்தோம். அவர்கள் பாலியல் தொழிலுக்காக விற்பதற்கு அழகான பெண்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நான் காவல்துறையை அழைத்தேன். ஆம், இது சித்தப்பிரமை அல்ல. நான் சொல்வது உண்மைதான். இது பயங்கரமானது,"
வேனில் பெண்களை ஏற்ற முயன்ற ஆண்கள்
உள்ளூர் அதிகாரிகள் இப்போது இன்னும் கொஞ்சம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர் என்று மார்கெரிட்டா கூறுகிறார். காவல்துறை தொடர்ந்து ரயில் நிலையத்தில் ரோந்து செல்கின்றனர். கவர்ச்சியான இடங்களுக்கான அட்டைப் பலலைகளுடன் கூடிய மக்கள், அகதிகள் வரத் தொடங்கிய முதல் இரண்டு வாரங்களில் இருந்தவர்களில் பெரும்பாலானோரைக் காணவிலை.
ஆனால், பல ஆதாரங்களின் வழியே நாம் கண்டறிந்தபடி, மற்ற தவறான நோக்கமுள்ள நபர்கள் இப்போது மின்னும் அங்கிகளை அணிந்தபடி தன்னார்வலர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். எலெனா மோஸ்க்விட்டினா ஃபேஸ்புக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர் இப்போது டென்மார்க்கில் பாதுகாப்பாக இருக்கிறார். எனவே, நாங்கள் ஸ்கைப் வழியாக நீண்ட நேரம் பேசினோம்.
அவருடைய அனுபவம் மிகவும் அச்சுறுத்தக்கூடியதாக உள்ளது.
அவரும் அவருடைய குழந்தைகளும் போரினால் பாதிக்கப்பட்ட யுக்ரேனில் இருந்து அண்டை நாடான ருமேனியாவுக்குச் சென்றார்கள். அவர்கள் எல்லையில் அகதிகள் மையத்தில் இருந்தபடி வேறு நாட்டிற்குச் செல்வதற்காக உதவி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது போலி தன்னார்வலர்களாக அங்கிருந்தவர்கள், அவர்களைப் பற்றி விசாரித்துவிட்டுச் சென்றனர். பிறகு, அதே நாளில் மீண்டும் அவர்கள் திரும்பி வந்து, எலெனாவிடம் சுவிட்சர்லாந்து செல்வதற்குச் சிறந்த இடம் என்றும் பெண்கள் நிறைந்திருக்கும் வேன் ஒன்றில் அவருக்கு லிஃப்ட் கொடுப்பதாகவும் கடுமையான மொழியில் கூறியுள்ளார்கள்.
அந்த ஆண்கள் தன்னையும் தன் மகளையும் "கொச்சையாக" பார்த்ததாக எலெனா என்னிடம் கூறினார். அவருடைய மகள் பயந்து போயிருந்தார். வேறோர் அறையிலிருந்த தன் மகனை காட்டச் சொன்னார்கள். அவர்கள் அவருடைய மகனை மேலும் கீழும் பார்த்தார்கள். பின்னர் அவர்கள் தங்களைத் தவிர வேறு யாருடனும் பயணிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மேலும், அவர்களுடைய அடையாள அட்டைகளைக் காட்டச் சொல்லி எலெனா கேட்டபோது அவர்கள் கோபம் அடைந்தனர்.
அந்த ஆண்களிடம் இருந்து தன் குடும்பத்தை அப்போதைக்குக் காப்பாற்றுவதற்காக, மற்ற பெண்களும் அவர்களுடைய வேனுக்கு வரும்போது அங்கே சந்திப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர்கள் சென்றவுடன், தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
கடத்தல் அபாயங்கள்
போலாந்து தொழில்முனைவோரான, எல்ஸ்பியெட்டா ஜர்முல்ஸ்கா வுமென் டேக் தி வீல் முன்னெடுப்பின் நிறுவனராவார். யுக்ரேனிய அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதே தன் நோக்கம் என்கிறார் அவர்.
அவர், "அந்தப் பெண்கள் ஏற்கெனவே போர் சூழ்ந்த பகுதியின் வழியாக நடந்தோ அல்லது வாகனத்திலோ வருகின்றனர். பிறகும் அவர்கள் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். அது எப்படியிருக்கும் என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை," என்கிறார்.
அகதிகளுக்குப் பாதுகாப்பான பாதையை வழங்குவதற்காக, அவர் 650-க்கும் மேற்பட்ட போலந்து பெண்களை பணியமர்த்தியுள்ளர். எலா என்றழைக்கப்படும் எல்ஸ்பியெட்டாவுடன் நான் அகதிகள் மையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு அவர் வார்சா செல்ல யாருக்காவது லிஃப்ட் வேண்டுமா என்று கேட்பதற்கு முன்பாக, அதிகாரிகளிடம் தனது அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றிதழைக் காட்டினார்.
