கேள்வி: மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகள் மிகவும் பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 16ஆம் தேதி துவங்கும் தேர்தல் மே 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 16ஆம் தேதியே அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில் தேர்தலும், தேர்தலின் முடிவும் எப்படி இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்: இது 15வது மக்களவைத் தேர்தல் மிகவும் எதிர்மறையான முடிவுகளையே விடுக்கும். தேர்தல் நடக்கும் தேதிகள் எல்லாம் படுமோசமாக உள்ளன. அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி துவங்குகிறது. துவங்குவதும் பூராட நட்சத்திரத்தில்தான், முடிவதும், அதாவது மே 13ஆம் தேதி பூராட நட்சத்திரத்தில்தான். பொதுவாகவே பூராட நட்சத்திரம் என்றோல் போராடும் நட்சத்திரம் என்று சொல்வார்கள். போராட்டத்திற்குரிய நட்சத்திரம், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று சொல்வது போல், போட்டிகள் அதிகமாக இருக்கும். தான்றோன்றித்தனம், போட்டி வேட்பாளர்கள், மாறுபட்ட பேச்சுகள், இருக்கின்ற அணிக்கு வாக்காளிக்காமல் மற்றொரு அணிக்கு வாக்களிப்பது போன்ற குறுகிய மனப்பான்மைக்குரிய நடவடிக்கைகளை உருவாக்கும் காலகட்டம் இது.தலைவர்களுக்குள் மோதல் அதிகமாக இருக்கும். பணத்துக்கு அடிமையாகுதல், குடும்ப உயர்வுக்காக கொள்கைகளை விட்டுக் கொடுத்தல் போன்றவையும், பூராட நட்சத்திரம் மற்றும் கிரக அமைப்புகள் அதாவது சிம்மச் சனி, மகரத்தில் குரு நீச்சமாகியிருப்பதாலும் இதுபோன்ற தன்மை இந்தியாவில் உருவாகும்.இந்தியாவின் மாநிலக் கட்சிகள் வலுவடையும். தேசியக் கட்சிகள் வலு இழக்கும். சனியும், குருவும்தான் தேசியக் கட்சிகளின் கிரகம், சனி பகை வீட்டில் உட்கார்ந்திருக்கிறது, குரு நீச்சமாகி மற்றொரு பாவ கிரகமான நீச ராகுவுடன் சேர்ந்து நீச்ச சனியோட வீட்டில் உட்கார்ந்திருக்கிறது.எனவே ஒட்டு மொத்தமாக பார்க்கப்போனால் எந்தவொரு கட்சிக்கும் நாட்டு நிலைமை குறித்த எண்ணமோ, பெரிய நலத் திட்டங்களோ இருக்காது. தேர்தல் அறிக்கையில் பார்க்கப்போனால், செய்ய முடியாது என்று தெரிந்தும் அதனை வாக்குறுதியாக கொடுக்கும் அளவிற்கு இருக்கும். தனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் தேர்தல் துவங்கி அதே தனுசு ராசி பூராட நட்சத்திரத்தில்தான் முடிகிறது. தனுசு வில் - அம்பு. போர்க் கருவி. அதனால் இந்த தேர்தல் ஒரு போரை மையமாக வைத்த பிரச்சாரமாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஈழப் போரை மையமாக வைத்து பிரச்சாரம் அமையும். மற்ற இடங்களில் மும்பையில் நடந்த தாக்குதல் அதுவும் மக்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய போர் போன்றதுதான். அந்த தாக்குதல் பிரச்சாரத்தில் இடம்பெறும். வாக்குப்பதிவு இதுபோன்ற நாட்களில் நடப்பதால் இந்த போர் விஷயம் அதிகமாக இருக்கும். மேலும் தனுசு குரு பகவானின் ராசி. குரு ஒருமைப்பாட்டு கிரகம். தேசிய நலம், தியாகிளுடன் தொடர்புடைய கிரகம் குரு. எனவே இந்த பிரச்சாரத்தின் போது சுதந்திர போராட்ட தியாகிகளைப் பயன்படுத்தப் பார்ப்பார்கள். இன்னொரு பக்கம் சுக்ரன் தேர்தல் நேரத்தில் உச்சமாக இருப்பதால் நடிகர், நடிகைகள் பிரச்சாரத்தில் அதிகமாக ஈடுபடுவார்கள்.
செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து இருக்கும் சமயத்தில் தேர்தல் நடப்பதால் மக்களை பலவீனப்படுத்தி அவர்களின் ஓட்டுக்களைப் பெற அரசியல்வாதிகள் முயற்சி செய்வார்கள்.
காமம், பானம், பணம் போன்றவற்றை கொடுத்து வாக்குப் பெற முயற்சிப்பார்கள். இதெல்லாம் எப்போதும் இருப்பதுதான், ஆனால் இந்த ஆண்டு சற்று அதிகமாக இருக்கும். ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் துவங்குகிறது. ஏப்ரல் 30 வரை குரு பகவான் நீச்சமாக இருக்கிறார். அப்போது தேர்தல் நடக்கிறது. மே 1ஆம் தேதி குரு பகவான் உக்கிரமாகிறார். அந்த ராஜ கிரகம் மாற்றம்தான் நல்ல திருப்பம். ராஜ கிரக மாற்றம் ஒரு நல்ல பலனைத் தரும்.
மே 1ஆம் தேதி குரு மாற்றம் சிறப்பாக இருப்பதாகவும் சொல்ல முடியவில்லை. மகரத்தில் இருந்து கும்பத்துக்கு போகிறார். அங்கு சனியின் பார்வையில் இருக்கப் போகிறார் குரு. அதில் இருந்து நடக்கும் தேர்வுகளின் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும். மே 1ஆம் தேதிக்கு முன்னர் நடக்கும் தேர்தல் முடிவுகளும், பின்னர் நடக்கும் தேர்தல் முடிவுகளும் வேறு மாதிரியாக இருக்கும்.
இதில் 3வது அணி முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் முக்கியமான கிரகங்கள் எல்லாம் சனியின் ஆதிக்கத்தில் வருவதால் குறிப்பாக குரு சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் கீழுள்ளவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள். பெரும்பான்மை பெற்றவர்கள் வெளியில் இருப்பது போன்ற நிலை உருவாகும்.
நிலையற்ற ஆட்சி உருவாகும் சூழ்நிலையும் ஏற்படும்.
மேஷ லக்னத்தில் தேர்தல் துவங்குகிறது. மேஷ லக்னத்திற்கு 10இல் குரு, ராகு இருப்பதால், 10வது இடம் உத்தியோக ஸ்தானம். எனவே வேலையில்லா திண்டாட்டத்தையும் முக்கிய எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் பயன்படுத்துவர். தேசப் பாதுகாப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, விவசாயிகளுக்கு விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் போன்ற விஷயங்கள் முக்கிய இடம்பெறும்.
தேர்தல் முடிவு என்று பார்க்கும்போது, தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் திருவோணம் நட்சத்திரத்தில் வருகிறது. அந்த திருவோண நட்சத்திரம் மகர ராசியில்தான் தற்போது அஷ்டமத்து சனி நடக்கிறது. அஷ்டமத்து சனியில் தேர்தல் முடிவுகள் வெளி வருவதால் தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு நிலையற்ற நிலையை ஏற்படுத்தும். இதைப் பார்க்கும்போது வட இந்தியாவில் இருந்து ஒருவர் தலைமைப் பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளது. சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் தலித் சமூகத்தைச் சேர்ந்த, பெரிய அரசியல் பின்னணி இல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்பேற்கும் வாய்ப்பும் இருப்பதாக தெரிகிறது.
--
தமிழகத்திற்கு மே 13ஆம் தேதி தேர்தல். வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
தேர்தல் நடக்கும் தேதியை வைத்துப் பார்க்கும்போது இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும். 13ஆம் தேதி நடக்கிறது. அன்று பூராடம் நட்சத்திரம். அன்றைய தினம் தற்போது ஆளுபவருக்கு அதாவது முதல்வருக்கு ரிஷப ராசி என்பதால் அன்று சந்திராஷ்டமமாக இருக்கிறது.
அதை வைத்துப் பார்க்கும் போது ஆளும் கட்சி பலவீனப்பட்டு எதிர்க்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. முன்பு போல 40க்கு 40 என்ற சாத்தியக் கூறுகள் இல்லை.