கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை
2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எதிராக நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு துருக்கி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
வெனிசுவேலா தேர்தல்: உலக நாடுகள் கண்டனம்
வெனிசுவேலா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இங்கு தேர்தல் நடந்த விதத்தை உலக நாடுகள் கண்டித்துள்ளன. வெனிசுவேலா அரசுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய தடைகளை விதித்துள்ளார். மேலும் அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள மேலும் 14 நாடுகள், வெனிசுவேலாவில் உள்ள தங்களது தூதரை திரும்ப அழைத்துள்ளன.
இரான் மீது இதுவரை இல்லாத கடுமையான தடைகளை அமெரிக்க விதிக்க உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறியிருப்பதற்கு இரான் வெளியுறத்துறை அமைச்சர் ஜாவத் ஜாரிப் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஃபெடரிகா மொஹெரெனியும் விமர்சித்துள்ளார். இரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார். அத்துடன், 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட இரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.