அவருடைய காரில், அகதி நாடியா மற்றும் அவருடைய மூன்று குழந்தைகள் ஏறினார்கள். சிறு குழந்தைகளுக்குத் தண்ணீர், சாக்லேட் மற்றும் பயணத்தின் ஏற்படும் குமட்டல் போன்ற உபாதைகளுக்கான மாத்திரைகள் ஆகியவற்றை எலா சேமித்து வைத்திருந்த காரில் அவர்களைப் பத்திரமாகக் குடியமர்த்தினார்.
நாடியா, கார்ஹீவில் இருந்து தப்பி வந்த தனது ஆபத்தான பயணத்தைப் பற்றி என்னிடம் கூறினார். இப்போது ஒரு பெண் ஓட்டுநருடன் செல்வதைப் பற்றி மிகுந்த மன நிம்மதி அடைந்திருப்பதாகக் கூறினார். யுக்ரேனிய வானொலியில் கடத்தல் மற்றும் சுரண்டலின் அபாயங்களைப் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ளார். இருந்தும் அவர் அங்கிருந்து வெளியேறினார். ஏனெனில் போரினால் ஏற்படக்கூடிய உடனடி அபாயங்கள் அங்கிருந்தன. அவருடைய வீடு ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது.
ஆனால், பாதுகாப்பாக எல்லையை விட்டு வெளியேறுவதால் அவர்களுக்கு ஆபத்து முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. யுக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதல் ஐந்து வாரங்களைக் கடந்து நடந்து வருகிறது. இன்னமும் ஐரோப்பா முழுவதும் யுக்ரேனியர்களுக்கு உதவுவதாகக் கூறுபவர்களைப் பட்டியலிட்டு, உறுதி செய்யவேண்டிய செயல்முறைகள் இல்லை.
பாதுகாப்பு தேவை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களாக கருதப்படும் பாலியல் தொழிலுக்கான கடத்தல், உடல் உறுப்புகளுக்கான கடத்தல், அடிமைத் தொழிலாளர்களுக்கான கடத்தல் போன்றவை மட்டுமே அச்சுறுத்தலாக இல்லை. அகதிகள் தனிநபர்களாலும் சுரண்டப்படுகிறார்கள்.
போலாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் தங்க அகதிகளை அனுமதித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் சிறந்த நோக்கத்துடன் இதைச் செய்தாலும், அனைவருமே அப்படியில்லை.
ஜெர்மனியிலுள்ள டுசெல்டார்ஃ நகருக்குத் தப்பிச் சென்ற யுக்ரேனிய பெண்ணின் சமூக ஊடக பக்கத்தில் ஓர் இடுகையைக் கண்டோம். அவருக்கு ஒர் அறையை வழங்கியவர், அவரது அடையாள ஆவணங்களைப் பறிமுதல் செய்துகொண்டு தனது வீட்டை இலவசமாகச் சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.
பின்னர் அவர் பாலியல் அத்துமீறல்களையும் செய்யத் தொடங்கியுள்ளார். அந்தப் பெண் மறுத்ததால், அந்த மனிதர் அவரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார். நாங்கள் பேசியதில் பெரும்பாலானவர்கள் வன்முறை முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்வது குறித்த நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால், அடுத்தடுத்து நாட்கள், வாரங்கள், மாதங்கள் கூடக் கூட, அவர்கள் தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும் தங்களைத் தாங்களே சரியாக ஆதரிப்பதற்கும் எங்காவது ஒரு வேலை தேவை.
அந்தத் தேவைகள் அகதிகளை அபாயங்களுக்கு எளிதில் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளுகிறது. யுக்ரேனியர்களுக்கு வேலை சந்தை, பள்ளிகள், சுகாதாரப் பாதுகாப்பிற்கான அணுகலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஆனால், மனித உரிமை குழுக்கள் சுட்டிக்காடியதன்படி, அகதிகள் பதிவு செய்வதற்கும் அவர்களின் உரிமைகளைப் பற்றி தெரிவிக்கவும் உதவி தேவையாக உள்ளது. ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசுகள், யுக்ரேனுடன் ஒற்றுமையை உறுதி செய்துள்ளன.
மனித உரிமைகள் குழுக்கள் தங்கள் உயிருக்குப் பயந்து ஓடி வருபவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கு முதலில், அந்த மக்களுக்குப் பாதுகாப்பு தேவை.