Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 24 March 2025
webdunia

அணு ஆயுதங்கள் குறித்து இரான் பொய் கூறுகிறது - இஸ்ரேல்!

Advertiesment
அணு ஆயுதங்கள் குறித்து இரான் பொய் கூறுகிறது - இஸ்ரேல்!
, செவ்வாய், 1 மே 2018 (12:17 IST)
அணு ஆயுத திட்டத்தை இரான் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளதை நிரூபிக்கும் "ரகசிய அணு கோப்புகள்" என்ற சில கோப்புகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெளியிட்டுள்ளார். 
 
அணு ஆயுதங்களை சோதனை செய்யவில்லை என்று கூறி இரான் உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளதை காட்டும் ஆயிரக்கணக்கான பக்கங்களுடைய ஆவணங்கள் இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
தன் மீதான தடைகளை நீக்குவதற்கு பிரதிபலனாக அணுத் திட்டத்தை 2015ஆம் ஆண்டு கைவிட இரான் ஒப்புக்கொண்டது. அணு சக்தியை மட்டுமே பயன்படுத்த விரும்புவதாக இரான் கூறி வந்தது.
 
"அமத் பணித்திட்டம்" என்ற குறியீட்டு பெயரோடு 2003ஆம் ஆண்டு வரை இரான் ரகசிய அணு ஆயுத திட்டத்தை நடத்தி வந்துள்ளதாக நெதன்யாஹு குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த அமத் பணித்திட்டத்தை நிறுத்திய பின்னரும் இரான் அணு ஆயுதங்கள் பற்றிய ஆய்வை ரகசியமாகவே தொடர்ந்து வந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
 
இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டு, ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் மாமன்ற கண்காணிப்பு அமைப்பால் கையாளப்பட்ட "பழைய குற்றச்சாட்டுக்களின் மறுபிறப்பு" என்று இரான் வெளியுறவு அமைச்சர் ஜாவிட் ஸரிஃப் தெரிவித்திருக்கிறார். 
 
இரானோடு செய்திருக்கும் அணு ஒப்பந்தத்தோடு இணைந்திருப்பது தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவில் பாதிப்பை ஏற்படுத்த நெதன்யாஹு செய்கின்ற குழந்தைத்தனமான நடவடிக்கை இது என்று இரான் வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
இரானின் அணு திட்டத்தை கைவிடுவது தொடர்பாக 5 உலக வல்லரசு நாடுகளும், அமெரிக்காவும் 2015ஆம் ஆண்டு இரானோடு ஒப்பந்தத்தை உருவாக்கின. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காலத்தில் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ள போவதாக மிரட்டியிருக்கும் அதிபர் டிரம்ப், நெதன்யாஹு சமர்பித்திருப்பதன் ஒரு பகுதியை அறிய வந்துள்ளதாகவும், இத்தகைய நிலைமையை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
 
நெதன்யாஹு வின் ஆவணங்களில் புதிய மற்றும் கட்டாயமாக தெரிய வேண்டிய விவரங்கள் அடங்கி இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
ஆனால், இரானோடு ஏற்படுத்தியிருக்கும் அணு ஒப்பந்தத்தை தொடரப்போவதாக ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன. 
 
இஸ்ரேல் அறிய வந்துள்ள உளவு தகவல் பற்றி ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்களிடம் பேசியுள்ளதாகவும், இது பற்றி இவ்விரு நாடுகளிடமும் விவாதிக்க பிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாகவும் நெதன்யாஹு தெரிவித்திருக்கிறார்.
 
இஸ்ரேல் பெற்றிருக்கும் உளவுத்துறை தகவல்கள் பற்றி விபரமான பகுப்பாய்வை மேற்கொள்ள போவதாக ஜெர்மனி அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் வழங்கியிருக்கும் தகவல்களில், இந்த ஒப்பந்தத்தை மாற்றிவிட கூடிய எதையும் தான் காணவில்லை என்று இரான் அணு ஒப்பந்தம் தொடர்பாக பணியாற்றிய அமெரிக்க வெளியுறவு துறையின் தடைகள் விதிப்பதற்கான முன்னாள் துணை இயக்குநர் ஜான் ஹியுக்ஸ் கூறியுள்ளார்.
 
இரானின் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதற்கு அதிபர் டிரம்ப் முடிவெடுப்பதில் செல்வாக்கு ஏற்படுத்தும் நோக்கிலான அரசியல் அறிவிப்பு இது என்று நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீசையோடு சேர்த்து மொட்டையும் அடிக்க தயாரா? சிவி சண்முகத்திற்கு பதிலடி...