உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு காலமானார்.
அவரின் மறைவையடுத்து அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. கட்சியை வலி நடத்த அந்த பதவியை நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் அதிமுக உள்ளது.
இந்நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறலாம் எனவும், அப்போது பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா முன் மொழியப்படலாம் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிமுக செயற்குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் 38 பேர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 270 பேர் உள்ளனர். அதேபோல் பொதுக்குழுவில் 3 ஆயிரத்து 300 பேர் வரை உள்ளனர். அவர்கள் அனைவரும் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், பொதுச்செயலாளர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
ஜெயலலிதா மரணமடைந்த இந்த இக்கட்டான சூழலில், கட்சியை வழி நடத்த பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா முன் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.