மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விஜயகாந்தும், ஜி.கே.வாசனும் விலகுவதாக வெளியான செய்தி பற்றி கருத்து கூறிய வைகோ, அவர்கள் போனால் போகட்டும், யார் அவர்களை இனிமேல் சேர்த்துக் கொள்வார்கள் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கு முன் மக்கள் நலக் கூட்டணி என்ற அணியை உருவாக்கினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இருந்தன. தேர்தலின் போது தேமுதிகவும், தமிழ் மாநில காங்கிரசும் ம.ந.கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது.
ஆனால், தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி. இதனால் விஜயகாந்த், திருமாவளவன், ஜி.கே. வாசன் ஆகியோர் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக, மதிமுக நிர்வாகிகள் உயர்நிலை செயல்திட்டக் கூட்டம் நேற்று தாயகத்தில் நடைபெற்றது.
அப்போது மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலை சந்தித்ததால் ஏற்பட்ட விளைவுகள், வருகிற உள்ளாட்சி தேர்தலில் எப்படி பணியாற்றுவது மற்றும் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அப்போது கருத்து தெரிவித்த வைகோ “ ஒவ்வொரு கால கட்டத்திலும், கட்சியில் சிலர் இணைவார்கள், சிலர் வெளியேறுவார்கள். அதைபற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. திமுக. அதிமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. அது என்றும் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறாது.
விஜயகாந்தும், ஜி.கே.வாசனும் எங்கள் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்றுதன் விரும்புகிறோம். ஆனால் நம் எண்ணப்படி அவர்கள் இல்லை. அப்படி போக விரும்பினால் போகட்டும். அவர்களை இனி எந்த கட்சியும் சேர்த்துக் கொள்ளாது. அவர்கள் நம் அணியில் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தார்கள்” என்று பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வைகோவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வருகிற உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக் கூட்டணியில் இருந்த அணிகள் ஒன்று சேர்ந்து சந்திக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.