Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கத்தாரில் கால்பந்து உலகை மிரள வைத்த 3 நிமிடங்கள்

Advertiesment
FIFA
, வெள்ளி, 2 டிசம்பர் 2022 (14:38 IST)
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறும் நிலையில், ஒரு மூன்று நிமிடங்களுக்கு கால்பந்து உலகம் இன்னும் கூடுதலான பேரதிர்ச்சியில் இருக்கும் சூழல் ஏற்பட்டது

கத்தாரில் ஜெர்மனிக்கும் மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவுக்கும் இடையேயான கால்பந்து போட்டி நடந்தபோது 70ஆவது நிமிடத்துக்கும் 73ஆவது நிமிடத்துக்கும் இடையேயான மூன்று நிமிடங்கள்தான் அவை.

அந்த மூன்று நிமிடங்களில் பெல்ஜியமும் ஜெர்மனியும் மாத்திரமல்லாமல் ஸ்பெயின் அணியும் போட்டியில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டிருந்தது.

ஆனால் அப்படி நடக்கவில்லை. ஜெர்மனின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் ஸ்பெயின் அணி தப்பிப் பிழைத்து அடுத்த சுற்றுக்குச் சென்றது. உண்மையில் ஜப்பான் - ஸ்பெயின், ஜெர்மனி- கோஸ்ட்டா ரிகா ஆகிய போட்டிகள் நடந்த ஒன்றரை மணி நேரமும் ரசிகர்கள் ரோலர் கோஸ்டரில் சென்ற உணர்வில்தான் இருந்திருப்பார்கள்

3 நிமிடத்தில் என்னதான் நடந்தது?

ஏற்கெனவே ஜப்பானுடனான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் அதிர்ச்சியில் இருந்த ஜெர்மனி அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் கண்டது. 

அதே நேரத்தில் மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி ஸ்பெயினுடன் மோதிக் கொண்டிருந்தது.

ஸ்பெயினுடன் சமன் செய்ததால் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே கொண்டிருந்த அணிக்கு கோஸ்ட்டா ரிக்காவுடனான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. முதல்பாதியில் அந்த அணியின் ஆக்ரோஷமான ஆட்டம் கோஸ்ட்டா ரிக்காவை மிரளவைத்தது. 

ஆனால் இரண்டாம் பாதியில் கோஸ்ட்டா ரிக்கா அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. அப்போது ஆட்டம் முடிவதற்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்தன. 

அதே நேரத்தில் மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி ஸ்பெயின் அணியுடன் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதனால் அந்தத் தருணத்தில் ஜெர்மனியும் ஸ்பெயினும் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்தன.

கோஸ்டா ரிக்கா 2 கோல்களை அடித்த பிறகு ஜெர்மனியால் கோல் அடிக்க முடியாமல் போயிருந்தால், ஒரே நாளில் ஐரோப்பாவின் மூன்று முக்கியமான அணிகளான ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய அணிகள் உலகக் கோப்பை போட்டியின் தொடக்கச் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ்

ஜெர்மனியும் ஸ்பெயினும் இருக்கும் ஒரு பிரிவில் இருந்து கோஸ்ட்டா ரிக்காவும் ஜப்பானும் அடுத்த சுற்றுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் போட்டியில் வெல்ல வேண்டும் வேட்கையைத் தீவிரப்படுத்தியது ஜெர்மனி. கோஸ்ட்டா ரிக்கா கோல் அடித்த மூன்றாவது நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்து சமன் செய்தது.

ஜெர்மனியின் ஆவேசத் தாக்குதல்

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஜெர்மனி வீரர்கள் கோஸ்ட்டா ரிக்காவின் கோல்வலையைச் சுற்றி பந்தை எடுத்து வந்து அடித்துக் கொண்டிருந்தார்கள். பல தாக்குதல்களின்போது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது, பல நேரங்களில் கோலுக்கு மிக அருகில் சென்றது. சில நேரங்களில் கோஸ்ட்டா ரிக்காவின் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. ஒருமுறை கோல்கீப்பரின் முகத்தில் பட்டு வெளியேறியது.
webdunia

கோஸ்ட்டா ரிக்கா அணி இரண்டு கோல்களை அடித்த 70-ஆவது நிமிடத்துக்குப் பிறகு ஜெர்மனி அணி தீவிரமாக ஆடி 73-ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தது. அதன் பிறகும் ஜெர்மனி ஆடியது உக்கிரமான ஆட்டம்தான்.

83-ஆவது நிமிடத்தில் ஹேவெர்ஸ்ட் ஜெர்மனி அணிக்காக மற்றொரு கோலை அடித்தார். 89-ஆவது நிமிடத்தில் ஃபுல்க்ரக் மற்றொரு கோலை மிக எளிமையாகப் பெற்றார். முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.

வென்றவர்களும் தோற்றவர்களும் கண்ணீர்

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் மொத்தமாக நான்கு புள்ளிகள் மட்டுமே பெற்றிருப்பதாலும் கோல் வித்தியாசத்தில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றிருப்பதாலும் ஜெர்மனி அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. 

அதே நேரத்தில் தோல்வி அடைந்த கோஸ்ட்டா ரிக்கா அணி ஏற்கெனவே ஜப்பானை வீழ்த்தி மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது. அதனால் கடைசி இடத்தில் இருந்தபடி அந்த அணியும் வெளியேறியது. 

ஜெர்மனி - கோஸ்ட்டா ரிக்கா போட்டி முடிவடைந்ததும் இரு நாட்டு அணி வீரர்களும் ரசிகர்களும் சோகத்தில் இருந்தனர். பலர் கண்ணீர் வடிப்பதை தொலைக்காட்சித் திரைகள் காட்டின. 

நான்கு முறை உலகச் சாம்பியனாக இருந்த ஜெர்மனி அணி கடந்த உலகக் கோப்பை போட்டியிலும் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

ஸ்பெயின் அணி தப்பியது எப்படி?

ஸ்பெயின் அணி கோஸ்ட்டா ரிக்கா அணியுடனான முதல் போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதனால்தான் ஜப்பானுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த போதும் ஒட்டுமொத்தமாக அடித்த கோல்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஸ்பெயின் அணி ஜெர்மனியைவிட முந்தியிருந்தது.

ஒரு வேளை ஜெர்மனியுடனான ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணி வென்றிருந்தால் அந்த அணி 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குச் சென்றிருக்கும். ஜெர்மனி அணியின் ஆக்ரோஷமான வெற்றி அந்த அணிக்கு உதவியதோ இல்லையோ, ஸ்பெயின் அணிக்கு நிச்சயமாக உதவியது.

இன்றைய போட்டிகள் என்னென்ன?

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன. தென்கொரியா - போர்ச்சுகல் ஆகிய அணிகள் இன்று இரவு இந்திய நேரப்படி 8.30 மணிக்கு களம் காண்கின்றன.

அதே நேரத்தில் தொடங்கும் மற்றொரு போட்டியில் கானா - உருகுவே அணிகள் மோதுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு செர்பியா - சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் - பிரேசில் அணிகள் மோதுகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 வழிச்சாலையாக தரம் உயரும் ஈ.சி.ஆர்: எதிர்ப்பு கிளம்புமா?