Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள் என்னென்ன?

Advertiesment
5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள் என்னென்ன?
, வியாழன், 19 டிசம்பர் 2019 (21:33 IST)
சாய்ராம் ஜெயராமன்
 
(2019ஆம் நடந்த மற்றும் 2020இல் நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு)
 
பொதுவாக புத்தாண்டு பிறக்கும்போது சாம்சங், ஒன்பிளஸ், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் வரும் ஆண்டில் வெளியிடப்போகும் அலைபேசிகள் உள்ளிட்ட கருவிகள் குறித்தே பேச்சுகள் மேலோங்கி இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தொழில்நுட்ப துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய 5ஜி தொழில்நுட்பம் தங்களது நாடுகளில எப்போது அறிமுகமாகும்? அது எவ்வளவு வேகமும், விலையும் எவ்வளவு இருக்கும்? போன்ற கேள்விகள் பல்வேறு தரப்பினரிடையே மேலோங்க ஆரம்பித்துவிட்டது.
எனவே, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு 5ஜி தொழில்நுட்பத்தின் வருகையை இந்தியாவில் எதிர்பார்க்கலாமா என்ற கேள்வியுடன், மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கும் பதிலை காண்போம்.
 
5ஜியின் அடிப்படையும், அதிவேகமும்
 
ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். 5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு முன்னர், இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் குறித்து தெரிந்துகொள்வோம்.
 
உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு சராசரியாக 44 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவை பொறுத்தவரை சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் இருப்பதாகவும் ஓபன்சிக்னல் என்னும் சர்வதேச கம்பியில்லா இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
 
இந்நிலையில், உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறுகிறது.
 
இந்தியாவுக்கு வருமா?
 
அலைபேசி தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளான அமெரிக்கா, சீனா, தென்கொரியா, பிரிட்டன், ஜெர்மனி ஆகியவற்றின் குறிப்பிட்ட பகுதிகளில் 5ஜி 2019ஆம் ஆண்டு அறிமுகமானது.
 
அலைபேசி பயன்பாட்டாளர்களில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கான பூர்வாங்க பணிகள் 2017ஆம் ஆண்டே தொடங்கிவிட்டாலும், பல பணிகள் எழுத்தளவிலேயே இருக்கின்றன. அதாவது, இந்தியாவில் இதுவரை 5ஜி தொழில்நுட்பத்துக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டு பணிகள் கூட முடியவில்லை. அதற்கு பின்புதான் சோதனை முயற்சிகள், திறன்பேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை, கட்டமைப்பு மேம்பாடு, விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கும்.
 
இருப்பினும், இந்தியாவுக்கென பிரத்யேக 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் உலகின் முன்னணி நிறுவனங்களான குவால்காம், நோக்கியா, இசட்.டி.இ. மட்டுமின்றி அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள ஹுவாவேவும் ஈடுபட்டுள்ளன.
 
குறிப்பாக, இந்தியாவில் 5ஜியை அறிமுகப்படுத்தும் பணியில் ஜியோ, பிளிப்கார்ட், அமேசான் இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக குவால்காம் நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஆனால், மற்றொரு புறம், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா ஆகியவை 2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 70,000 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. அதன் காரணமாக, 4ஜி உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் கட்டணத்தை ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா மட்டுமின்றி, ஜியோவும் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை 2019 டிசம்பர் மாதத்தில் உயர்த்தின.
 
நாட்டின் முன்னணி நிறுவனங்களின் வருவாய் இழப்பு, 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொடரும் மெத்தனம் போன்ற காரணங்களினால் "இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தின் வருகைக்கு மேலும் ஐந்தாண்டுகள் ஆகலாம். இதுதான் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பார்வை" என்று சிஓஆர்ஐ அமைப்பின் தலைமை இயக்குநர் ராஜன் மேத்யூஸ் கூறியதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஒருவேளை, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமாக ஐந்தாண்டுகள் ஆகும் பட்சத்தில், காலதாமதத்தின் காரணமாக, சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில், அதன் கட்டணம் மற்ற நாடுகளை விட குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 
மடித்து பயன்படுத்தும் திறன்பேசிகள் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
 
ஒவ்வொரு ஆண்டும் திறன்பேசிகளில் அறிமுகப்படுத்தப்படும் புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் அவற்றின் மீதான ஈர்ப்பை எள்ளளவும் குறையாமல், தக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், திறன்பேசி வடிவமைப்பில் 2019ஆம் ஆண்டு ஒரு புதிய புரட்சியை தொடங்கி வைத்ததாகவே கூறலாம்.
 
