Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோதியின் 8 ஆண்டு ஆட்சி: பணமதிப்பிழப்பு முதல் பொதுமுடக்கம் வரை மக்களை பாதித்த 8 விஷயங்கள்!

மோதியின் 8 ஆண்டு ஆட்சி: பணமதிப்பிழப்பு முதல் பொதுமுடக்கம் வரை மக்களை பாதித்த 8 விஷயங்கள்!
, சனி, 28 மே 2022 (13:40 IST)
நரேந்திர மோதி இந்திய பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார்.

காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி ஒன்று மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. அதேபோல முதன்முறை காங்கிரஸ் பலத்த அடியையும் சந்தித்தது.
 
மேக் இன் இந்தியா - ஸ்வச் பாரத்
 
தனது முதல் பதவிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் என்ற பெரும் திட்டங்களை அறிவித்திருந்தார் மோதி.
 
வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதேபோல இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்ய அரசு கதவுகளை திறந்தது.
 
கடந்த 2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று மோதி, ஸ்வச் பாரத் திட்டத்தை அறிவித்தார். அதன்பிறகு அரசியல் தலைவர்கள் கையில் துடைப்பங்களை வைத்து சுத்தம் செய்வதை போல போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தனர். ஆனால் மிக அடிப்படையான ஒரு விஷயம் இந்த திட்டத்தால் கவனம் பெற்றது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
 
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி
 
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோதி அறிவித்தார். அதாவது 4 மணி நேரத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாமல் போகும் என்றார். கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டில் ஹவாலா பரிவர்த்தனையை ஒழிக்கவும் இந்த நடவடிக்கையை எடுப்பதாக மோதி தெரிவித்தார்.
 
அடுத்த பல மாதங்கள் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்றனர். வங்கிகளில் தங்களின் பணத்தை மாற்றவும், ஏடிஎம்-களில் பணம் எடுக்கவும் பலரும் பல மணி நேரம் காத்து கிடந்தனர். இதில் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது.
 
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எவ்வளவு கருப்பு பணம் ஒழிக்கப்பட்டது என்பதற்கான எந்த விடையும் இதுவரை இல்லை. ஒரு வகையில் பணமதிப்பிழப்பால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. காய்கறி வியாபாரி, மளிகை கடை என பல்வேறு தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர்.
 
இருப்பினும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மக்களுக்கு சிரமம் அளிக்காமல் எடுத்திருக்க முடியாதா என்பதுதான் கேள்வியாக உள்ளது. நாட்டின் வரி அமைப்பை ஒழுங்குப்படுத்த மோதி அரசு ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது. ஒரே ஜிஎஸ்டியை கொண்டு வருவதுதான் முதல்கட்ட யோசனையாக இருந்தது.
 
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பல்வேறு குழப்பங்கள் நிலவின. இன்றைய நிலையிலும் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை கிடைப்பதில்லை என்று தெரிவிக்கின்றன.
 
முத்தலாக் சட்டம்
 
முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் என்று கூறி தங்களின் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றது உச்ச நீதிமன்றம்.
 
முத்தலாக் வழங்குவது குற்றமாக கருதப்படும் என சட்டம் இயற்றியது மோதி அரசு. இந்த சட்டம் மக்களவையில் எளிதாக ஒப்புதல் பெற்றது. மாநிலங்களவையிலும் எந்த தடையும் இல்லை.
 
முஸ்லிம் மக்களை இலக்கு வைப்பதாக பாஜக மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியால் முடியாததை பாஜக செய்துவிட்டது என்றும் ஒரு சாரார் தெரிவித்தனர்.
 
சட்டப் பிரிவு 370 ரத்து மற்றும் சிஏஏ - என்ஆர்சி
 
ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டது. இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்வது என்பது பாஜகவின் நீண்டகால திட்டங்களில் ஒன்றாகவே இருந்தது.
 
2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா 370 சட்டபிரிவை ரத்து செய்து ஜம்மு & காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக அறிவித்தார்.
 
இந்த நடவடிக்கையால் இரு முக்கிய விளைவுகள் ஏற்பட்டன. அதாவது 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் கொல்லப்பட்டவர்கள் வெளிநாட்டினர் அல்ல உள்ளூர்வாசிகள் என்று கூறப்பட்டது.
 
அரசு நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதே சமயம் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் மோதி அரசு அமைதியை கொண்டு வந்ததாக கூறப்பட்டது.
 
குடியுரிமை திருத்தச் சட்டம் வட கிழக்கு இந்தியாவில் பல எதிர்ப்புகளை பெற்றது. அசாமில் வன்முறைகள் வெடித்தன. இந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், போன்ற அண்டை நாடுகளில் உள்ள இந்துக்கள் மத ரீதியான அச்சுறுத்தல் காரணமாக 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்குள் வந்திருந்தால் அவர்களுக்கு குடியிரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் இதில் முஸ்லிம்களை சேர்க்காமல் விடுத்தது பிரிவினைவாத நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டது.
 
