Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணாத்த - ரஜினிகாந்த் படத்தின் சினிமா விமர்சனம்!

அண்ணாத்த - ரஜினிகாந்த் படத்தின் சினிமா விமர்சனம்!
, வெள்ளி, 5 நவம்பர் 2021 (09:01 IST)
நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன்; இசை: டி. இமான்; இயக்கம்: சிவா.
 
தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை சென்டிமென்டிற்கு அழிவேயில்லை என்ற நம்பிக்கையில் இந்தத் தீபாவளிக்கு களமிறங்கியிருக்கிறது ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த".
 
தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்) பல ஊருக்கு பிரெசிடென்ட். அவருடைய தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). காளையனுக்கு தங்கையின் மீது அதீத பாசம்.
webdunia
ஒரு கட்டத்தில் தங்கைக்கு தான் அடிக்கடி சண்டைபோடும் ஒருவரின் (பிரகாஷ்ராஜ்) மகனுக்கு கட்டிவைக்க முடிவுசெய்கிறார். ஆனால், திருமணத்திற்கு முதல் நாள் தங்கையைக் காணவில்லை. தங்கை தங்க மீனாட்சிக்கு என்ன ஆனது, அவருடைய பிரச்னைகளில் இருந்து அண்ணன் அவரை எப்படி மீட்கிறார் என்பது மீதிக் கதை.
 
தங்கை மீது உயிராக இருக்கும் அண்ணன், அவளுக்கு வரும் துன்பத்தை அவளுக்கே தெரியாமல் நீக்கி, அவளைக் காப்பாற்ற நினைக்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன் - லைன். ஆனால், அதற்கு தேர்ந்தெடுத்த கதையும் திரைக்கதையும் படு சொதப்பலாக இருக்கிறது.
 
படம் ஆரம்பித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஒரு திசையில் ஓடுகிறது. அந்த ஒரு மணி நேரத்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன. ஏழைகளின் நிலத்தை அடித்துப் பிடுங்கும் பிரகாஷ்ராஜுடன் அடிக்கடி சண்டை போடுகிறார் ரஜினி.
 
அதற்குப் பிறகு, கல்யாணமாகி நடுத்தர வயதில் இருக்கும் குஷ்புவும் மீனாவும் ரஜினியை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுவதுபோல சில பல காட்சிகள். பிறகு, தங்கை மீது ரஜினி எப்படி பாசத்தைப் பொழிகிறார் என்பதைக்காட்ட சில காட்சிகள்.
 
பிறகு, ஏழையின் நிலத்தை அடித்துப்பிடுங்கியதற்காக தான் அடித்துத் துவைத்த பிரகாஷ்ராஜின் மகனுக்கே தான் உயிராக வளர்த்த தங்கையை திருமணம் செய்துவைக்க முடிவுசெய்கிறார் கதாநாயகன். இதற்கு நடுவில் நயன்தாராவுடன் காதல். இதுக்கே கண்ணைக் கட்டினால் சமாளித்துக்கொள்ளவும். இதற்குப் பிறகு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
 
தமிழ் சினிமாவின் ஆரம்பகால திரைப்படங்கள் சிலவற்றில், கதாநாயகிகளோ அல்லது நாயகனின் தங்கைகளோ பயங்கரமான துன்பங்களை அனுபவிப்பார்கள். அதைவிட பல மடங்கு துன்பத்தை அனுபவிக்கும் பாத்திரம் கீர்த்தி சுரேஷிற்கு.
 
அவர் திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளையிடமிருந்து அவரது ஸ்டீல் தொழிற்சாலையைப் பறித்துக்கொள்ளும் வில்லன் (அபிமன்யு சிங்), அவரை சிறையிலும் அடைத்துவிடுகிறான்.
 
ஏற்கனவே பிரகாஷ்ராஜ்தான் வில்லன் என நினைத்துக்கொண்டிருந்த நமக்கு, இந்த புதிய வில்லனின் அறிமுகம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த வில்லனுக்கு ஒரு வில்லன் இருக்கிறார்.
 
அது அந்த இரண்டாவது வில்லனின் அண்ணன் (ஜெகபதிபாபு). இந்த வில்லன் கொல்கத்தாவில் இருந்தாலும், ஆந்திராவில் செங்கல்சூளை நடத்தும் வில்லனைப்போல நடந்துகொள்பவர். இந்த மூன்றாவது வில்லனுக்கும் இரண்டாவது வில்லனுக்கும் ஆகாது. இப்படி பல வில்லன்கள் படத்தில் இருக்கிறார்கள், இயக்குநரையும் சேர்த்து.
 
ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்களிலேயே இந்தப் படத்தில்தான் ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். காமெடி காட்சிகளிலும் சரி, சண்டைக் காட்சிகளிலும் சரி 90களின் ரஜினியைப் பார்க்க முடிகிறது. ஆனால், கதையிலும் திரைக்கதையிலும் சொதப்பியிருப்பதால், அவரது உழைப்பு முழுக்க வீணாகியிருக்கிறது.
 
ரஜினியும் நயன்தாராவும் வரும் துவக்க காட்சிகள் நன்றாகவும் ரசிக்கும்படியும் இருக்கின்றன. பிறகு, இயக்குநர் உஷாராகிவிடுவதால் நயன்தாராவின் பாத்திரம் திடீரென காணாமல் போய்விடுகிறது. பிற்பாதியில் மீண்டு வரும் நயன்தாரா, ஒரு வழக்கமான நாயகியைப்போல வந்து போகிறார்.
 
வீரம், வேதாளம் போன்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் நகைச்சுவைக்கென சூரி, சதீஷ், சத்யன் என பல நடிகர்கள் இருக்கிறார்கள். அந்தப் படங்களில் எல்லாம் நகைச்சுவைக் காட்சிகள் எப்படி சிரிப்பு வரவில்லையோ, அதேபோல இந்தப் படத்திலும் நகைச்சுவைக் காட்சிகளில் சிரிப்பு வரவில்லை.
 
இமானின் இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக, "சார சார காத்தே" பாடலும் "வா சாமி" பாடலும் அட்டகாசமாக இருக்கின்றன. சார சார காத்தே பாடல் படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கிறது.
 
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், வில்லனின் ஆட்கள் எல்லாம் தாறுமாறாக அடிபட்டுக் கிடக்கும்போது, அவர்களையெல்லாம் யார் அடித்தது என்று தெரியாத கீர்த்தி சுரேஷ் ஒவ்வொருவரிடமாகச் சென்று, "யாருடா உங்களையெல்லாம் அடிச்சது, தயவு செஞ்சு சொல்லுங்கடா" என்று கேட்பார். அந்தக் கேள்வி, உண்மையில் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு! – சென்னையில் மட்டும் 758 வழக்குகள்!