அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேர் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டது. இதில், சசிகலாவும், தினகரனும் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணையும் சூழல் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரணை என ஓ.பி.எஸ் அணி கறார் காட்ட, இதுவெல்லாம் முடியாது என எடப்பாடி அணி கை விரித்து விட்டது.
ஆனால், சசிகலா குடும்பத்தினைரை கட்சி நடவடிக்கையிலிருந்து விலக்கி வைக்க எடப்பாடி அணியினர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், அனைவரிடமிருந்தும் ராஜினாமா கடிதத்தை பெறவேண்டும் என ஓ.பி.எஸ் அணி கேட்க, அதற்கு எடப்பாடி தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே, இரு அணியும் இணைவது சாத்தியமில்லாத சூழல் ஏற்பட்டது.
இதில், சசிகலா ஆதரவுள்ள சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு, கட்சி பணிகளிலிருந்து தினகரன் மற்றும் சசிகலாவை விலக்கி வைப்பதில் விருப்பம் இல்லை. அதில் ஏழு எம்.எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடம் சில அசைன்மெண்டுகளை சசிகலா கொடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே, அவர்கள் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.
ஏற்கனவே எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், தோப்பு வெங்கடாச்சலம், செந்தில் பாலாஜி ஆகியோர் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சமீபத்தில் ரகசிய கூட்டம் போட்டு விவாதித்தனர். தற்போது அதில் சிலர் சசிகலாவையும் சந்தித்து விட்டு திரும்பினர். இன்று முதல்வரை சந்திது பேசிவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ “சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து விலக்கி வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை” என கூறியுள்ளார்.
இதற்கிடையே எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பல எம்.எல்.ஏக்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி கூட்டப்படும் எனில், அதில் பல களோபரம் வெடிக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை, சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதில் எடப்பாடி அணி உறுதியாக இருந்தால், அதிமுகவில் சசிகலாவிற்கு ஆதரவாக மற்றொரு அணி உருவாகும் எனத் தெரிகிறது.