Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"கீழடியில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம்": மு.க.ஸ்டாலின் கடிதம், மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தல்

Advertiesment

Arun Prasath

, திங்கள், 23 செப்டம்பர் 2019 (16:53 IST)
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பணியின் மூலம் தெரியவந்துள்ள முக்கியத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலிடம் நேரில் அளித்துள்ளனர்.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவு சமீபத்தில் தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ள தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பது, மதுரையில் தொல்லியல் துறையின் கிளை அலுவலகம் ஏற்படுத்துவது மற்றும் கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
webdunia

அந்த கோரிக்கை கடிதத்தை திமுகவின் நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் சிதம்பரம், சு. வெங்கடேசன் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பாட்டீலிடம் நேரில் வழங்கினர்.

"கீழடி அகழ்வாய்வு முடிவுகள், கலாசார வரலாற்றில், மிகப் பெரும் திருப்புமுனை என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. பழங்கால தமிழர் நாகரிகம் என்பது, உலகின் மிகப் பழமையான நாகரிகம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்தக் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இது உள்ளது. அத்துடன் இந்திய வரலாற்றையே, இனி தமிழர்கள் வரலாற்றிலிருந்து தான், முன்னோக்கி பார்க்க வேண்டும் என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.

கீழடி அகழ்வாய்வின் மூலம், வேளாண் தொழில்களில் காளைகள் - மிருகங்களை, தமிழர்கள் பயன்படுத்தியுள்ளது குறித்தும், ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகள், வேளாண் சமூக அமைப்புகள் அப்போதே இருந்து வந்துள்ளதைக் காட்டும் சான்றுகளும் கிடைத்துள்ளன" என்று அந்த கடிதத்தில் கீழடி ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கீழடிக்குப் பிறகு அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் சனோவ்லி என்கிற இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளதைப் போன்று கீழடி அகழாய்வுப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

"ஏற்கெனவே செயல்பட்டு வரும் சென்னை மண்டல அலுவலகத்துடன் தென் தமிழகத்திற்காக, மதுரையிலும், மத்திய தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

கீழடியில், அகழ்வாய்வுப் பணிகள் துவக்கப்பட்ட அதே கால கட்டத்தில், குஜராத் மாநிலம் வாட் நகரிலும் அகழ்வாய்வுப் பணி தொடங்கப்பட்ட நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளதைப் போல, கீழடியிலும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்ளாக் லிஸ்டில் சேர்க்கப்படுகிறதா பாகிஸ்தான்?