ஆம், 1973ஆம் ஆண்டு சுமார் ஒரு கிலோ எடையுடன் அறிமுகமான மோட்டோரோலாவின் முதல் அலைபேசி தொடங்கி இத்தனை ஆண்டுகளாக அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நினைத்து பார்த்தாலே வியப்பாக இருக்கும். அந்த வகையில், பல்லாண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த மடித்து, விரித்து (Foldable smartphone) பயன்படுத்தும் திறன்பேசிகள் 2019ஆம் ஆண்டு வெளியாகி பலரையும் பிரமிக்க வைத்தன.
 
குறிப்பாக, சாம்சங், ஹுவாவே, ரொயோலே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது முதலாவது மடித்து பயன்படுத்தும் திறன்பேசிகளை வெளியிட்டன. இதுபோன்ற சிக்கலான வடிவமைப்பில் வெளியிடப்பட்ட முதல் தயாரிப்பு என்பதால், இந்த வகை திறன்பேசிகளின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. அது மட்டுமின்றி, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்டாலும், சில நிறுவனங்களின் திறன்பேசிகள் உடைந்த சம்பவங்களும் அரங்கேறின.
 
2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, மைக்ரோசாஃப்ட், மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது முதலாவது மடித்து பயன்படுத்தும் திறன்பேசியை வெளியிட உள்ளன. அதுமட்டுமின்றி, தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கும் கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி தொடர்பான தங்களது பிரத்யேக வடிவமைப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அந்த வகையில், 2020ஆம் ஆண்டு மடித்து பயன்படுத்துவது உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய திறன்பேசிகளின் வருகை உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவற்றில் பொதுவாக நிலவும் தொழில் நுட்பம், விலை சார்ந்த பிரச்சனைகள் களையப்படக்கூடும்.
 
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஏற்படுத்தப்போகும் பாய்ச்சல்
 
இன்னும் சில தசாப்தங்களில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன் மனிதர்களின் நடவடிக்கைகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் மனிதர்களின் நடவடிக்கைகள் என்றொரு வகைப்பாடே உருவாகலாம்! மனிதர்களின் வாழ்க்கையில் தொழில்நுட்பம் எண்ணற்ற வியத்தகு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், ஒவ்வொருவரின் செயல்பாட்டில் திறன்பேசிக்கு அடுத்து, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவை முக்கிய தாக்கம் செலுத்தும் காரணியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
 
2019ம் ஆண்டைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு நமது தினசரி வாழ்க்கையில் பல்கி பெருகியுள்ளது, எப்படி என்கிறீர்களா? இதோ பார்ப்போம்.
 
கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் மின்னஞ்சலுக்காக (ஜிமெயிலில்) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது, உலாவியின் (Browser) நீட்சி (Plugin) எழுத்து பிழைகளை சுட்டிக்காட்டியதை பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த ஆண்டில்தான் நீங்கள் ஒரு வார்த்தையை தட்டச்சு செய்ய ஆரம்பித்தாலே அடுத்த வார்த்தை என்னவாக இருக்கும், உங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சலை திறக்கும்போதே, அதற்குரிய மறுமொழியை பரிந்துரைக்கும் வசதி ஆகியவற்றை பார்த்து பலரும் வியந்திருப்பீர்கள்.
 
தமிழ் மொழியில் கணினியிடம் பேசலாமா?
 
மின்னஞ்சலில் மேற்குறிப்பிட்ட மேம்பாடுகள் என்றால், அமேசான், நெட்பிலிக்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் பயன்பாட்டுக்கு ஏற்ற பரிந்துரைகள், விளம்பரங்கள்; கூகுளில் ஒரு வார்த்தை தட்டினாலே முழு தேடல் கேள்வியையும் பரிந்துரைக்கும் வசதிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்கிறது. இந்நிலையில், ஸ்விகி போன்ற செயலிகளில் உங்களது முன்பதிவு நிலவரத்தை தெரிந்துகொள்வது, ரத்து செய்வது உள்ளிட்ட விடயங்களை மனிதர்களுக்கு பதிலாக சாட் பாட்டுகள் செய்கின்றன. இதுபோன்ற எண்ணற்ற வகைகளில் உங்களது பெரும்பாலான தினசரி பயன்பாடுகளில் இவ்விரு தொழில்நுட்பங்களின் தாக்கம் 2019ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.
 
2020ஆம் ஆண்டை பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தோடு மனிதர்களின் மொழி வழக்கை கணினிகளுக்கு புரிய வைக்கும் இயற்கை மொழி முறையாக்க(Natural language processing) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கலாம். கேட்பதற்கு இந்த தொழில்நுட்பங்கள் புதிது போன்று இருக்கலாம், ஆனால் அவற்றை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகிறீர்கள்.
 
