மனிதர்களினால் ஆளப்படுகின்ற பூமியில் அவன் நினைத்தால் அமைதியும் போரும் ஏற்படக் காரணமாகிறது. ஆள்வதும் அவனால் வீழ்வதும் அவனால் எனும்போது, அவனை அவனே எப்படி தன்னை அடுத்தகட்ட நகர்வுக்கு இந்த உலகினை நகர்த்தி, வளரும் இளம் தலைமுறைக்கு தன் செயல்களால் முன்னுதாரணமாகியிருக்க வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தலைவர்களின் கருத்தாயிருக்கிறது.
யார் நினைத்தாலும் நினைக்கவில்லை என்றாலும் இந்த உலகம் போய்க் கொண்டே இருக்கிறது. மாறிக் கொண்டயிருக்கிறறது. மாற்றம் என்பது மாறாதது என்று ஆயிரம் தத்துவங்கள் சொன்னாலும், கடவுள் இறந்துவிட்டார் என்று சிக்மண்ட் பிராய்ட் போல் ஆயிரம் தத்துவ மேதைகள் வந்து ஆயிரம் தத்துவங்கள் உதிர்த்தாலும், பூமி சுற்றாமலிருக்கப் போவதில்லை. நட்சத்திரங்கள் நகராமலிருக்கப் போவதில்லை, சந்திரம் இரவில் ஒளிவீசுவதில் இருந்து ஓய்வெடுப் போவதில்லை. கடலில் அலைகள் கரைகளின் கன்னத்தை முத்தமிடாமல் இருப்பதில்லை. எல்லாம் அதனதன் பாட்டிற்கு நடந்துகொண்டுதானுள்ளது.
மனிதனுக்காகவே இந்த உலகம் படைக்கப்பட்டதாக அவன் நினைக்குபோதுதாம் இந்த உலகில் குடியிருந்த அமைதி என்பது டைனோசர் காலத்தைப்போல் அழிவுக்கு வித்திடுவதாக உணர்கிறோம்.
ஒரு போனில் பேசித் தீர்க்கவேண்டிய விஷயத்தை மீசையை முறிக்கிக் கொண்டு ஊதிவளர்த்துவிட்டு, வீராப்புக்காக, இன்று முட்டிமோதிக்கொண்டு, அப்பாவி மக்களுக்கு உயிர்பயத்தைக் காட்டிவருகிற ரஷ்யா- உக்ரைன் நாட்டின் போரை எப்படி நிறுத்துவது என்று உலக நாடுகள் இந்தனை நாட்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே பல நூற்றுக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் பலியாகியிருப்பார்கள்.
அனைத்து நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உண்டு; ஆனால், அன்பின் சிறந்த ஆயுதமுண்டா என்று யோசித்துப் பார்த்தால் அதிபயங்கர போருக்கு ஏன் வலியச் செல்லப்போகிறார்கள்?
யாரோ ஒருவரின் சுய நலத்திற்காகக் கிள்ளிவிடப்படும் பிரச்சனைகள் தான் காதைத் திருகுவதுபோல் சிலரது ரோசத்தை உரசிவிட்டு தன் பலத்தை நிரூபித்துக் காட்டுவதற்கானதாக மாறும்போது, இரு நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் அது பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும் அபாயமுள்ளது.
இதற்கிடையே தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு இருப்பதற்காக சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானை சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கு சவால் விடுப்பதுபோல் தைவானில் ஜன நாயகத்தை நிலை நாட்ட நட்பு நாடான அமெரிக்க உதவும் என்று கூறி சமீபத்தில் அந்த நாட்டு சபா நாயகர் அங்குச் சென்று பாராளுமன்றத்தில் உரையாற்றியது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளது.
ஆப்கானிஷ்தானின் எப்போதும் இருக்கும் வன்முறையால் அங்குள்ள மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்படும் அபாயம்! ஏற்கனவே பழைமை விரும்பிகளான தாலிபான்கள், பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடும் அவர்களின் சுதந்திரத்தில் கழுத்தை நெறிப்பதுபோல் பொதுவெளியில் பர்தா அணிந்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். எப்போதும், இருப்புப்பட்டரையில் ஆயுதம் சத்தம் போன்று, அங்குத் துப்பாக்கிக் குண்டுகளும், ஆயுதங்களும், தீயும், ரத்தம் என ஒரெ போர்க்களப் பூமியாகியுள்ள அந்த நாட்டில் அமெரிக்கப்படைகள் வெளியேறிய பின், ஐஎஸ் பயங்கரவாதிகள் வாலாட்டத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஒரு முஸ்லிம் மதகுரு கொல்லப்பட்டுள்ளார்.
