குண்டுவெடிப்பு மற்றும் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆப்கானிஸ்தானில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அமெரிக்கக் கூட்டணிப் படைகள் 2001இல் தாலிபன் ஆட்சியை அகற்றியபின் நடக்கும் நான்காவது அதிபர் தேர்தல் இது.
வாக்குச்சாவடிகளை தாக்குவோம் என்று தாலிபன் அமைப்பினர் எச்சரித்திருந்த நிலையில் நடக்கும் வாக்குபதிவில் சுமார் 70,000 காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் இரு முறை திட்டமிடப்பட்ட இந்தத் தேர்தல், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேர்தல் மையங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்; 27 பேர் காயமடைந்துள்ளனர்.
கந்தகார் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தபோதும், அதையும் மீறி பெண்கள் அதிக அளவில் வாக்களிபதற்காக வரிசையில் காத்திருப்பதைக் காண முடிகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள சுமார் 90 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் சுமார் 35% பேர் பெண்கள். வாக்குப்பதிவு விகிதம் குறைவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போது அதிபராக உள்ள அஷ்ரஃப் கனி மற்றும் அவரது கூட்டணி அரசில் தலைமை செயல் நிர்வாகியாக இருந்த அப்துல்லா அப்துல்லா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
போர்க்களம் போல உள்ள ஆப்கானிஸ்தான்
பல்லாண்டு காலமாக போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பது புதிய அதிபருக்கு சவாலாக இருக்கும்.
18 ஆண்டுகளாக போர்க்களம் போல உள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர்.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. அத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஒசாமா பின்லேடனின் அல்-கய்தா அமைப்புக்கு ஆதரவும், புகலிடமும் அளிப்பதாக அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துகொண்டிருந்த தாலிபனுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தான் சென்றன.
தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்கு எதிராக 2001இல் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா படையெடுப்பு நடத்தியபின் சர்வதேச நாடுகளின் ராணுவ வீரர்கள் மட்டும் சுமார் 3,500 பேர் அங்கு இறந்துள்ளனர். அவர்களில் 2,300 பேர் அமெரிக்கர்கள்.
1996 வரை 2001 வரை நடந்த தாலிபன் ஆட்சியில் மதச் சட்டங்கள் கடுமையாக அமலானதுடன், பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர்.
2019 பிப்ரவரியில் வெளியான ஐ.நா தரவுகளின்படி 32,000க்கும் மேலான குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இதுவரை நடந்த சண்டைகளில் 58,000 ஆப்கன் காவல் படையினரும், 42,000 ஆயுதப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.