"ஹே கூகுள்" என்று உச்சரிக்காத திறன்பேசி பயன்பாட்டாளர்களே இருக்க முடியாத காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அழைப்புகளை மேற்கொள்ள, தட்டச்சு செய்ய, பாடல்களை பல்வேறு செயலிகளில் இயக்க என பல்வேறு வகைகளில் பயன்படும் கூகுள், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் வாய்ஸ் அசிஸ்டன்ஸ்கள் ஆங்கிலம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும், இந்திய மொழிகளில் இந்தியில் மட்டுமே தற்போதைக்கு கிடைக்கின்றன. ஆனால், 2020ஆம் ஆண்டில் தமிழ், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் அவற்றின் சேவை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் மூலம், இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் 'கூகுள் ஹோம்', அமேசானின் 'அலெக்சா' உள்ளிட்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விற்பனையும், பயன்பாடும் 2020இல் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
திறன்பேசியால் ஏற்படும் உடல், மனநல பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பங்கள்
 
நாளுக்கு நாள் நமது திறன்பேசி பயன்பாடு அதிகரித்து வருவதை மறுக்கவே முடியாது. முதலில், தொலைபேசிக்கு மாற்றாக குரல்வழி அழைப்புகளை மேற்கொள்வதற்காக மட்டும் அறிமுகமான அலைபேசிகள், பிறகு இணையம் வந்த பிறகு திறன்பேசியாக உருவெடுத்து, தற்சமயத்தில் தொலைக்காட்சி பெட்டியே தேவையில்லை என்ற நிலைக்கு நம்மை கொண்டு செல்கின்றன.
 
எந்த அளவுக்கு திறன்பேசியின் பயன்பாடு அதிகரிக்கிறதோ, அதைவிட அதிகளவு நமது உடல் நலனும் பாதிக்கப்படுவது என்பது பெரும்பாலானோர் அறிந்ததே. தங்களது செயலியை பயன்படுத்தும் 11,000 பேரின் திறன்பேசி பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக 3 மணிநேரம் 15 நிமிடங்கள் திறன்பேசி பயன்படுத்துவதாக 'தி ரெஸ்கியூ டைம்' என்ற செயலி தனது 2018ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
நாம் எவ்வளவு நேரத்தை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செலவிடுகிறோமோ அதற்கேற்ற அதிக தொகையை அந்நிறுவனங்கள் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாக ஈட்டி வருகின்றன.
 
இந்நிலையில், உலகம் முழுவதும் 'டிஜிட்டல் வெல்பீயிங்' என்பது முக்கிய பேசுபொருளாக மாறி வருவதால், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது சேவைகளில் பயன்பாட்டாளர்கள் செலவிடும் நேரத்தை குறிக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு வசதிகளை அறிமுகப்படுத்தின.
 
உதாரணமாக, 2018ஆம் ஆண்டு 'Time Watched' எனும் வசதி யூடியூபில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம், நீங்கள் 'இன்று', 'கடைசி 7 நாட்களில்' எவ்வளவு நேரம் யூடியூப்பில் காணொளி பார்த்தீர்கள் என்பதை அறிந்துகொள்வதுடன், அதை கட்டுப்படுத்துவதற்கும் வசதிகள் அளிக்கப்பட்டன. இதேபோன்ற சேவையை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தின.
 
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கூகுள் நிறுவனம் வாழ்க்கை - தொழில்நுட்பம் ஆகியவற்றை சமநிலைப் படுத்திக்கொள்ள உதவும் வகையில், ஆறு செயலிகளை வெளியிட்டது. நீங்கள் ஒருநாளைக்கு திறன்பேசியின் திரையை எத்தனை முறை திறக்கிறீர்கள் என்பதை அறிவிப்பது முதற்கொண்டு ஆறு வெவ்வேறு வகைகளில் இந்த செயலிகள் பயனர்களுக்கு உதவும்.
 
செயலிகளை கட்டுப்படுத்த உதவும் செயலி
 
ஒருவர் தனது திறன்பேசியில் உள்ள செயலிகளை தேவைக்கேற்றாற்போல் அதன் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வாய்ப்பை கொடுக்கும் 'போகஸ்' எனும் செயலியை பல மாதங்கள் நடந்த சோதனைக்கு பிறகு 2019ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி கூகுள் வெளியிட்டது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட செயலி, எந்த நேரத்திற்கு செயல்பட வேண்டும், எப்போது நோட்டிபிகேஷன் காண்பிக்கலாம், எப்போதெல்லாம் உங்களை இடைவேளை எடுக்க நினைவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இந்த செயலி செய்யும்.
 