கொரோனா ஊரடங்கு
 
2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்தது. வைரஸை கட்டுப்படுத்த ஒரே தீர்வு லாக்டவுனாக இருந்தது. 2020 மார்ச் மாதம் தேசிய அளவிலான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு நிர்வாகம் தயாராக இருந்ததா என்பதே கேள்வி!
 
நாட்டின் முக்கிய அலுவலகங்கள், அரசு அதிகாரிகள் யாருக்கும் இந்த பொதுமுடக்க முடிவு குறித்து தெரிந்திருக்கவில்லை என பிபிசியின் ஆய்வில் தெரியவந்தது.
 
நிதி ஆயோக் மற்றும் சென்ட்ரல் விஸ்டா
 
தனது பதவிக் காலத்தில் மோதி இரு பழைய திட்டங்களை புதிய வடிவில் மீண்டும் செயல்படுத்தினார். 1950ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு திட்டக் குழு ஒன்றை அமைத்தார், இந்த குழு பொருளாதார ரீதியான முடிவுகளை எடுக்கும். 2015ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அதையே, நிதி ஆயோக் என்ற பெயரில் மீண்டும் கொண்டுவந்தார் மோதி.
 
இந்த குழு எந்த ஒரு வளர்ச்சி மாதிரியையும் இந்தியாவின் மீது திணிக்காமல் இந்திய முறையில் வளர்ச்சியை முன்னெடுக்கும்.
 
மோதியின் விருப்பமான திட்டமாக சென்ட்ரல் விஸ்டா திட்டம் உள்ளது. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம், ராஜ்பாத், சுற்றியுள்ள கட்டடங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் சமயத்தில் கட்டப்பட்டது. எனவே புதிய நாடாளுமன்றம், புதிய தலைமைச் செயலகம் மற்றும் பிற கட்டடங்களை கட்ட நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
 
இருப்பினும் இந்த திட்டம் சுற்றுச்சூழல் தரநிலைகள் பலவற்றை மீறியுள்ளதாகவும், விதிகளை பின் பற்றவில்லை என்றும், முன்மொழியப்பட்ட பணத்தைவிட அதிகம் செலவழிப்பதாகவும், பெருந்தொற்று காலத்திலும் பணியை நிறுத்தவில்லை என்றும் பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
விவசாய சட்டம்
மோதியின் ஆட்சிக் காலத்தில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு போராட்டம் அரசு எடுத்த முடிவை திரும்ப பெற செய்துள்ளது. அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாக தலைநகர் டெல்லியின் மூன்று எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
 
இந்த போராட்டத்தில் வட இந்தியாவை சேர்ந்த விவசாயிகள் குறிப்பாக பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனார். அரசுக்கும் போராட்ட குழுவுக்கும் இடையே 15 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எந்த பலனும் இல்லை. இறுதியாக பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களை ஒட்டி விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக மோதி அறிவித்தார்.
 
உஜ்வாலா, ஜன் தன் மற்றும் ஆயுஷ்மான் பாரத்
8 வருட ஆட்சிக் காலத்தில் மோதி பெண்கள், குழந்தைகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்டவர்களை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளார்,
 
அந்த வகையில் 2016ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உஜ்வாலா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார் மோதி. அதாவது மூன்று வருடங்களில் 5 கோடி கேஸ் இணைப்புகளை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். இது பெண்களை கறி அடுப்பில் சமைக்கும் சிரமங்களிலுருந்து விடுவிக்கும் என்றார்.
 
ஜன் தன் திட்டம் மூலம் அனைத்து இந்தியர்களுக்கும் வங்கி கணக்கு என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தினார் மோதி. அரசின் திட்டங்கள், அரசின் ஒரு லட்ச மதிப்பிலான இலவச காப்பீடு ஆகியவை இந்த திட்டங்கள் மூலம் பயனாளிகளை சேரும். இந்த திட்டத்தின் மூலம் 45 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடி நிதி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவிக்கிறது.
 
அதேபோல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழை மக்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் மோதி. இதை பயன்படுத்தி மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைகளை பெற்று கொள்ளலாம்.கோவிட் காலத்தில் பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால் சில தொழில்நுட்ப பிரச்னைகளாலும், பிற பிரச்னைகளாலும் இந்த காப்பீட்டை பயன்படுத்தி சிகிச்சை பெற முடியவில்லை என பலர் புகார் தெரிவித்தனர்.
 
இந்த திட்டங்கள் மோதியின் வெற்றிகரமான திட்டங்களாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் இவை விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளன. இந்த திட்டங்கள் மோடியையும் பாஜகவையும் மேலும் பிரபலமாக்கியது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை!