Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஸா போர் நிறுத்தம்: ஐ.நா.வில் அமெரிக்கா செயலால் சீனா, சௌதி மட்டுமின்றி நட்பு நாடுகளே அதிருப்தி

Sinoj
புதன், 21 பிப்ரவரி 2024 (22:48 IST)
காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி ஐநாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
 
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலகிற்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதாகவும், தொடரும் படுகொலைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவது போல் உள்ளதாகவும் கூறியுள்ளது பெய்ஜிங்.
 
அல்ஜீரியா முன்மொழிந்த இந்த தீர்மானம் தற்போது நடந்துவரும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்தைகளுக்கு சிக்கலை விளைவிக்கும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
 
இந்நிலையில், ரஃபாவை ஆக்கிரமிக்க கூடாது என்பது போன்ற எச்சரிக்கைகளை உள்ளடக்கிய, தற்காலிக போர்நிறுத்த தீர்மானத்தை அமெரிக்காவும் முன்மொழிந்துள்ளது.
 
அமெரிக்கா அல்ஜீரியாவின் தீர்மானத்தை நிராகரித்துள்ளதை பல்வேறு நாடுகளும் கண்டித்துள்ளன. இந்த தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த 15 நாடுகளில் 13 நாடுகள் ஆதரித்திருந்தனர். பிரிட்டன் வாக்களிக்கவில்லை.
 
அமெரிக்காவின் இந்த செயல் குறித்து பேசியுள்ள ஐநாவுக்கான சீன தூதர் ஜாங் ஜுன், “இந்த தீர்மானம் தற்போது நடந்துவரும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் இடையூறு விளைவிக்கும் என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார்.
 
மேலும் “தற்போதைய கள நிலவரத்தில், உடனடி போர் நிறுத்தத்தை தொடர்ந்து தவிர்த்து வருவது, தொடர் படுகொலைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதே அன்றி, வேறேதும் இல்லை” என்கிறார் அவர்.
 
அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளே கண்டனம்
 
அதேபோல், “ இந்த மோதலின் தாக்கம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வருகிறது. இது பெரிய போருக்கான அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் எரிந்து கொண்டிருக்கும் போரின் நெருப்பை அணைப்பதன் மூலம் மட்டுமே, அந்த பிராந்தியம் முழுவதும் போரின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்க முடியும் ” அவர் தெரிவித்துள்ளார்.
 
அல்ஜீரியாவின் உயர்மட்ட ஐ.நாவுக்கான ராஜதந்திரியான அமர் பெண்ட்ஜாமா "பாதுகாப்பு கவுன்சில் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் தோல்வியடைந்து விட்டது " என்று தெரிவித்துள்ளார். "உங்கள் மனசாட்சியை சோதித்து பாருங்கள், வரலாறு உங்களுக்கு தீர்ப்பு வழங்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அமெரிக்காவின் நட்பு நாடுகளும் அதன் செயலை விமர்சனம் செய்துள்ளன. ஐநாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதர் நிக்கோலஸ் டி ரிவியர் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாததற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
 
ஐநாவுக்கான அமெரிக்க தூதரான லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், "ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும் சூழலில் உடனடி போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர இது சரியான நேரமல்ல" என்று கூறினார்.
 
பிரிட்டனின் ஐநா தூதுவரான பார்பரா உட்வார்ட், “இந்த தீர்மானத்தால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவே, ஆனால் தற்போதைய பேச்சுவார்த்தைகளை அது ஆபத்தில் தள்ளும்” என்று கூறியுள்ளார்.
 
வீட்டோவை அமல்படுத்தும் அமெரிக்காவின் முடிவு குறித்து சௌதி அரேபியா வருத்தம் தெரிவித்துள்ளது.
 
சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோவை பயன்படுத்தி ரத்து செய்திருப்பதைக் கண்டு நாங்கள் வருந்துகிறோம்.
 
இன்று பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை, அதன் மூலம் அதன் பொறுப்புகளை நிறைவேற்றவும், இரட்டைத் தரம் இல்லாமல் உலக அமைதியைப் பேணவும் முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது.
 
'தற்காலிக போர்நிறுத்தத்திற்கு' முறையீடு செய்த தனது சொந்த தீர்மானத்தை கொண்டு வந்த பிறகு அமெரிக்கா இந்த வீட்டோவைச் செய்தது.
 
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 240 பேர் பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர்.
 
அதனை தொடர்ந்து இஸ்ரேல் தனது எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின்படி, இதில் காஸாவில் 29,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 
தற்போது அமெரிக்கா முன்மொழிந்துள்ள வரைவு தீர்மானத்தின்படி, பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், காஸாவுக்கு செல்லும் மனிதநேய உதவிகளை தடையில்லாமல் அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனைகளோடு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தற்காலிக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்பு காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்பான ஐ.நா வாக்கெடுப்புகளின் போது "போர் நிறுத்தம்" என்ற வார்த்தையை வெள்ளை மாளிகை தவிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இதில், "ரஃபா மீதான நடவடிக்கை மேலும் அதிகமான அப்பாவி மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறும். அவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயரவும் வழிவகுக்கும்" என்று எகிப்தை அர்த்தப்படுத்தி அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த தீர்மானத்தின் மீது பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பு நடத்துமா அல்லது எப்போது நடத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
ஆனால் செவ்வாய்க் கிழமை பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, “தங்களது இலக்கை அடையும் வரை போர் தொடரும்” என்றும் எந்த அழுத்தத்தாலும் இந்த முடிவை மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
காஸாவின் மக்கள் தொகையில் பாதி பேர் தற்போது ரஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். எகிப்தின் எல்லை பகுதியில் உள்ள இந்த நகரத்தில் போருக்கு முன் வெறும் 250,000 மக்களே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
ரஃபாவில் இஸ்ரேல் நடவடிக்கையில் இறங்கினால் அது படுகொலைக்கே வழிவகுக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது
 
ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் என்ன ஆகும்?
இடம்பெயர்ந்துள்ள மக்களில் பலரும் கூடாரங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் மோசமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு சுத்தமான தண்ணீர் அல்லது உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.
 
இந்நிலையில் ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது படுகொலைக்கே வழிவகுக்கும் என்று ஐநா சபை எச்சரித்தது. ஆனால், தாங்கள் ஹமாஸ் இயக்கத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்குவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
 
மார்ச் 10ஆம் தேதிக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லையெனில், ரஃபாவில் தரைவழித் தாக்குதல் தொடங்கப்படும் என்று இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினரான பென்னி காண்ட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments