சசிகலாவின் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து செயல்பட துவங்கியுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து பிரிந்து மற்றோரு அணியை உருவாக்கிய ஓ.பி.எஸ், சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அவர்களிடமிருந்து ராஜினாமா கடிதத்தை பெற வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம். ஆனால், ராஜினிமா கடிதமெல்லாம் வாங்க முடியாது என எடப்பாடி அணி கை விரித்து விட்டது. இதனால், இரு அணிகளுக்கும் இடையே இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியில் உள்ள சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி விவாதித்ததாக தெரிகிறது. மேலும், சசிகலாவை ஆதரிக்கும் 7 எம்.எல்.ஏக்கள், அவரை சிறையில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது, அவர்களிடம் சசிகலா சில அசைன்மெட்டுகளை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஏற்கனவே, எட்டு எம்.எல்.ஏக்கள், முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள்கூட்டத்தை கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையை ஏற்று, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க எடப்பாடி தரப்பு சம்மதம் தெரிவித்தால், அதிமுகவில் மேலும் ஒரு புதிய அணி உருவாகும் என சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் எச்சரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.