இதுபோன்ற 'Digital Wellbeing" செயலிகளை, வசதிகளை கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து 2020ஆம் ஆண்டும் எதிர்பார்க்கலாம்.
 
லைக்குகளை பார்க்க முடியாமல் போனால்...
 
பொதுவாகவே திறன்பேசியை கட்டுக்கடங்காத அளவுக்கு பயன்படுத்துவோர் ஒரு வகை என்றால், வெறும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காகவே பதிவுகளை இட்டு, அதை நூற்றுக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருப்போர் மற்றொரு வகை.
 
இந்த இரண்டாவது வகையினரின், திறன்பேசி பயன்பாட்டை குறைப்பதற்காகவே இன்ஸ்டாகிராமில் லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் முடிவை அந்நிறுவனம் கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பரிசோதனை செய்து வருகிறது. அடுத்ததாக ஃபேஸ்புக் நிறுவனமும் இதைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள், சமூக ஊடகங்களில் லைக்குகளின் எண்ணிக்கையை பார்ப்பதால் உங்களுக்கு வீணாகும் நேரம் குறையக்கூடும்.
 
உங்களது அந்தரங்கத்தை அபகரிக்க நினைக்கும் ஹேக்கர்கள்; பாதுகாப்பது எப்படி?
 
எப்போதெல்லாம் புதியதொரு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் அதன் வாயிலாக பணம், தரவு உள்ளிட்டவற்றை சுரண்டும் வழிகளும் ஹேக்கர்களால் கண்டறியப்பட்டு வருகின்றன.
 
'யாரோ எனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்துவிட்டார்கள்' என்பது தொடங்கி, 'எனது ஒட்டுமொத்த கணினியின் செயல்படும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு விட்டது; பணம் தந்தால்தான் விடுவிப்பார்கள்' என்பது வரை ஹேக்கர்களால் மக்கள் புலம்பும் சம்பவங்களும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதற்கு, 2019ஆம் ஆண்டு விதிவிலக்கல்ல.
 
பாதுகாப்புக்கு பெயர்போன அமெரிக்க அரசுத்துறைகள் தொடங்கி, ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனங்கள் வரை, 2019ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் அந்தரங்க தகவல்கள் பல்வேறு விதங்களில் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை எழுப்பின.
 
600 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் கடவுச்சொல் தொடங்கி, சுகாதாரம், புகைப்படம், உணவு, நிதி, வாகனம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டதன் மூலமும், பாதுகாப்பு உறுதிசெய்யப்படாததன் காரணமாகவும் இந்த தகவல்கள் வெளிவந்தன.
 
இந்தியாவின் நிலவரம் என்ன?
 
இந்தியாவை பொறுத்தவரை, நாட்டின் மிகப் பெரிய உள்ளூர் வியாபாரங்கள்/ சேவைகள் குறித்த முடிவுகளை வழங்கும் தேடுபொறி இணையதளமான 'ஜஸ்ட் டயலின்' 100 மில்லியனுக்கும் மேலான பயன்பாட்டாளர்கள் குறித்த தரவுகள் இணையத்தில் பாதுகாப்பற்ற வகையில் சேமிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம், 10 கோடி பேரின் அலைபேசி எண், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட அந்தரங்கத் தகவல்கள் பொதுவெளியில் வெளியாயின.
 
இதுபோன்ற சூழ்நிலையில், 2020ஆம் ஆண்டில் ஒரு இணையதள பயன்பாட்டாளர் தனது அந்தரங்கத் தரவுகளை பறிகொடுக்காமல் இருப்பதற்கு மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்களை சொடுக்காமல் இருப்பது, நம்பகத்தன்மை இல்லாத செயலிகள், இணையதளங்களில் கணக்குகளை தொடங்குவது - தரவுகளை பதிவேற்றுவதை தவிர்ப்பது, கடவுச்சொல்லை பாதுகாப்பற்ற வழிகளில் சேமித்து வைப்பதை தவிர்ப்பது போன்ற எண்ணற்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
 
அதே சமயத்தில், இந்திய மக்களிடமிருந்து நிறுவனங்கள் தரவை எப்படி சேகரிப்பது, சேமிப்பது, பயன்படுத்துவது, விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதம், மக்களுக்கு உள்ள உரிமைகள் உள்ளிட்டவற்றை நெறிமுறைப்படுத்தும் வகையில் "தி பர்சனல் டேட்டா ப்ரொடெக்சன் பில்" என்ற புதிய மசோதாவை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு அறிமுகமாகும் என்று கருதப்படும் இந்த மசோதா இந்தியர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை செய்த முதல்வர் பழனிச்சாமி!