1986 ஆம் ஆண்டு, சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகத்தை எழுதியதற்காக இஸ்லாமியர்களின் வெறுப்புக்கு ஆளாகி, இங்கிலாந்தில் இந்தனை ஆண்டுகள், உயிருக்கு அச்சுறுத்தல் பயத்துட்ன வாழ்ந்து வந்தவர் சல்மான் ருஷ்டி. இவர், நேற்று, அமெரிக்காவில் நியூயார்க்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஹாதி மதார் (24) என்ற நபரால் ,20 நொடிகளில் 15 முறை கத்தியால் குத்தப்பட்டு, படுகாயம் அடைந்து, கண்பார்வையை இழக்கும் அபாயத்தையும் கை நரம்புகள் மோசமாகப் பாதிக்கப்படு, கை செயலிழக்க வாய்ப்புள்ளதக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு செயலுக்கு மற்றொரு செயல் என்றால்கூட பரவாயில்லை அது பழிவாங்குதலில் கொண்டுபோய் விட்டால் உலகத்தின் நியாயத்தீர்ப்பு ஒவ்வொருவரின் அதிகாரத்தின் கையில் கொடுக்கப்பட்டதுபோல் பூமியே போர்க்களமாகி விடும்.
இன்று, மெக்ஸ்சிகோவில் ஒரு போதைக்கும்பல் வன்முறையில் ஈடுபட்டதில் 9 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மற்றொருபுறம், இலங்கையில் நெருக்கடியில் தவித்த போது, 25 ஆயிரம் கோடி ரூபாயை வாரிக் கொடுத்து, எரிபொருள் சப்ளை செய்த இந்தியாவுக்கு எதிராகச் சீனாவுக்குச் சொந்தமாக துறைமுகத்தில் ஒரு உளவுக் கப்பலை நிறுத்துவதற்குச் சம்மதித்து, இந்தியாவை உளவு பார்ப்பதற்கு உதவி செய்திருக்கிறது.
அதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவே, சீன கப்பலை அப்புறப்பத்த உத்தரவிட்டுள்ளது இலங்கை.
இதொரு பக்கம் இருக்க, தமிழகத்தில் கோவையில் ஒரு முதிய தம்பதியைக் கட்டிப்போட்டு, வீட்டிலுள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர் காதலவர்கள், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் காதலன் பொறியியல் பட்டதாரி, காதலியோ எம்பி ஏ பட்டதாரி, இருவரும் படித்த படிற்ப்பிற்கு நல்ல வேலை கிடைக்கும் என்ற நிலையில், சமூதாயத்திற்கு தீங்கிழைக்கும் நோக்கத்திற்கு அவர்கள் ஏன் வந்தார்கள்? என்பது அதிர்ச்சியாகவுள்ளது.
இப்படி உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும், மனிதனால் கட்டமைக்கப்பட்டவைகள்தான். அவனனறி இப்போது, ஒரு அணுவும் நகராது என்பதற்கேற்க மனிதனால் தீர்மானிக்கப்பட்டு, அது நன்மையிலோ தீமையிலோ முடிகிறது.
நன்மையில் முடிந்தால் அது யாருக்கும் பாதிப்பில்லை; தீமையில் முடிந்ததென்றால் அது, அதை யோசிப்பவருக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கூட தீமையிலேயே முடியும்.
கத்தியை எடுத்தவன் கத்தியில் வீழ்வான் என்று பெரியோர்க்ள் சும்மாவா சொன்னார்கள்?
அறியலும், தொழில் நுட்பமும் வளர வளர மனிதனின் சகிப்புத்தன்மையும், அவரது பக்குவமும் பகுத்தறிவும் பின்னோக்கிப் போய்கொண்டிருக்கிறதோ என எண்ணத்தோன்றும் விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும் உலகில் அடுத்த நொடி யாருக்கும் நிச்சயமில்லை என்பதால் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பை உணர்ந்து ஓஷோ சொன்னதுபோல் இந்திய உலகில் எல்லோரும் குறிப்பிட்ட காலத்திற்குச் சுற்றுலா வந்தவர்கள் என்று, அதற்கு நாம் கொடுக்கும் வாடகை தான் இந்த வாழ்க்கைப் பயணத்தில் அன்பு என்று எடுத்துக்கொண்டால் இங்கு எல்லாமே சுபிட்சத்தில்தான் முடியும்!
சினோஜ்