Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்!

ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்!
, திங்கள், 27 டிசம்பர் 2021 (11:18 IST)
ஆப்கானிஸ்தானில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தாலிபன் தெரிவித்துள்ளது. குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்ற பயணங்களின் போது, அவர்களுடன் நெருங்கிய ஆண் உறவினர் இருப்பது கட்டாயம் என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது.
 
தங்களுடன் நெருங்கிய ஆண் உறவினர்கள் இல்லாமல் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு பயணத்திற்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட மாட்டாது என்று தாலிபன் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக, தாலிபனின் நன்னடத்தை மற்றும் தீமை தடுப்பு அமைச்சகம், தேவையான வழிமுறையை வெளியிட்டுள்ளது.
 
இது குறித்து, இந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாதிக் அகிஃப் முஹாஜிர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 72 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் பெண்களுக்கு, இனி தங்கள் ஆண் உறவினர்கள் யாரும் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
இதை தவிர,  ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களை தங்கள் வாகனங்களில் அமர அனுமதிக்கக்கூடாது என்று வாகன உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
webdunia
இருப்பினும், தாலிபனின் இந்த முடிவுக்கு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஹிஜாப் விவகாரத்தில் தாலிபனின் விளக்கம் தெளிவாக இல்லை என்று அவர்கள் வாதிடுக்கின்றனர்.
 
வாகனங்களில் இசையை ஒலிக்கவும் தடை
முடியை மறைப்பதில் இருந்து முகத்தையோ அல்லது முழு உடலையோ மறைப்பது வரை ஹிஜாபுக்கான விளக்கம் மாறுபடும். பெரும்பாலான ஆப்கானிஸ்தான் பெண்கள் ஏற்கனவே தலையில் முக்காடு அணிந்திருப்பதால், இந்த கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வாதிடுக்கின்றனர்.
 
இவை அனைத்திற்கும் மேலாக, இசை மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தொடர்பாகவும் தாலிபன் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
 
இனி மக்கள் தங்கள் வாகனங்களில் இசையை ஒலிக்கச் செய்ய கூடாது என்று தாலிபன் கூறியுள்ளது. முன்னதாக,  தங்கள் சேனல்களில் பெண்கள் நடிக்கும் தொடர்களையும், நாடகங்களையும் காட்டுவதை நிறுத்துமாறு டிவி சேனல்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  
 
இது தவிர, ஹிஜாப் அணியாமல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை வழங்க முடியாது என்று செய்தி ஊடகத்தை சார்ந்த பெண் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
 
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியது என்பது நினைவுக்கூரத்தக்கது. 
 
இருப்பினும்,  அந்நாட்டை கைப்பற்றிய பின்னர், தங்களது முந்தைய ஆட்சியைப் போல பெண்களுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கும், கடுமையான கொள்கைகளை பின்பற்ற மாட்டோம் என்று தாலிபன் உறுதியளித்திருந்தது.
 
'தாலிபன் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை'
தாலிபனின் நிலைப்பாடு குறித்து பிபிசி வேர்ல்ட் சர்வீஸின் தெற்காசிய விவகாரங்களுக்கான ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன் தொடர்ந்து கவனித்து வருகிறார்.
 
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில், ஆப்கானிஸ்தான் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர் கூறுகிறார்.
webdunia
பழைய ஆப்கானிஸ்தான் அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பெரும்பாலான மாகாணங்களில் பெண்களுக்கான இடைநிலைப் பள்ளிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. தாலிபன் நாட்டைக் கைப்பற்றிய ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண்கள் படிக்க அனுமதிக்கப்பட்டனர்.  ஆனால், அதற்கு பல நிபந்தனைகளை அவர்கள் விதித்தனர். இதில், வகுப்பில் உள்ள மாணவர்களிடம் இருந்து பிரிந்து மாணவிகள் திரைக்கு மறுபுறம் தனியாக அமர ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
 
ஆப்கானிஸ்தானில் உள்ள பல மாகாணங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க உள்ளூர் தாலிபன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டாலும், அங்குள்ள பெண்கள் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.
 
தாலிபன் ஆட்சிக்கு திரும்பிய பிறகு, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து வரும் நிதி உதவி நிறுத்தப்பட்டது.  இதனால்,  இச்சமயத்தில் ஆப்கானிஸ்தானின் நிதி நிலவரம் மிகவும் மோசமாகிவிட்டது. இந்த நாடு, விரைவில் கடுமையான பசி மற்றும் வறுமையின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக பல ஊடகச் செய்திகளில் கூறப்பட்டுள்ளன.
 
இதை தவிர்க்க,குறைந்தபட்சம் தங்கள் வங்கிக் கணக்குகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு  தாலிபன்  வேண்டுகோள் விடுத்திருந்தது.  இது தவிர, ஆப்கானிஸ்தானுக்கு உதவ பல அமைப்புகளும் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
 
இதுகுறித்து, ''பெண்களின் உரிமைகளை மதித்து நடந்தால் மட்டுமே நிதி உதவி பெற முடியும் என்று உதவி வழங்கும் நாடுகள் தாலிபனிடம் தெரிவித்துள்ளன.
 
இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், டிசம்பர் தொடக்கத்தில், தாலிபன் தன் முதன்மை தலைவரின் பெயரில் ஓர் ஆணை வெளியிட்டது. பெண்களின் உரிமைகளை  வலியுறுத்தி, அதனை  நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை தாலிபன் வழங்கியது. ஆனால், அந்த வழிமுறைகளில் பெண்களுக்கான கல்வி குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை,'' என்று அன்பரசன் எத்திராஜன் கூறுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான்: இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?