Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் 6 தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது அரசின் தந்திரமா?

Advertiesment
இலங்கையில் 6 தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது அரசின் தந்திரமா?
, ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (15:37 IST)
இலங்கைக்குள் தடை செய்யப்பட்ட 6 தமிழ் அமைப்புக்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

 
ஆனால், இது இலங்கை அரசின் ஏமாற்று நாடகம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு, கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய 6 அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. இதன்படி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், 316 பேருக்கான தடை நீக்கப்பட்டுள்ளதுடன், 6 அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. 316 பேரில் ஒரே பெயரை கொண்ட 7 பேரின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், புதிதாக 55 பேரையும் 3 அமைப்புக்களையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இலங்கைக்குள் 316 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 அமைப்புக்களுக்கு நாட்டிற்குள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அடங்குகின்றது.

அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலப் பகுதியில் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் மீதான தடையும் அமலில் உள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச ரீதியிலுள்ள தமிழர்களின் பங்களிப்பு அவசியம் என கடந்த காலங்களில் தமிழர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம், ரணிலின் ஒரு தந்திர நடவடிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், ''ஏற்கனவே இந்த தடை நீக்கப்பட்டிருந்தது. 2015, 2019ம் ஆண்டு காலப் பகுதிகளில் ரணில் - மைத்திரி அரசாங்கத்தினால் இந்த தடை நீக்கப்பட்டிருந்தது. மீண்டும் கோட்டாபய ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அதே தடை விதிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த தடை நீக்கப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க அறிவிக்கின்றார். தடை இருந்த காலத்திலேயே மங்கள சமரவீர, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் 2003ம் ஆண்டு சிங்கப்பூரிலும், 2015 மற்றும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் கொழும்பிலும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் பேசியிருக்கின்றார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு, கனடா மக்கள் அவை, ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற மக்கள் அவைகளும், அதாவது புலம்பெயர் நாடுகளில் மக்கள் பலமுள்ள அமைப்புக்கள் இன்றும் தடை பட்டியலுக்குள் தான் இருக்கின்றது. 100 வீதமான தடையும் விதிக்கப்பட்டதாகவே இருக்கின்றது.

இந்த தடை நீக்குகின்றமையினால், ஒரு பெரிய மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. ஆனால் வெளிநாடுகளிலுள்ள 65 முதல் 70 சதவீத மக்களின் செல்வாக்கை கொண்ட கனடா மக்கள் அவை, நாடு கடந்த தமிழீழ அரசு, பிரான்ஸ் ஒன்றியம், சுவிஸ் ஒன்றியம் போன்ற மக்களின் செல்வாக்கை கொண்ட அமைப்புக்கள் இப்போதும் தடையில் தான் இருக்கின்றது.

இந்த தடை நீக்கமானது, ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கியதாக கருதப்படாது. தமிழீழத்தை கைவிட்டோம் என்று கூறுவோரின் மீதான தடையையே அரசாங்கம் நீக்கியுள்ளது. இது வெளிப்படையான தார்மீகமான தடை நீக்கம் என்று கருத முடியாது. இதுவொரு சரியான தடை நீக்கம் என்றால், நாடு கடந்த தமிழீழ அரசு உள்ளிட்ட அனைத்து அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியிருக்க வேண்டும்.

உலக நாடுகளிடம் ஏமாற்று வித்தையொன்றை காண்பிக்கும் இலங்கை அரசாங்கத்தின் வழமையான ஏமாற்று நாடகத்தின் ஒரு கட்டம், ரணிலுடைய தந்திரத்தின் ஒரு பாதையே இது. ஆகவே இந்த தடை நீக்கத்தை மகிழ்ச்சி அடையகூடிய ஒன்றாக பார்க்கவில்லை" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி குடிநீர் பானையை தொட்ட மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்!